Tuesday, 31 December 2013

நாட்டு பசுக்கள்


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்..

இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது.



ஈரோடு சாவடிபாளையத்தில் உள்ள கோசாலையில்..
பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..




என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) 
 கீகரை மாடு (மழகொங்கு மாடு)-நாட்டு மாட்டு வகைகளிலேயே அதிகம் பால் தரக்கூடிய தமிழ்நாட்டு பசு.. எங்க ஊருக்கு புது வரவு... நாட்டு மாட்டு பலன்களை சொல்லியதன் விளைவு, எங்க ஊர் மாட்டு பட்டியில் போன வாரத்தில் மட்டும் இரண்டு நாட்டு மாடுகள் வந்து சேர்ந்துள்ளன. இது இன்னும் வளரும்!


ஈரோடு தம்பிரான் மெடிக்கல்ஸ்இல் நாட்டு மாட்டு பால் விற்கிறார்கள்.. கடையில் நாட்டு மாடு/கலப்பின பன்றிகளின் பாலில் உள்ள நன்மை தீமை பற்றிய தகவல்..

இன்று இயல் வாகை நாற்று பண்ணை சென்றிருந்தேன். அங்கு உள்ள குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மிக அருமை. விட்டு பிரியவே மனமில்லை.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல இன்று நாற்று பண்ணையில் உள்ள மகாலக்ஷ்மி க்கு (நாட்டு மாட்டிற்கு பொருத்தமான பெயர்) கோ-பூஜை நடந்தது. கோல்ந்தைகளோடு அனைவரும் கோ-பூஜையில் கலந்து கொண்டோம். மனதிற்கு நிறைவாக இருந்தது.
 


எங்கள் ஊருக்கு அருகில்.. என்ன வகை மாடு என்று அறிய வேண்டும்..


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) செல்லும் வழியில்..


திருவகழிமங்களம் எனப்படும் இன்றைய கொக்கராயன்பேட்டையில் யாரோ கோதானம் கொடுத்துள்ளார்கள். விவரம் அறிந்தவர் என்று எண்ணுகிறேன். அறியாமையால் யாரோ ஒருவர் சிந்து பன்றியையும் கொடுத்துள்ளார் (பின்னால் நிற்கிறது. அதன் பாலை இறைவனுக்கு பயன்படுத்துவது தவறு)

கொங்க மாடுகளில் இது திருசெங்கோட்டு மாடு (கீகரை மாடு) வகையை சேர்ந்தது. குட்டை கால்கள் தட்டை முதுகு, விரிந்த கொம்புகள்.. தமிழ்நாட்டிலேயே அதிக பால் தர கூடிய நாட்டு மாட்டு வகை இது.. வேளைக்கு மூன்று லிட்டர்.. மோர்பாளையம் சந்தை மற்றும் காளிப்பட்டி சந்தையில் கிடைக்கும்..

பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

காளிங்கராயர் பிறந்த கனகபுரம் அருகே..

அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

இந்த சிற்பம் சென்னிமலையாண்டவர் கோவில் படிக்கட்டு மண்டபத்தில் எடுத்தது..


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) செல்லும் வழியில்..


 ஈரோடு மாநகரில்



ஈரோடு மாநகரில்.. பஸ் ஸ்டாண்ட் அருகில்.. நாட்டு பசுக்களின் அருமை அறிந்தவர்..


எங்கள் பகுதியில் உள்ள ஒரே ஒரு பூச்சி காளை இதுதான்... அரிதாகி வரும் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் காளைமாடு.. (மழகொங்க மாடு).. 

இதன் உரிமையாளர் இதனை பக்ரீத் பண்டிகைக்கு வெட்டுக்கு கொடுக்கப்போகிறார்.. அதற்குள் இதை மீட்டு விட வேண்டும்.. எங்கள் ஊரில் பலர் புதிதாக மழகொங்க மாடு வாங்கியுள்ளார்கள். அவர்களுக்கு பயன்படும்.

குறிப்பு: தமிழக இனங்களிலேயே அதிக பால் தரும் நாட்டு பசு வகை (வேளைக்கு மூன்று லிட்டர் வரை கறக்கும் இனம்)

சிகரெட் மறந்த சீக்ரெட் - பாலகுமாரன்

இன்று - மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு நாள். இதையொட்டி, டாக்டர் விகடன் இதழில் இருந்து ஒரு பகிர்வு...

'சிகரெட் மறந்த கதை!' - சீக்ரெட் உடைக்கிறார் பாலகுமாரன்

''முதன்முதலில் நான் நிகோடினை ருசிக்க ஆரம்பித்ததன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. படித்துக்கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில் சரியான பயந்தாங்கொள்ளி நான். அதனாலேயே சிகரெட் பிடித்தால், 'நான் பெரியவன்; என்னை யாரும் அசைக்க முடியாது’ என்கிற தப்பான மனோபாவம் என்னுள் வளர்ந்தது. அதற்குக் காரணம் வில்லன் நடிகர் மனோகர். அந்தக் கால சினிமாக்களில், சிகரெட் புகையை அலட்சியமாய் வழியவிட்டபடி தெனாவட்டாக வில்லத்தனம் காட்டுவார். அதில் ஒரு 'கெத்’ இருக்கும். அவரைப் போல் பள்ளிப் பருவத்திலேயே சாக்பீஸ் துண்டுகளை உதட்டில் கவ்வி சிகரெட் புகைக்கும் பாவனைகளைச் செய்துபார்ப்பேன். ஒருமுறை என்.சி.சி. முகாமுக்காக புழல் ஏரி சென்றபோதுதான், முதன்முதலாக சிகரெட் புகைத்தேன். அப்போது எனக்கு 19 வயது.

படிப்பு முடிந்து 21 வயதில், வேலைக்குச் சேர்ந்த (டாஃபே டிராக்டர் கம்பெனி) இடத்திலும்கூட இருக்கையில் உட்கார்ந்தே சிகரெட் பிடிக்கிற அளவுக்கு சுதந்திரம் இருந்தது. மதிய உணவு வேளையிலும்கூட சிகரெட் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆற அமர உட்கார்ந்து சிகரெட் புகைத்திருக்கிறேன். இதற்கிடையில், காதல் வயப்பட்டு தோல்வியும் அடைந்தேன். எல்லோரும் சொல்வதுபோல புண்பட்ட நெஞ்சை கொஞ்சம் அதிகமாகவே புகைவிட்டு ஆற்றத் தொடங்கினேன். ஒரு நாளில், மூன்று நான்கு சிகரெட்களில் ஆரம்பித்த பழக்கம் பாக்கெட், இரண்டு பாக்கெட்... என்று அதிகரித்து ஒரு நாளில் 120 சிகரெட்களை ஊதித் தள்ளும் நிலைக்கு ஆளானேன். இதற்காகவே கடைகளில், மொத்தமாக சிகரெட்களை வாங்கிவந்து வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டேன்'' - கதைபோல விரிகிறது பாலகுமாரனின் சிகரெட் சிநேகம்.

''கல்யாணம் முடிந்த சமயத்தில், நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத்தாளர்களுக்கு ஆறாவது விரல் பேனா என்பார்கள். எனக்கு வலது கையில் ஆறாவது விரல் பேனா என்றால், இடது கையில் சிகரெட்! வீட்டில் என்னைக் கண்டித்துப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். எழுத உட்கார்ந்து தொடர்ச்சியாக நான் பிடிக்கும் சிகரெட் புகை வீடு முழுவதும் வியாபித்திருக்கும். எங்கேயாவது வெளியூர் போனால்கூட குறைந்தது ஐந்து நாட்களுக்காவது நான் விட்டுச்சென்ற சிகரெட் புகை வாசம் வீட்டில் வீசிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு என் உடல் நலத்தை மட்டும் அல்லாது என் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் சேர்த்து கெடுத்து வைத்திருந்தேன்.

'இனி சிகரெட் புகைக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சபதம் எடுத்துக்கொள்பவர்களைப் போல, 'புகைக்க மாட்டேன்’ என்று உறுதி எடுப்பது, அடுத்த சில மணி நேரத்திலேயே உறுதியை உடைத்து ஊதித் தள்ளுவது என்பது எனக்கும் பழக்கமாகிப்போனது.

அவ்வப்போது மொத்தமாகக் கிடைக்கும் பணத்தில், மகள் திருமணத்திற்காக ஒவ்வொரு தங்கக் காசாக வாங்கிவந்து மர டப்பா ஒன்றில் சேமித்துவருவது எங்கள் குடும்பப் பழக்கம். 1992-ல் என் மகள் பள்ளி இறுதி வகுப்பு படித்த சமயம் அந்த மர டப்பாவில் உள்ள காசுகளை எண்ணிப் பார்த்தபோதுதான் எனக்குள்ளே ஓர் எண்ணம்... 'தினமும் நாம் சிகரெட்டுக்கு செலவழிக்கும் பணத்தை தங்கக் காசுகளாகச் சேர்த்துவைத்திருந்தால் மரப்பெட்டியையும் நிரப்பி, சொந்தமாக வீடும் கட்டியிருக்கலாமே!’ ஒரு கட்டத்தில் அதுவே குற்ற உணர்வானது.

என் குருநாதர் திருவண்ணாமலை மஹான் யோகி ராம்சுரத்குமார் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். அவரும் செயின் ஸ்மோக்கர். அவரிடம் இப்பழக்கம் போக வேண்டும் என்று கேட்டபோது, 'தானாகப் போகும்’ என்றார். இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு இரவு மூடிய கடை வாசலில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும்போது 'இந்த பாக்கெட்தான் கடைசி, இனி சிகரெட் இல்லை’ என்று திரும்பத் திரும்ப உள்ளே சொல்லியபடி புகைத்தேன்.

காலையில் எழுந்தேன். நிகோடின் தேவையை மூளை உணர்த்த... விரல்களும், உதடுகளும் சிகரெட்டுக்காகத் துடிக்க ஆரம்பித்தன. கட்டுப்படுத்திக்கொண்டேன். சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தியவாறே அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினேன். மதிய வேளையும் வந்துவிட்டது. 'அரை நாள் முழுவதும் நான் புகைக்காமல் இருந்துவிட்டேனா?!’ என்று எனக்கே ஆச்சர்யம். அந்த ஆச்சர்யமே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையாக வேரூன்றியது. அடுத்தடுத்த நாட்களிலும் அந்த நம்பிக்கையே என்னை வழிநடத்தியது. வாரம், மாதங்கள், வருடங்கள் கடந்து இன்றுவரை நான் சிகரெட்டைச் சீண்டவே இல்லை! இது எல்லாம் என் குருநாதர் யோகி ராம் சுரத்குமார் ஆசிர்வாதம்!

ஆனாலும், செய்த பாவத்துக்கு தண்டனை பெறத்தானே வேண்டும்? செயின் ஸ்மோக்கராக நான் சிகரெட் பிடித்திருந்ததில், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதய ரத்த ஓட்டம் தடைபட்டது. பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு சீரானேன். மறுபடியும் ரத்தக் குழாயினுள் அடைப்பு... இரண்டாவது பை-பாஸ் சிகிச்சை. உடம்பு முழுக்க ஊசிகள் தைத்துவைத்திருந்ததில், நரக வேதனை!

'பை-பாஸ் சிகிச்சை எளிதாகிவிட்டது’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள், உண்மை; அவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. ஆனால், அதன் பின்னர் காலமெல்லாம் பாதிப்புகளை நோயாளிகள் சுமந்துகொண்டு தானே இருக்க வேண்டி இருக்கிறது?

இப்போதெல்லாம் சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால், ஒதுங்கிப் போய்விடுகிறேன். தெரிந்தவர்கள் என்றால், 'தயவுசெய்து புகைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் சொல்வதற்காக அல்ல; சிகரெட் புகைத்து ஆஸ்பத்திரி, இருமல், ஆபரேஷன் என நரக அவஸ்தைக்கு ஆளாவதை நேரில் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்!’ என உரிமையோடு சொல்கிறேன்!'' - படிப்பவர்கள் அனைவருமே பாலகுமாரனுக்குத் தெரிந்தவர்கள்தானே!

- த.கதிரவன்

தமிழ்நாட்டின் (சீமை)சாராய சாம்ராஜ்யம்


போதை பழக்கத்தை நியாயபடுத்த/சகஜபடுத்த வேண்டாமே.. அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. குடி என்பது சூழ்நிலையால் அமையும் சாபம்.. அதனை நாகரீகத்தின் அடையாளமாக மாற்றியிருப்பது அரசு/கார்ப்பரேட் உலகின் தந்திரம். பெண்களும் தங்கள் சமஉரிமையை நிலைநாட்ட/வெளிக்காட்ட புட்டியை பிடிப்பது கொடுமையிலும் கொடுமை..

திரைப்படங்களும் தமது பங்குக்கு மதுப்பழக்கத்தை ஹீரோயிசம்/வீரம்/ஸ்டைல் என்பது போன்று சித்தரிக்கின்றன.மதுபோதை பழக்கத்தை வெளியில் சொல்ல ஒவ்வொருவனும் வெட்கபடும சூழல் உருவாக வேண்டும்.

*13 வயதில் மதுப்பழக்கம் - குற்ற துணிவு
*போதையில் கொலை/கற்பழிப்பு
*குடிக்க பணம் மறுத்ததால் வெட்டு/வழிப்பறி
*கிட்னி/லிவர்/மூளை கோளாறுகள்-ஆன/பெண் மலட்டுத்தன்மை-அதனால் விவாகரத்துக்கள்.
*போட்டிபோட்டு குடித்து மரணம்
இவை தற்காலத்தில் அதிகம் செய்திகளில் தெரிபவை.

டாஸ்மாக் எனும் சாபக்கேடு தமிழகத்தில் வர மூலகாரணமாக இருந்த அன்றைய நிதியமைச்சர் சி.பொன்னயன் மற்றும் அதை தொடர்ந்து பற்றிக்கொண்ட அரசுகளின் சமூக பொறுப்பிற்கு பாராட்டுக்கள்..!

(டீலக்ஸ் கடைகள் வைத்து வெளிநாட்டு மது விற்பனைக்கும் வந்துவிட்ட அரசு - உடலை கெடுக்காத/உழவரை காக்கும் உள்நாட்டு இயற்கை கள்ளுக்கு இன்னும் தடை போட்டுதான் உள்ளது!!)



இந்திய பால் (கலப்பட) புரட்சி



இந்திய பால் (கலப்பட) புரட்சி
------------------------------------------
பச்சை குழந்தை முதல் சாகபோகும் கிழவியின் கடைசி உணவு வரை அத்தியாவசிய உணவு பால்..

சில காலமாக டெல்லி மும்பை போன்ற பெருநகரங்களில் இருந்த பால் கலப்படம் இன்று ஈரோடு வரை மலிந்துவிட்டது. ஈரோடு பெயருக்குத்தான் மாநகராட்சி என்றாலும் எந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்தாலும் அருகிலேயே கிராமம்தான் என்பது தெரியும். ஈரோட்டை ஏன் பெரியதாக சொல்கிறேன் என்றால் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம்,மாவட்டம்,மாநிலம், வெளிநாடு என்று இம்மாவட்டத்தின் பால் பொருட்கள் செல்கின்றன. நேற்று ஈரோட்டில் இருந்து பெங்களூரு சென்ற 5 டன் கலப்பட பாலை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரணமான பால் பண்ணையாளர் ஏற்கனவே கலப்பட குற்றத்திற்கு ஆளானவர்.

பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா..?? விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா (யூரிக் அமிலம்/நாப்தா/அம்மோனியா/சயனைடு பார்முலேசன்), சோடா உப்பு, சலவை சோப்பு தூள் முதலியவை. இப்போதுள்ள மாடுகளே (ஹைபிரிட் என்று) மரபணு மாற்றப்பட்டு நோய் கூறுகள் உள்ள பாலை கொடுக்கும் நிலையில் இது வேறு.

இன்று பெருநகரங்களில் வரும் பால் பொருட்களில் 70% கலப்பட பால்தான் என்பதை உணவு கலப்பட தணிக்கை துறையே சொல்கிறது. இனி தமிழக மாவட்டங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.

சீனாவில் 2008ல் பால் கலப்படத்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட 3 லட்சம் மக்கள் பாதிக்கபட்டனர். பலர் உயிர் இழந்தனர். சீன அரசு குற்றவாளிகளை தூக்கில் போட்டது. இந்தியாவிலும் அத்தனை உயிர்களை காவு சீக்கிரம் காவு கொடுப்போம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் அதிகாரிகள்/மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தால் நலம்.

செய்தி:
http://articles.timesofindia.indiatimes.com/2012-01-10/india/30611460_1_samples-milk-powder-central-food-laboratory

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=483850

http://ibnlive.in.com/news/over-68-pc-milk-adulterated-contains-detergent/219719-17.html

http://www.thinaboomi.com/2012/01/10/9699.html

http://www.vikatan.com/article.php?mid=2&sid=489&aid=17967#cmt241

http://ibnlive.in.com/news/hybrids-are-no-match-for-desi-cows/243692-60-121.html

உன்னதம் என்பதன் பொருள்


ஆறுகளை இணைத்த ஈரோட்டு மன்னரின் கதை - இவர் வரலாற்றை படித்தபோது இப்படியும் ஜமீன்கள் இருந்தார்களா என்றே தோன்றியது. உன்னதம் என்ற சொல்லின் அடையாளம். மஞ்சள் மாநகர ஈரோடுமுற்காலத்தில் வறண்ட பூமியாக இருந்தது. பவானியும் காவேரியும் பாய்ந்தும் இந்நிலை. இதனை மாற்றியவர், காளிங்கராயர்.

ஈரோடு-வெள்ளோடு கனகபுரத்தில் விவசாயியின் மகனாக பிறந்தார். பாண்டியர் படையில் சாதாரண வீரனாக சேர்ந்து தன் அறிவு,வீரத்தால் முதன்மை அமைச்சர் பதவிக்கு வந்து, பின் வீரபாண்டிய மன்னனால் காளிங்கராயன் பட்டம் சூட்டப்பட்டு ஈரோட்டு ஜமீனானார்.
மேட்டுபகுதியாக இருந்ததால் காவேரியில் இருந்து அக்காலத்தில் நீரை ஈரோட்டுக்கு கொண்டு வர இயலவில்லை. எனவே, பவானியை காவேரியில் கலக்கும் முன்பு பிரித்து கொண்டுவந்து மீண்டும் நொய்யல் ஆறு மூலம் காவிரியில் கலக்க வைத்தார். இதனை செயல்படுத்த சந்தித்த இடர்கள் ஏராளம். கல் கொண்டுவந்ததில் இருந்து கரை கட்டியதுவரை, கடைசியில் மதகு அமைத்தது, பின் கற்கள பிரிக்கும் பகுதி என அனைத்திலும் வெற்றிகண்டார். தற்பொழுதுள்ள பொறியாளர்களுக்கும் இது ஒரு நல்ல பாடம். சுமார் 33 அடி இறக்கமானதால் வெள்ளபெருக்கால் கரைகள் உடைந்தது, அதை சமாளிக்க பாம்பை போல வளைத்து கொண்டு சென்றார். இதனால் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் பலனடைந்தது.

கால்வாய் நீளம்:90 கிமீ; கால்வாய் இறக்கம்:10 மீ; நேரடி பாசனம்:சுமார் 16,000 ஏக்கர்; மறைமுக பாசனம்:சுமார் 20,000 ஏக்கர். இத்தனையும் வெறும் 12 (1271-1283)ஆண்டுகளுக்குள் முடித்து காட்டினார்!!

இவ்வளவு சிரமப்பட்டு வெற்றிகண்ட அவர் உறவினர்களே, “காளிங்கராயன் அவன் ஜமீன் நிலங்களுக்காக வாய்க்கால் வெட்டிகொண்டான்” என்று சொன்ன சொல்லை தாங்காது “நானும் எனது வாரிசுகளும் இந்த கால்வாய் நீரை தொட கூட மாட்டோம்” என்று கூறிவிட்டு பொள்ளாச்சி சென்று ஊத்துக்குளியில் தங்கிவிட்டார்!

அங்கும் அவர் ஜமீனாகிவிட்டார். இன்றும் அவர் ஜமீன், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ளது. அவ்வை சொன்னது போல,

“சீரியர் கேட்டாலும் சீரியரே சீரல்லர் கெட்டால்; பொற்குடம் உடைந்தால் பொன்னாகும்-என்னாகும் மண்குடம் உடைந்தக்கால்”

(இந்த சம்பவம் நடந்திராவிட்டால் அமராவதியையும் இதே இணைப்பின் கீழ கொண்டு வந்திருப்பார், ஒரு வரலாற்று பிழை!)

உடல்பலம், மூளைபலம், பொதுநலம் மூன்றும் ஒருங்கே (!) இருந்த இவரை – “உன்னதம்” என்ற சொல்லின் வாழ்வியல் அடையாளமாக இவரை சொல்லலாம் அல்லவா..??

http://www.hindu.com/2007/01/17/stories/2007011700470300.htm
http://ta.wikipedia.org/wiki/காளிங்கராயன்
http://ta.wikipedia.org/wiki/காளிங்கராயன்_வாய்க்கால்

பி.கு: காளிங்கராயன் வம்சத்தில் ஒருவர் பின்னாளில் வாய்க்காலை சீர்படுத்திதர தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று செலவழித்தார்.



RTI கோபாலகிருஷ்ணன்

RTI கோபாலகிருஷ்ணன் 
-----------------------------------
நம்மில் பலரும் அறிந்திராத போராளி. கலைஞர் முதல் சோனியா வரை இவரால் சந்திக்கு இழுத்துவரப்பட்டோர் ஏராளம்.

இவரின் சாதனை – வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சம் போட்டு காட்டியவர். கலைஞர் முதற்கொண்டு திமுகவின் போர்வாள் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல திமுகவினர் (கலைஞரின் கைத்தடிகள் ஜாபர்செட் முதல் அலுவலக பணியாள் வரை), ஐஏஎஸ்/ஐபிஎஸ், நீதிபதிகள் என்று பலரின் உண்மை முகத்தை உரித்து காட்டினார்.
(விரிவான செய்தி: http://news.vikatan.com/index.php?nid=618#cmt241)

தற்போது சோனியா காந்தி, பிரதமர், 2G ஊழல் ராஜா முதற்கொண்டு பலரின் சொத்து விபர சேகரிப்பால் இந்தியா முழுவதும் அறியபடுபவர். சோனியா இவரது கோரிக்கையை ஒரு கையால் மடியின் கனத்தை பற்றிக்கொண்டு மறுகையால் ஒதுக்கி விட்டார். அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் சொத்துவிவரத்தை வெளியிடும் பொது இவர் ஏன் மறுக்க வேண்டும்?
(விரிவான செய்தி: http://www.thinaboomi.com/2012/02/24/10840.html)

குடிசைவாசிகளின் பட்டா, முதியோர் உதவி தொகை, பாஸ்போர்ட் ஊழல், சேம நிதி, என பல வகைகளில மக்கள் நலனுக்கு RTI ஆயுதம் ஏந்தி வெற்றி கண்டவர். அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர். இவரது ஆயுதம் RTI. கவசம் ? - மீடியா கவனமும், மக்கள் ஆதரவுமே. துணிச்சலோடு போராடும் இவர்களுக்கு பின்புலம் உண்டா, இல்லை இதனால் ஏதேனும் வருமானம் உண்டா..??

அவர் FACT India (www.factindia.org) எனும் தன்னார்வ ஊழல் ஒழிப்பு தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர். RTI-யின் பலம் வட மாநிலங்களில் நன்கு உணரப்பட்டு பிரபலமடைந்து வருகிறது. தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. ஊழல் ஒழிப்பில் ஈடுபட நினைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்.

அவரது தொடர்பு & பணிகளின் விபரங்கள்:http://gopalakrishanvelu.blogspot.sg/2011/01/rti-rao-besant-nagar-gdq.html

இந்திய RTI ஆர்வலர்கள் : http://www.rtiactivists.org/ ; http://www.rtiindia.org/http://rti.aidindia.org/

மேலும் செய்திகள்:
http://www.indianexpress.com/news/new-land-old-plot-rti-reveals-a-tn-scam/721777/

http://www.vikatan.com/juniorvikatan/Special/8830-.html
http://articles.timesofindia.indiatimes.com/2012-02-24/india/31095022_1_sonia-gandhi-rti-act-information

தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்



நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம். 

கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! 

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்? 

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம். 

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.


நூறு நாள் வேலையை விவசாயத்துக்கு மாற்றுங்கள்!



நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை 119 ரூபாயிலிருந்து 132 ரூபாயாக உயர்த்தியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பயனாளிகளுக்கு வழங்கப்படும் பணி மற்றும் ஊதியத்தை தணிக்கை செய்ய, ஒரு அமைப்பை உரு...
வாக்கியுள்ளார்.
ஊதிய உயர்வெல்லாம் சரிதான். ஆனால், இந்த 100 நாள் திட்டத்தின் மூலமாக பணிகள் சரிவர நடக்கின்றனவா என்பதை யார் தணிக்கை செய்வது? ''நூறு நாள் வேலை' என்கிற பெயரில்... ஆங்காங்கே குளம், வாய்க்கால், சாலையோரம் என்று முளைத்துக் கிடக்கும் புற்களை மட்டும் மேலாக செதுக்கிவிட்டு... தூர் எடுத்ததுபோல கணக்குக் காட்டப்படுவதுதான் நடக்கிறது. அதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் 100 நாட்களுக்கு வெட்டும் அளவுக்கு குளம், வாய்க்கால்கள் எல்லாம் இருக்கின்றனவா என்ன?

'ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தைக் கொடுத்தால், அந்த மக்களின் ஓட்டு நமக்கே' என்கிற நோக்கம் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் கண்கூடாக தெரிகிறது! ஆனால், கடந்த காலத்தில் இப்படி கொடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதுதான் உண்மை.

சரி அரசியல் கிடக்கட்டும்... இந்தத் திட்டத்தின் காரணமாக விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்பதை பல முறை வலியுறுத்தியும், அரசாங்கம் அதை கண்டுகொள்ளவே இல்லை. இதோ... அண்டை மாநிலமான கேரளாவில், இதே திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோல, இங்கும் செய்தால்... தொழிலாளர்களுக்கும்... விவசாயத்துக்கும் நிச்சயம் பலன் இருக்கும்!

நன்றி : பசுமை விகடன்

தமிழகத்துக்கு ஈரோட்டின் பரிசு!


தமிழகத்தின் காவிரி பாயும் மாவட்டங்களை ஈரோட்டுக்கு முன் ஈரோட்டுக்கு பின் என பிரித்து நீர் மாதிரிகளை சோதித்தால், ஈரோட்டுக்கு பின் உள்ள நீர் மாதிரிகள் கொடும ரசாயனங்களை தங்கியதாக உள்ளது. ஈரோட்டில் கலக்கப்படும் இந்த சாய விஷம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களின் நிலத்தடி நீரையும் விஷமாக்கிகொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலமாக விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீராதாரங்களில் சுமார் 1,500 சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகிறார்கள். இதனால் இந்த நீரை விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஈரோட்டில் வடிகாளுக்காக பயன்பட்ட சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம், ராயல் ஸ்டேஜ், பெரும்பள்ளம் ஓடை, லக்காபுரம் ஓடை முதலியன தற்போது சாய விஷங்களை சுமந்து வருகிறது. மேட்டூரிலிருந்து நீர்வரத்து மிக குறைவாக உள்ள நிலையில் வெண்டிபாளையம் கதவனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நீர் கழிவு நீராகவே உள்ளது. இதுதான் ‘மாநரக’ மக்களின் குடிநீர். நாற்றம் அடிக்கும் இந்த நீரை பற்றி நிருபர் கேட்டும் மாநகராட்சி கை விரித்து விட்டது.

2008 ஆண்டிலிருந்தே இந்திய மருத்துவ கவுன்சில் ஈரோட்டில் கான்சர், குழந்தையின்மை பெருகுவதை குறித்து எச்சரித்து வருகிறது. வீடுகளில் பொருத்தப்படும் நீர் சுத்திகரிப்பு கருவி தூசிகளையும் கிருமிகளையும் நீக்குமே தவிர கெமிக்கலை தண்ணீராக மாற்றாது. அதனாலும் பயனில்லை.http://www.hindu.com/2008/01/06/stories/2008010657690100.htm

நிரந்தர நல்ல தீர்வாக சாய தோல் ஆலைகளை மூட வேண்டும். இல்லையேல் குறைந்த பட்சம் போது சுத்திகரிப்பு முறையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை கோரிக்கையாகவே உள்ளது.


சிக்கலில் ரியல் எஸ்டேட் துறை


ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள 1.2 லட்சம் கோடி கடனை வசூலிக்க நிர்பந்திக்குமாறு சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே விற்காமல் விலை வீழ்ச்சியில் வீடு மனைகள் உள்ளபோது, நிறுவனங்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

போன மாதம் சிதம்பரத்தின் அறிவுறுத்தலின் பேரில் முடுக்கிவிடப்பட்ட இந்த வசூல் நடவடிக்கை இப்போது தீவிரமடைந்துள்ளது. வட்டி மற்றும் சலுகைகளையும் குறைக்கும் திட்டமும வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம், ரியல் எஸ்டேட் காரர்கள் வீடு/மனைகளை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறங்களிலேயே இப்படியென்றால் கிராமப்புறங்களில் இந்த வீழ்ச்சி மிகவும் மோசமடைந்துள்ளது. புதிதாக யாரும் பிளாட் பிரிக்க நிலங்களை வாங்க முன் வராததால் விவசாய நிலங்கள் தப்பின.

எத்தனாலும் இந்திய பொருளாதாரமும்


வாட்டும் பெட்ரோல்/டீசல் விலை,அதனால் எரிய விலைவாசி அதை தொடர்ந்து சரிந்த இந்திய பொருளாதாரத்திற்கும் பாரம்தாங்கி போல் ஒரு யோசனையை நமது கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.நல்லசாமி அவர்கள் சொன்னார்.

சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பாதியை எத்தனால் உற்பத்திக்கு மாற்றி பெட்ரோல்/டீசலில் கலந்து பயன்படுத்துவது. இதனால் பிரேசில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல் 5-50% வரை கச்சா எண்ணெய் தேவையை குறைக்க முடியும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதனால் அந்நிய செலாவணியும் பெருமளவு சேமிக்க படும்! (போன வருட கணக்குபடி கச்சாஎண்ணெய்க்கு செலவிடபட்டது மானியம் மட்டும் 7லட்சத்து 56ஆயிரம் கோடி. இதில் 10 சதவீதம் சேமித்தாலும் 75,600 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்படும்!) அதன்மூலம் ரூபாய் மதிப்பும் உயர வழிவகுக்கும். இந்த எதனாலும் மரபு சாரா எரிபொருள். இயற்கை வளங்களை கெடுக்காது. காற்று மாசு, கச்சா எண்ணை சுத்திகரிக்க தேவைப்படும் மின்சாரம், அதன்மூலம் வெளிப்படும் நச்சு கழிவுகள் அனைத்தும் நடக்காது, சுற்று சூழலை கெடுக்காது! கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2,000 கொடுக்க திணறும் கரும்பு ஆலைகளும் டன்னுக்கு ரூ.3,200 - 5000 தர இயலும்!

இன்று சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் மொலாசசில் இருந்து சாராய வகைகள் (பீர் உட்பட) தயாரிக்கின்றனர். இந்த மொலாசசில் கந்தகம் (சல்பர்) உட்பட அனைத்து நச்சு ரசாயனங்களும் சேர்க்கபடுகிறது. இதனால் தான் சர்கரையை நம்மாழ்வார் ஐயா வெள்ளை விஷம் என்கிறார். கள்ளை அனுமதிப்பதால் விலை இன்றி தேங்காய் உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவார். பனை விவசாயிகள் & தொழிலாளர்கள் லாபமடைவார்கள். மக்களின் உடல்/பொருளாதார நலன் காக்க படும்.புதிய தொழில், வேலை, ஏற்றுமதி வாய்புகள் உருவாகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திரு நல்லசாமி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை போன மாதம் துவங்கி இன்று வரை நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வாழ்வியல் படி வாழ்ந்தால் இந்த பெட்ரோல் டீசலும் தேவை இல்லை கருமுப் பயிரும் சர்க்கரை ஆளைகலுமே தேவை இல்லாமல் போய்விடும்!

நொய்யலில் வெள்ளம-அடித்து வரப்படும் சாய விஷம்

ஈரோடு கரூர் நாமக்கல் திருச்சி மாவட்ட மக்களே உஷார்..!!

தற்போது கோவை பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நொய்யலில் வெள்ளபெருக்கு உண்டாகியுள்ளது. திருப்பூர் வரை பெரும் அபாயம் இல்லாத இந்த நீர் திருப்பூரில் சாய விஷம் கலந்து வெறும் சாய கழிவாக கறுப்பு நிறத்தில் ஓடுகிறது. 

நீதிமன்ற உத்தரவுப்படி ஓரத்துபாளைய அணையில் நீர் தெக்க கூடாது. அதனால் பெருகி வரும் நொய்யல் நீர் அணையில் உள்ள சாய திட சேறுகளையும் அடித்துக்கொண்டு வந்து காவிரியில் கொடுமுடியில் கலக்கபோகிறது. பல மாதங்களாக தேங்கி நிற்கும் சாய திட கழிவுகள் இந்த வெள்ளத்தால் மீண்டும் அடித்து செல்லப்பட இருக்கின்றது. காவிரி மூலமாக அது ஈரோட்டின் நிலத்தடி நீரினையும் விஷமாக்கி பின் நாமக்கல் கரூர் மற்றும் திருச்சி நீரையும் விஷமாக்கி பின் மக்களின் உடலுக்குள் செல்ல உள்ளது.

உங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் நீர் சுத்திகரிப்பு கருவியும் இதை ஒன்றும் செய்ய இயலாது. இந்த சாய விஷம் கான்சரில் இருந்து கர்ப்பபை கோளாறு / மலட்டுத்தன்மை வரை அனைத்து கெடுதலும் செய்யும். உங்கள் குடும்பத்தாரும், குழந்தைகளும் கான்சரால் இறப்பதையும், குழந்தயின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாவதை தடுக்க நினைத்தால் உங்கள் தொகுதி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பயங்கரத்தை பற்றி தெரிவியுங்கள். மசுகட்டுபாட்டு வாரியத்திடமும, பணத்துக்காக குடிநீர் ஆதாரங்களை விஷமாக்கி கொண்டிருக்கும் சாய ஆலை பண பேய்களிட்மும் போராடுங்கள்..!



பாபர் முதல் நம்மாழ்வார் வரை..



முஸ்லிம் அரசர்கள்: முகலாய சாம்ராஜ்யத்தில்- பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!

ராபர்ட் கிளைவ்: இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.

காந்தி: பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என்று சொன்ன நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்த சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடு மூலம் கொன்று அடக்குமுறையை கையாண்டார்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வருகிறார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வருகிறார்.

இன்று: பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள். மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...!

பச்சையை அழித்தோம்.. நீலம் வந்தது..!

இயற்கை வேளாண விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்லுவார்.. தமிழ்நாட்டுக்கு பருவ மழை இனி கிடையாது, புயல் மழைதான் வரும்னு... நம் வனங்களையும், மரங்களையும் அழித்ததன் விளைவு..!

# மரங்கள் நடுங்கள்.. எதிர்காலத்தில் சீற்ற புயலை தவிர்க்க; போலார் பனி உருகாதிருக்க; பருவமழை பெற..
 

வேப்பெண்ணெய் சேமித்து தரும் 30 ஆயிரம் கோடி..!


தழைச்சத்திற்கு விவசாயிகள் இடும் யூரியாவில் பாதிக்குமேல் வேகமாக வெளியேறியும்/காற்றில் கலந்தும்/நுன்னியிரிகளால் ரசாயனமாற்றம் செய்யப்பட்டு பயிருக்கு பயன்படாமல் போகிறது. வேப்பெண்ணெய், வேப்பம்புன்னாக்கு கலந்து இடுவதால் இழப்புகள் கட்டுபடுத்தபட்டு 30% வரை சேமிக்கபடுகிறது. அதாவது ஏக்கருக்கு 3 மூட்டை இட வேண்டிய இடத்தில் 2 மூட்டை போதுமானது. அல்லது 3 மூட்டை இடும்போது 4 மூட்டைக்கான விளைச்சல் கிடைக்கிறது..!! மறைமுக பலனாக பலநோய் தாக்குதல்களும் தடுக்கிறது.

இடும் முறை: (ஒரு மூட்டைக்கு) ½ லிட் வேப்பெண்ணெய்+1/2 கிலோ (தேவைகேற்ப)வேப்பம்புண்ணாக்கு கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும். உரசாக்குகளை(பிளாஸ்டிக்) விரித்து அதன்மேல் யூரியாவை கொட்டி, பேஸ்ட்ஐ பிசரி 1/2 மணிநேரம் கழித்து மூட்டையில் பிடித்து வைக்கலாம்/பயன்படுத்தலாம். யூரியா மட்டும்அல்ல, அமோனியா முதலான தழைச்சத்து உரங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.கடைகளில் கிடைக்கும் யூரியா கோட்டைவிட இது சிறப்பாக இருக்கும்.

உள்நாட்டு தேவை : 2.8 கோடி டன் ரூ.9,000 /டன்(ரீடெயில் விலை)
உற்பத்தி : 2.2 கோடி டன் ரூ.13,000/டன்(உற்பத்தி விலை)
இறக்குமதி : 60 லட்சம் டன் ரூ.23,000/டன்(இறக்குமதி விலை)

இந்த முறையால் விவசாயிக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்தோம். நாட்டுக்கு..??!! இந்தியாவின் வருட உர மானிய நிதிச்சுமை 1 லட்சம் கோடிக்கு மேல். 30% யூரியா சேமிக்கபட்டால் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னியசெலாவணி அப்படியே மீதி! அதற்குமேல் உள்நாட்டு மானிய நிதிச்சுமை சேமிப்பு!! கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி. உள்நாட்டு யூரியா தேவை 1.96 டன்னாக குறையும்.

(உர உற்பத்தி ஆலையிலேயே கோட்டிங் செய்யலாம். திட்டம் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளது.. !)

வெளிநாட்டு விவசாயிகள் வேப்பெண்ணெய் நன்கு பயன் படுத்துகின்றனர். வேப்பெண்ணெய்/வேப்பம்புண்ணாக்கு வெளிநாட்டு விவசாயத்தின் ஓர் அங்கம. KVK மூலம் இவை அறிவுறுத்தபட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமீபமாக விவசாயத்தில்,ஆடு,மாடு வளர்ப்பில் வேப்பெண்ணெய் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், உழவனுக்கும், நிலத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..!

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..! நாட்டு பசும்பால் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்க படுகிறது..!

"இதிலும்அன்னிய முதலீடாவேண்டாமே!'உள்நாட்டு மாடுகளிலும், 12 லிட்டர் வரை பால் கறக்கலாம் என்று கூறும், நடராஜன்: என் தாத்தா காலத்தில்இருந்தே, விவசாயம் தான் பார்க்கிறோம். சிறு வயது முதலே, மாடுகள் மேல் எனக்கு பிரியம் அதிகம். இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என, பல வகைகள் உள்ளன.
ஆனால், ஜெர்சி, பிரிசயன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத் தான், சமீப காலமாக, விவசாயிகள் விரும்பி வளர்க்கின்றனர். நாட்டு மாடுகள் குறைந்த அளவு பால் தருவதால், பற்றாக்குறையை தடுக்க, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட, வெளிநாட்டுப் பசுக்கள் மூலம், பால் உற்பத்தி செய்ய அரசே ஊக்குவிக்கிறது.

ஜெர்சி இன மாடுகளில், வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம், பால், சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. இதன் சாணம் மற்றும் சிறு நீரால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நம் நாட்டு மாடுகளில், வேர்வை நாளமும், திமிலும் உள்ளதுடன், சிறு நீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.தமிழகத்தில், காங்கேய மாடுகள், 80 சதவீதம் வரை அழிந்து விட்டன. இதை அழிவிலிருந்து காக்க, நாட்டு மாடுகள் மூலம், அதிக பால் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் என, தோன்றியது.அதனால், தமிழகத்தில் எங்கு மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும், தவறாமல் பங்கேற்று, நல்ல காங்கேய மாடு வாங்கி வருவேன்.

மாட்டு வர்க்கத்தில், பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவு பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன், இனப் பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம், அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.இந்திய மாடுகளுக்கு, 20 வயது வரை ஆயுள் உண்டு. மாடுகள் வாங்கும் போது, தோல் மென்மையானதாகவும், எலும்பூட்டம் அதிகமுள்ளதாகவும், மடித்தோல் இறக்கமானதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.நான் மாடுகளுக்கு செயற்கைத் தீவனம் கொடுப்பதில்லை. மாவுச்சத்துள்ள பொருட்களை மாடுகளுக்கு உணவாக கொடுத்தால், பால் அதிகமாக சுரக்கும். நாட்டு மாடுகள் அதிக பால் கொடுக்க, தீவனமும் ஒரு காரணம்.
Thanks: Dinamalar

நாட்டு மாடுகளை சுற்றியிருக்கும் பன்னாட்டு அரசியல்


இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.

விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிகொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது என்பதால் நாட்டு மாடுகளின் கொலைகளம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது. இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்து மக்களிடம் நோயை விதைக்கும் உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளை திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்க துவங்கினர். நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில் போய் விட்டன. இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலப்பின பசுவின் பாலால் அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்ட சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது. கலப்பின பசுக்களுக்கு தீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது. தீவனதுக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடபட்டதால் உணவு பொருட்கள் விலையும் எகிறியது.பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமை புரட்சி என்ற விஷ புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வேர்மிகம்போஸ்ட், தொளுவுரம், கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள். இனி வெளிநாட்டு நிறுவனங்கள் விற்க போகும் கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.


பால் அல்ல மாடே கலப்படம்தான்!


குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு… நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு பெண்பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.

ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.


தமிழா-விஷ உணவுதான் உனக்கு விதி!



காவிரி பாயும் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை மூலம் மருந்து/ரசாயனம் இல்லா உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையான உண்மை அல்ல. சொன்னால் நம்ப முடிகிறதா..?? ஆனால் அதுதான் யதார்த்தம். 

ுறிப்பாக ஈரோடு நாமக்கல் மாவட்டங்கள் தாண்டியபின் காவிரி வரும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை விளைபொருட்கள் என்று சொல்லே பயன்படுத்தமுடியாது. தோலில் பட்டால் கொப்புளம் வருமளவு மோசமான சாய விஷ நீரை தாங்கிக்கொண்டு, போதாகுறைக்கு நொய்யல் மற்றும் காளிங்கராயன் விஷத்தையும் தாங்கிக்கொண்டு வரும் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது உரம் பூச்சிகொல்லிகளை விட மோசமான ரசாயன மூலக்கூறுகள் விளைபொருட்களுக்குள் ஏறிவிடுகிறது. இது மட்டுமில்லாது இந்த சாய விஷம் கலந்த காவிரி நீர் நிலத்தடி நீரிலும் கலந்து அதையும் கேடுத்துவிடுகிறது. இதுமட்டும் இல்லாமல் ஈரோட்டின் பின் வரும் எந்த மாவட்டங்களிலும் முறையான சுத்திகரிப்பு செய்தபின்னே காவிரியில் கலக்கும் படியான செயல்பாடுகள் இல்லை. 

கரூரிலும் ஜவுளி நிறுவனங்கள் புண்ணியத்தால் இதே விஷம் மீண்டும் கலக்கிறது. மேட்டூரை சுற்றி வந்தால் அங்கு எத்தனை கொடிய கெமிகல் ஆலைகள் உள்ளன என்பது தெரியும். அவற்றில் ஒன்றிரண்டை தான் இயற்கை ஆர்வலர்களால் தடுக்க முடிந்தது. இவை இல்லாமல் ஈரோடு, கரூர், நாமக்கல்லில் காகித சர்க்கரை ஆலைகளும், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளும் தங்கள் பங்குக்கு நீரை மாசுபடுத்துகிறார்கள். தற்காலங்களில் தமிழ்நாட்டின் நீர் உப்பு விகித்தத்திலும் கெமிக்கல் விகிதத்திலும் அபாயகரமான நிலையை தொட்டுள்ளதை அறிகிறோம்.

நிலத்தையும், இடுபொருட்களையும் மட்டும் ரசாயனமற்றதாக வைத்திருந்தால் போதாது, பயிர்கள் எடுக்கும் நீரும் விஷமற்றதாக இருக்க வேண்டும். நிலை இவ்வாறு இருக்க சுத்தமான இயற்கைவிவசாய விளைபொருள் என்பது பொய்யான வார்த்தைகளாகவே தெரிகிறது. பூரண விஷமற்ற உணவு வேண்டுமானால் அது ஈரோடு திருப்பூர் சாய தோல் ஆலை அதிபர்கள் கையில் தான் உள்ளது.


கேஸ் அடுப்பு தீமைகள்


பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது குரல் கொடுக்கும் நாம் வீட்டிலேயே அதே பிளாஸ்டிக்கின் மூலமான கச்சா எண்ணெய் வழியாக கிடைத்த பெட்ரோலியம் கேஸ்தான் பயன்படுத்துகிறோம்.

இது எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றி தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. புகை வருவதில்லை ஆனால் அதன் நீல நிற ஜ்வாலை ஆக்சிஜன் குறையால் முழுவதுமாக எரியாது இருக்கும் நிலையை காட்டுவதாகவே உள்ளது. முழுமையாக எரியாத பொருள் தீய ரெடிகல்ஸ் வெளியிடும் என்பது நிஜம். கச்சா எண்ணெய் மூலம் வரும் மிகவும் தீங்கான-ஆபத்தான கார்போனிய மூலப்பொருட்கள் தான் இந்த வாயுவிலும் வெளிவரும் என்பது திண்ணம். ஒரு வேலை அது தீங்கில்லை என்பதாகவே இருப்பினும், இந்த வாயுவை அரபு நாட்டில் இருந்து தயாரித்து, கப்பல்களிலும் லாரிகளிலும் எடுத்துவந்து வீட்டை அடையும்போது அதற்க்கு எவ்வளவு எரிபொருள் டீசலாகவும் நிலக்கரியாகவும் எரிக்கபட்டிருக்கும்..?? LPG வாயு சுவாசிப்பதால் நரம்பு, மூளை, இதய, நுரையீரல் கோளாறுகள் வருவதாகவும், கேன்சர் வாய்ப்புக்கள் மிக அதிகமா இருக்கிறது என்பதும் மருத்துவ செய்தி கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விறகு-சாண வரட்டி அடுப்புகள் சூழலுக்கு தீங்கற்றது-ஆரோக்கியமானது என்பதை அறிவோம். அதில் வெளிவரும் ஜ்வாலை முழுவதும் எரிந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். புகை வந்தாலும் மரப்பொருள் ஆவதால் சூழலை மிககுறைவாக தாக்கும் CO2 தான் வருகிறது. என் கிராமத்திலோ-முன்னோர்களோ ஆஸ்துமா வால் இறந்தவர் என்று எவரும் இல்லை. பல வீடுகள் வீட்டுக்கு வெளியே சமைப்பார்கள்.வீட்டுக்குள்ளும் சமைப்பவர்கள் புகைபோக்கி வைத்து இருப்பார்கள். எனவே புகையின் தாக்கம் என்பது மிக அரிதே.


நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..

நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..
----------------------------------

பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன. 
http://www.youtube.com/watch?v=9KMtQfjcJMo

இந்திய மாடுகளின் பெரிய கொலைக்களமான கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
http://www.youtube.com/watch?v=KN83hnfqSvI

பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.
http://www.rccsc.com.pk/

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு..
https://www.youtube.com/watch?v=48bPl4dgfks

இவை மட்டும் இல்லாது அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது..!