கெயில் கேஸ் லைன்
-------------------------- ---
தமிழர்களையும் உழவர்களையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் போக்கு மத்திய அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. குறைந்த தூரமே பிடிக்கும் கேரளா வழி கேஸ் லைன் பதிப்பை விடுத்து தமிழ்நாடு வழியாக கொண்டு செல்ல திட்டமிடுவதே ஒரு சதி. பயனடையும் கேரளா கர்நாடக மக்கள்கூட தங்கள் நிலத்தில் கேஸ் லைன் பதிக்க எதிர்த்ததர்க்கு பணிந்த அரசு, தமிழ்நாடு வழியாக பதிக்கலாம் என்றதும் வெகு சுலபமாக சம்மதித்து விட்டது.
சரி அப்படித்தான் பதிப்பதை நெடுஞ்சாலை ஓரங்களிலும் ரயில்பாதை ஓரங்களிலும் பதித்துகொள்ளுங்கள் என்ற கோரிக்கையை சற்றும் பொருட்படுத்தாது தங்கள் பணியை துவங்கி விட்டனர். ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பால் நின்ற பணி, மக்களை மறக்க வைத்து திடீர் என இரு தினங்களுக்கு முன் பெரும்படையோடு வந்து விவசாய நிலங்களில் பயிர்களையும் மரங்களையும் அழித்து அராஜக வெறியாட்டம் ஆடி சென்றுள்ளனர். கேட்க நாதியற்ற மக்களாக தமிழ் விவசாயிகள் நின்றது பரிதாபம். வறட்சி காலத்திலும் பெரும் சிரமங்களுக்கு இடையே பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்த தென்னைகளையும் பயிர்களையும் பிடுங்கி எரிந்ததை கண்டு விவசாயிகள் கதறியது உள்ளத்தை உருக்கிவிடும் காட்சி. இப்படியும் மக்களை நோகடித்து, விவசாயத்தை அழித்து திட்டங்கள் செய்ய வேண்டுமா..? அதுவும் தமிழக விவசாயி மட்டுமே இளிச்சவாயனா..??
நிலத்தை ஆக்கிரமித்தது மட்டும் இன்றி இனி அந்த நிலத்தில் விவசாயிகள் நீர்பாய்ச்சுவதோ, மரம் நடுவதோ, வீடு கட்டுவதோ கூடாது. அந்த பைப்க்கு ஏதேனும் சேதம்-பிரச்சனை ஏற்பட்டால் நில உரிமையாளருக்கு சிறை உட்பட பல தண்டனைகளை அறிவித்து விவசாயிகலையே அவர்களின் கேஸ்லைன்க்கு சம்பளம் இல்லா காவல்காரனாக மாற்றுகிறார்கள்.
இது மத்திய அரசின் திட்டமே எனினும் மாநில அரசும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.இந்த அக்கிரமங்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் பெரிதாக கவலைப்படாது விவாதிக்காது இருப்பதும் ஆச்சரியமே. சிங்கூர் விவகாரத்தின் போது கொதித்து கிளம்பினவர்களும் காணாமல் போய் விட்டார்களே. தமிழ்நாட்டில் எது நடந்தாலும் யாருக்கும் தெரியாது போலும். அட கூடன்குலத்துக்கு குரல் கொடுத்தவர் கூட காணாமல் போனதேனோ..??
No comments:
Post a Comment