Thursday, 25 September 2014

மல்லசமுத்திரம் தொண்டைமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர். அகளங்க சோழன் என்பதும் இவர்கள் முன்னோர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்ட விருதுப்பெயராகும். நாமக்கல் கோட்டையை மீட்க சோழனுக்காக போராடி வென்றமையால் சோழ அரசன் விஜயராகவ பட்டம் கொடுத்து சிறப்பித்தார். நவாபு ஆட்சியில் பகதூர் பட்டம் பெற்றார். இவ்வளவு பட்டங்கள் அவரது திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களாகும்.

தென்னாட்டில் சிலகாலம் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில், பேரரசுகளிடையே போர் நடந்து வந்தது. போர்க்காலத்தில் பேரரசுகளுக்கு வரிகள் செலுத்தவேண்டியதில்லை என்பதால் தொண்டைமாக்கவுண்டர் மக்களிடம் வரியை வசூலித்து கூட தன் கைப்பொருளையெல்லாம் செலவு செய்து ஏழு பெரும் ஏரிகளையும் அதற்குண்டான நீர்வழிகளையும் வாய்க்கால்களையும் வெட்டுகிறார். அனைத்தையும் ஏழே ஆண்டுகளில் முடிக்கிறார்!. மல்லை நாட்டை கிழக்கும் மேற்க்குமாக சுற்றி பாய்ந்த திருமணிமுத்தாறு மற்றும் பொன்னியாற்றின் நீரை கொண்டு தனது பூமியை வளம் கொழிக்கும் நாடாக்கினார். கொழந்கோண்டை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, ஊமையாம்பட்டி பெரிய ஏரி, செட்டி ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மங்களம் ஏரி என்பவையாம்.

போர் முடிந்து நவாபு வரி கேட்க, போர்க்காலத்தில் வரி கொடுப்பதில்லை என்றும், அப்படி வசூல் செய்த வரியை செலவு செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். வரியை கட்டு என்ற நிர்பந்தத்திற்கு மறுக்கிறார். மன்னிப்பு கேட்டு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு என்ற சமரசத்திற்கும் உடன்படவில்லை. யானையை கொண்டு தலையை இடர செய்ய தண்டனை விதிக்கபடுகிறது. அவர் வெட்டிய ஏரிக்கரையிலேயே கொடூரமாக உயிரை விடுகிறார். கற்புநெறி பிறழாத அவரின் தர்மபத்தினி சின்னாத்தா யார் தடுத்தும் கேளாமல் திருமணிமுத்தாற்றின் கரையில் தொண்டைமாகவுண்டரோடு சிதையில் சேர்ந்து தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்.

அவர்கள் உயிர்விட்ட இடத்தில் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் தீப்பாஞ்சம்மன் கோயில் என்று வழிபடப்படுகிறது. செல்வதற்கு தடம் கூட இல்லாத, இக்கோயிலின் அவலக் கோலம்தான் இந்த படங்களில் நாம் பார்ப்பது. சுதை வேலைப்பாடுகளோடு அழகு மாறாமல் இருக்கின்றது. உள்ளே பாம்பு சட்டைகளும், சுற்றி குப்பைகூலமும் நிறைந்து கிடக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையன் ஒருவன், தென்னிந்த கிராமங்கள் பற்றிய தனது புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி குறிப்பிடுகையில், தான் நிற்கும் மலை தவிர சுற்றியிருக்கும் பூமியனைதும் இருக்கும் பசுமை குறித்து பூரித்து குறிப்பிடுகிறார். தன் உயிரையும், பொருளையும் கொடுத்து, இவ்வளவு வளமைக்கும் காரணமான தொண்டைமாக்கவுண்டர் நினைவிடம் இருக்கும் நிலை, திருசெங்கோட்டு மக்களின் நன்றியுணர்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஏரிகள் மட்டுமின்றி மல்லசமுத்திரம் ஸ்ரீ சோழீசர் கோயில், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில், மாமுண்டி சிதம்பரேஸ்வரர் கோயில், மங்களம் அழகுநாச்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவர் சிலை மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயிலில் உள்ளது.

இயற்கையை கெடுக்காத நீர் சேமிப்பு/பாதுகாப்பு என்றால் ஏரி, குளங்கள் தான். நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேமிப்பு அனைத்தும் சாத்தியம். தொண்டைமாக்கவுண்டர் போன்றோர் உயிர் கொடுத்து வெட்டிய நீர்நிலைகளை காப்பாற்றாது, முள்ளும் மண்ணும் மூடவிட்டு, நிலத்திருடர்கள் பிளாட் போட்டு விற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தண்ணீர் பஞ்சம் என்று சொல்வது யார் செய்த தவறு? மன்னராட்சி காலங்களில் சிறப்பாக இருந்த நீர் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி குளங்கள் சீரமைந்தால் தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்பது புலனாகும். மழையாகிய மாரி கடைசியாக வந்து நிற்குமிடம் ஏரி, குளங்கள்தான். அவைதான் உண்மையான மாரியம்மன் கோயில்கள்.

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா மட்டும் பேசாம அமைதியா இருந்திருந்தா, காவேரி, கிருஷ்ணா, பாலாறு, பவானி, முல்லைப்பெரியாறு என்று எந்த நதிநீர் பிரச்னையும் இன்றிருந்திருக்காது. திராவிட மாயையில் சிக்கிய மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்திருந்த அவர், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமை குரலை ஒலிக்கவிடாமல் நீர்த்துப் போகச்செய்தார். இன்று நீர்ப்பிச்சைகாரர்களாக, நாடோடிகளாக பலர் மாறியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அடிக்கடி ஏற்படும் வறட்சியின் காரணமாக வெட்டுக்கு விற்கப்பட்ட கோடிக்கணக்கான நாட்டுபசுக்கள் தன் இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கும்.

இருளர்கள்

இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள் என்றளவில் மட்டுமே கற்பிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் இயற்கை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள். குஷ்டம், கேன்சர் முதல் நவீன மருத்துவத்திற்கு சவால் விடும் சிக்கலான வியாதிகளுக்கு மிக எளிய மருந்துகளை வைத்துள்ளார்கள். மந்திரித்து விடுதல்-பாடம் போடுதல் நாமும், Pranic Healing என்று வெள்ளையர்களாலும் சொல்லப்படும் மருத்துவமுறை வரை பின்பற்றுகிறார்கள். கேரள சர்க்கார் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவம் செய்யலாம் என்று அங்கீகரித்துள்ளது. அவர்களை வெள்ளையர்கள் மிக நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். பணமோ புகழோ எதிர்பார்ப்பதில்லை; மரபுச்செல்வம் யாராலோ வணிகமாவதை கண்டுகொள்வதும் இல்லை. பாம்புகள் போன்ற நுண்ணுணர்வு மிக்க பிராணிகளை கையாளும் அவர்கள் இயற்கையின் நுட்பகளை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். கொங்கதேசத்தில் சித்தாண்டிகள், குப்பண்ண பரதேசியார், தம்பிக்கலைஐயன், வாழைத்தோட்டத்து ஐயன் போன்றோர் பின்பற்றியதும் இதே வைத்திய முறையே. அக்காலம் தொட்டு இன்றளவும் கொங்கதேசப்பகுதிகளில் இருளர்கள் பெருமளவு வசித்து வருகிறார்கள். ஆதிக்குடிகளான அவர்கள் கன்னியாத்தா என்று சப்த கன்னியர்களையும், சிவபெருமான் மற்றும் ‘ரங்கநாதர்’ வழிபடுகிறார்கள். ஆதிப் பழங்குடிகளான அவர்கள் பேசுவது இருள பாஷை, இதன்மூலம் தொல்காப்பியத்தில் சொல்லியபடி 'திசை சொற்கள்' ஏராளம் உண்டு எனலாம்.
சர்க்கார் திட்டங்கள் போட்டு, உளுத்துபோன மெக்காலே கல்வி கொடுத்து அவர்களையும் நகர 'நாகரீக' சமூக சகதிக்குள் இழுக்க பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நவீன சமூகம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழும் கலையை..

சதா நிரோகி

ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி!
அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்! - சரகர்
சரஹர்-நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாபெரும் மருத்துவ மேதை. சரஹ சம்ஹிதை என்ற அவரது நூல் பல்வேறு மருத்துவ ஆயுர்வேத நூல்களுக்குக்கெல்லாம் மூல நூல்.
(ஹித-சத்துள்ள; மித-அளவான; ருது-பருவம்; சதா- எப்போதும; நிரோகி-நோயற்றவன் [ரோகம்-நோய், ரோகி-நோயாளி])
நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்

அசைவம்

அசைவம் முதலில் அரிதான/விழாக்கால உணவாக இருந்து இப்போது வெகுஜன-அன்றாட உணவாக உருவெடுக்கிறது.. இன்றுள்ள மக்கள் தொகைக்கு, இது இயற்கைக்கும் சரி.. மனிதர்களுக்கும் சரி.. சமூகத்துக்கும் சரி.. மிகவும் ஆபத்து.. பல்வேறு கொடும்விளைவுகளுக்கு அடிநாதமாக இருக்கப்போகிறது..

பெண்கள் சொத்துரிமை

பெண்கள் தங்கள் சொத்துரிமையை தங்கள் சகோதரனுக்காக இலவசமாகவோ, சொற்ப பணம் பெற்றுக்கொண்டோ விட்டுக்கொடுக்கிறார்கள். இன்றைய சட்டங்கள் பெண்கள் நினைத்தால் தாங்கள் விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கொள்ளவும் பல ஓட்டைகள் வைத்துள்ளன என்பதும் வேறு விஷயம். பெரும்பாலும் சிறுவிவசாயிகளை கொண்ட நாட்டில் நிலங்கள் பிரிக்கப்பட்டால் குடும்பம் நடத்தும் அளவுகூட வருமானத்தை பெற முடியாது. சொத்தை பெற்ற பெண்ணும் மைல்கள் தாண்டி வந்து விவசாயம் செய்ய இயலாது என்பது வேறு விஷயம். நம் நாட்டு சட்டங்கள் குடும்பங்களுக்குள் புகைச்சல் வர எவ்வளவு முடியுமோ அவ்வளவு சட்டங்களை "தேசபக்தர்" கும்பல்களின் அழுத்தத்தால் உருவாக்கியுள்ளன. குறைந்தபட்சம் நில விஷயத்திலாவது சொத்துரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும். சிறுவிவசாயிகள் பெண்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள். தங்கள் கல்யாணத்துக்காகவும் சீர்களுக்காகவும் பல சிரமங்கள் பட்ட பெற்றோர் மீது பெண்களின் இந்த குடும்பப் பாசம் இல்லாவிட்டால் இன்று பலரின் மிராசு டம்பமெல்லாம் என்றோ காற்றில் பறந்திருக்கும். பெண்கள் கூட குடும்ப பாசம் என்று சொல்லலாம்; ஆனால் அவர்கள் கணவர்கள் சொந்தம் முக்கியம் என்ற காரணத்தால் சொத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். பெண்கள் மற்றும் அவர்கள் கணவர்கள் போட்ட பிச்சையை மறந்த நன்றிகெட்ட விதிவிலக்குகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக பெரும்பான்மையை குற்றம் சொல்ல முடியாது.
*பெண்கள் விவசாயத்தின்-கிராமத்தின் கண்கள்*

அறநிலையத்துறையின் அக்கிரமங்கள்

கோயில்களில் அறநிலையத்துறையின் அக்கிரமங்கள் உச்சகட்டத்தில் இருக்கின்றன. கோயில்கள் என்றால் வணிக மையம் என்ற பிம்பம் வருமளவு மாற்றி வைத்துள்ளனர். கோயில்களில் நடக்கவேண்டிய நிர்வாகம் சீர்கெட்டு, பூஜைகள் முறையின்றி போய், கோயில் பணியாளர்களை பஞ்சத்தில் விட்டு, அதனால் அவர்கள் பக்தர்களிடம் சுரண்டல் வேலையை ஆரம்பித்து வைத்துள்ளனர். இது மட்டுமின்றி, கோயில் நிலங்கள், சொத்துகள், நகைகள், கலைப் பொக்கிஷங்கள், சிலைகள் என்று சொத்துக்கள் பெருமளவில் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. கோசாலைகள், தர்ம ஸ்தாபனங்கள், பாடசாலைகள், மடங்கள் என்று அனைத்தும் சீர்கேட்டில் இருக்கின்றன. கோயிலில் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் சேவைக கட்டணங்கள் கயவர்களின் கைக்கே செல்கின்றன. இனி கோயிலுக்கு கொடுக்க நினைக்கும் பணமோ பொருளோ, கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கவும், பழமையான கோயில்களை காக்கவும் போராடி வரும் அமைப்புக்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இனி ஒரு பைசா செலவு செய்து எந்த சேவையும் (அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள) கோயில்களில் பெறப்போவதில்லை. தங்கள் சொந்த வேலைகள், குடும்பம், சொத்து சேர்ப்பது என்று அனைத்தையும் விட்டு பல பயங்கர அச்சுறுத்தல்களையும் தாண்டி நற்காரியங்கள் செய்பவர்களுக்கு நேரடியாக களத்தில் முடியாவிட்டாலும் பணமாகவாவது, உதவுவதே தெய்வத்துக்கு செய்யும் சேவையாகும்.
நாட்டுப்பசுக்களுக்காக பெருமுயற்சிகள் செய்துவரும் கொங்க கோசாலை அமைப்புக்கு சிங்கபூர் நண்பர்கள் சேர்ந்து ஒரு தொகையை கொடுத்துள்ளோம். அதுபோல, இனி ஆலய வழிபடுவோர் சங்கம், ரீச் பவுண்டேசன் போன்ற அமைப்புக்களுக்கு என்னாலான வழிகளில் உதவ நினைக்கிறேன்.

திருவருள்

திருவருள் என்ற படம். அதில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான வசனம் வரும். "எல்லா நம்ம கைலதான் னு நெனைக்கற வரைக்கும் தான் இன்பம்-துன்பம் எல்லாம் நம்மை பாதிக்கும்... நம்மையே அவன்கிட்ட ஒப்படைச்சிட்டா, எதுவும் நம்மள பாதிக்காது" னு பாமர மொழியில் சொல்வார். உள்ளார்ந்த அன்பினாலோ, வெளிப்புற அழுத்தம் தாங்க இயலாமலோ அந்நிலை வரலாம். அந்த மனநிலையை அடைவதும், அந்நிலையில் வாழ்வதும், அதனால் கிடைக்கும் லேசான மனமும் அனுபவித்துணர வேண்டிய சுகம். வேலைப்பளு, சமூக அழுத்தங்கள், மனக்குமுறல்கள், பகை-பழியுணர்ச்சி, ஏக்கங்கள் என அனைத்து இரும்பு குண்டுகளும் நம்மில் இருந்து உதிர்ந்து போகும். அந்த மனநிலையில்தான் தெய்வத்தை உணர முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படியான மனநிலையால், நிகழ்காலத்தில் அதிகம் வாழ முடியும்; பொறுப்பின் அழுத்தம் பெரிதாக பாதிக்காது; தவறு செய்யும் எண்ணம்-சலனம் ஏற்படாது.
கோயில்கள் காவல்-நீதித்துறை பணிச்சுமையை குறைக்கும் என்பதன் அர்த்தமும் இதில்தான் உள்ளது.

முடிக்கு அடிக்கும் டை

முடிக்கு அடிக்கும் டை மூலம் கடுமையான விஷம் ஸ்லோ பாய்சன் போல உடலில் இறங்குகிறது. சேலத்தில் ஒரு அரசியல்வாதிகூட இந்த டை விஷத்தின் தாக்கத்தால்தான் இறந்தார் என்ற விஷயம் பரவலாகவில்லை. தலைவலியில் இருந்து கண் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் என்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இந்த டையை தயாரிக்க இயற்கை காயப்படுகிறது. நம் முன்னோர்களும் முடிக்கு டை அடித்துள்ளனர். சேதாங்கொட்டை என்னும் செடியின்மூலம் பெறப்படும் விதைகளை குத்தி சாறு எடுத்து பயன்படுத்துவார்கள். ஒன்றுமில்லை, நம்ம கிராமத்து வண்ணார சாதியினர் துணியில் குறியிடும் மை அதிலிருந்துதான் செய்கிறார்கள். இதன் ஆயுளும் அதிகம், உடலையும் கெடுக்காது.
(அந்த செடியை கொண்டு ஒரு புது சுதேசி பொருளை கண்டுபிடிக்கலாம்; காப்புரிமை கேட்க மாட்டேன்  )

வளர்ந்த நாடுகள்

அரசியல்வாதிகள் பேசும்போது வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளை குறிப்பிட்டு அந்த நாடுகளைப் போல இந்தியாவை மாற்றுவோம், என்று சொல்கிறார்கள். அது தவறு, அது சாத்தியமுமில்லை. பணப்புழக்கமுள்ள தொழில்களை மட்டும் செய்வதாலும், பெரு நிறுவனங்களின் மையங்களை கொண்டிருப்பதாலும் தான் இந்த பணக்கார தோற்றம். ஏராளமான ஏழை நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்களை சுரண்டியும் அழுக்காக்கியும்தான் பணக்கார நாடுகள் தங்கள் பகட்டான தோற்றத்தை தக்க வைக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் இந்த தொழில் முறை சாத்தியமில்லை. எல்லா நாடுகளும் சுரண்டலை கையிலெடுத்தால் உலகம் தாங்காது. மலைகளும், காடுகளும், நதிகளும் சீரழிந்து போகும். உலகமே மனித நுகர்வுக்குத்தான் என்ற வெளிநாட்டு சித்தாந்தங்களின் வெளிப்பாடு அது. நம்மை இயற்கையோடு இணைத்துக்கொண்டால் வாழ்வு பூரணமாக இருக்கும். அதை தற்போது பல நண்பர்கள் அந்த வாழ்க்கை முறையில் எல்லா கோணங்களிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
ஆக, வளர்ச்சிப் பொருளாதாரம் என்றும் இந்தியாவை அதுவாக இதுவாக ஆக்குகிறேன் என்றும் சொன்னால், நீங்க எதுவாகவும் ஆக்க வேண்டாம் இந்தியா சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை மிகச் சிறப்பாகத்தான் இருந்தது; காலனிய, கம்யூனிச, முற்போக்கு குழப்பங்களால் சீரழிந்ததை மீட்டுக் கொடுங்கள் போதும் என்று சொல்லுங்கள்.

Tuesday, 2 September 2014

இரவச்சம்


'பசுவுக்காகவே எனினும்' தண்ணீர் கேட்டு இரப்பதாக இருந்தால் அது அந்த நாக்குக்கு கேவலமே என்று பொருள் கூறுகிறார்கள். மாறாக, பசுவுக்கு நீர் வேண்டும் என்று 'இரந்தாலுமே' அது அந்த நாவிற்கு இழிவை தராது என்று பொருள்படுவதாக தமிழறிஞர் ஒருவர் சொன்னார். எனக்கும் இரண்டாவது பொருளே சரியெனப்படுகிறது.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்
(அதிகாரம்:இரவச்சம்; குறள்:1066)எது எப்படியானாலும் பசுவைப் பேணுவதை மிகப்பெரும் தர்மம் என்ற அடிப்படையில் தான் வள்ளுவரும் சொல்லியுள்ளார். பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன. (பசு என்றால் இந்திய நாட்டுப்பசு மட்டுமே; வேறு எதுவும் பசுக்கள் இல்லை. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

படம்: Tamil Wisdom, EJ Robinson, 1873