Wednesday 22 January 2014

எரிவாயு அடுப்புகள்


பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது குரல் கொடுக்கும் நாம் வீட்டிலேயே அதே பிளாஸ்டிக்கின் மூலமான கச்சா எண்ணெய் வழியாக கிடைத்த பெட்ரோலியம் கேஸ்தான் பயன்படுத்துகிறோம்.

இது எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றி தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. புகை வருவதில்லை ஆனால் அதன் நீல நிற ஜ்வாலை ஆக்சிஜன் குறையால் முழுவதுமாக எரியாது இருக்கும் நிலையை காட்டுவதாகவே உள்ளது. முழுமையாக எரியாத பொருள் தீய ரெடிகல்ஸ் வெளியிடும் என்பது நிஜம். கச்சா எண்ணெய் மூலம் வரும் மிகவும் தீங்கான-ஆபத்தான கார்போனிய மூலப்பொருட்கள் தான் இந்த வாயுவிலும் வெளிவரும் என்பது திண்ணம். ஒரு வேலை அது தீங்கில்லை என்பதாகவே இருப்பினும், இந்த வாயுவை அரபு நாட்டில் இருந்து தயாரித்து, கப்பல்களிலும் லாரிகளிலும் எடுத்துவந்து வீட்டை அடையும்போது அதற்க்கு எவ்வளவு எரிபொருள் டீசலாகவும் நிலக்கரியாகவும் எரிக்கபட்டிருக்கும்..?? LPG வாயு சுவாசிப்பதால் நரம்பு, மூளை, இதய, நுரையீரல் கோளாறுகள் வருவதாகவும், கேன்சர் வாய்ப்புக்கள் மிக அதிகமா இருக்கிறது என்பதும் மருத்துவ செய்தி கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விறகு-சாண வரட்டி அடுப்புகள் சூழலுக்கு தீங்கற்றது-ஆரோக்கியமானது என்பதை அறிவோம். அதில் வெளிவரும் ஜ்வாலை முழுவதும் எரிந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். புகை வந்தாலும் மரப்பொருள் ஆவதால் சூழலை மிககுறைவாக தாக்கும் CO2 தான் வருகிறது. என் கிராமத்திலோ-முன்னோர்களோ ஆஸ்துமா வால் இறந்தவர் என்று எவரும் இல்லை. பல வீடுகள் வீட்டுக்கு வெளியே சமைப்பார்கள்.வீட்டுக்குள்ளும் சமைப்பவர்கள் புகைபோக்கி வைத்து இருப்பார்கள். எனவே புகையின் தாக்கம் என்பது மிக அரிதே.

தொடர்ச்சியாக பல விளம்பரங்களால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விறகு அடுப்பு தீயது-பழையது என்றும், கேஸ் ஸ்டவ்தான் மிக சிறந்தது-உடலுக்கு நல்லது எனவும் நம்பவைக்கப்பட்டுள்ளது என்பதே நிஜம்.

Tuesday 21 January 2014

பொங்கல் செய்தி


 "கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திருநடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே" ‍
- கவிச்சக்ரவர்த்தி கம்பனின் "ஏர் எழுபது" 

உழவர்களுக்கும் பசுக்களுக்கும் வணக்கங்கள்.. பொங்கல் வாழ்த்துக்கள்.. இதை தமிழர் திருநாள் என்று உழவர்களின் மேல் உள்ள கவனத்தை திருப்பியும், இதிலும் மொழி சார் இனக்கோட்பாட்டை திணித்தும் அரசியல் செய்கிறார்கள். மொழி சார்ந்த பிரச்சனைகளுக்கு மொழி சார்ந்த ஒற்றுமை தேவையே.. ஆனால் அதுபோல பல்வேறு பிரச்சனைகள் பல்வேறு அடையாளங்களுக்காக வந்துகொண்டுதான் இருக்கின்றன (உதாரணம்: மத ரீதி யுத்தம், தேசியம் சார்ந்த யுத்தம்..). ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் ஒவ்வொரு இனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால் நமது உண்மையான அடையாளத்தை தொலைத்து விடுவோம். அதனால் நமது உண்மையான பாரம்பரிய அடையாளம் என்ன என்பதை உணர்த்து அதில் தெளிவாகவும் ஸ்திரமாகவும் இருப்பது அவசியம்.. பல நூற்றாண்டுகள் பொருளாதாரத்தில் அசைக்க முடியா சக்தியாக பாரதம் இருக்க இந்த பாரம்பரியம் தான் அடிப்படை. கலாச்சாரத்திலும், விஞ்ஞானத்திலும் முன்னோடியாக இருந்ததற்கும் இதே பாரம்பரியம் தான் அடிப்படை. 

இன்றைய காலகட்டத்தில் ஆயுத யுத்தங்களை விட அறிவு யுத்தங்கள் தான் உலகம் முழுக்க அதிகம் நடக்கிறது. அறிவு யுத்தத்தின் ஆயுதங்கள் புத்தகங்கள், மீடியா, சினிமா தற்போது பேஸ்புக்.. சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருக்கிறார்கள். யாருடைய எண்ணங்களை படிக்கிறோம், அவர்கள் பின்புலம் என்ன என்பதை உணராமல் கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆக முடியாது; பரதேசியாத்தான் ஆவோம்! தற்போது புத்தகத்திருவிழா என்று நடைபெறும் அனைத்திலும் பெரும்பாலும் விஷங்கள் தான் உள்ளன.

யார் யாரை காப்பது?


"நாம் இயற்கையை காக்கவில்லை. இயற்கை தான் நம்மை காக்கிறது. நாம் இயற்கையை தொந்தரவு செய்யாமல் விட்டால் போதும்; அது தன்னைத்தானே காத்துக்கொண்டு நம்மையும் வாழ வைக்கும்"

இன்று 'இயற்கையை காக்கிறேன்; மரம் நடுகிறேன்' என்ற பேரில் பல கிறுக்குத்தனங்களை செய்து வருகிறார்கள். அவரவர் விருப்பத்திற்கு கண்ணில் பட்ட மரங்கள், வெளிநாட்டு மரங்கள் என்று வாங்கி நட்டுவிட்டு ஓடி விடுகிறார்கள். எந்த விதையை-மரத்தை வளரவிட வேண்டும் என்று மண்ணுக்கு தெரியும். மண்ணிற்கு ஒவ்வாத மரங்களையும் விதைகளையும் நட்டு இயற்கையின் சமநிலையை கெடுக்காதீர்கள். அது வளர விடும் மரங்கள் எந்த பஞ்சத்தையும், சூழலையும் தாங்கி நிற்கும். மேலும் மண்ணையும் வளப்படுத்தும். காட்டில் யாரும் விதை போடவோ, உரம் போடவோ, நீர் விடவோ, முட்டு கொடுக்கவோ காவல் காக்கவோ இல்லை; இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து அங்கு இயற்கையோடு மரங்கள் வாழ்கின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். மரங்களை நடுங்கள், ஆனால் அந்தந்த சூழல்களை புரிந்து கொண்டு நாட்டு வகை மரங்களை மண்ணுக்கேற்ற மரங்களை நடுங்கள். 

இயற்கைக்கு கட்டுப்படாமல் உங்களால் மரங்களைத்தான் வளர்த்திட முடியும் ஆனால் சூழலை வளர்க்க முடியாது. 

"Unless you obey nature, You can grow trees; not Ecosystem"

மீன்கள் துள்ளிய வயல்கள்


சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.




மேலே சொல்லியுள்ள இரண்டும், கந்தர் அலங்காரம் என்னும் நூலில் அருணகிரிநாதர் செங்கோட்டுவேலவரை பாடியது. அதை நன்கு கவனியுங்கள்.. "சேலிற் றிகழ்வயற் செங்கோடை" & "சேலார் வயற்பொழிற்" .. இந்த வாக்கியங்கள் சொல்வது, கெண்டை மீன்கள் துள்ளும் வயல்கள் சூழ்ந்த திருசெங்கோட்டு மலை என்பதாகும்!



அருணகிரியார் மட்டுமல்ல, பாண்டி நாட்டுக்கு பஞ்சம் வந்தபோது அந்த படைக்கே உணவளித்து மொளசியார் அன்னத்தியாகி பட்டம் பெற்றனர். திருச்செங்கோடு சூழ்ந்த மோரூர் மொளசி, ராசிபுரம் உட்பட்ட கொங்கதேச பகுதிகளின் வளம் கண்டு வாய் பிளக்காத வெள்ளையன் இல்லை. திருச்செங்கோடு, இளையபெருமாள், நல்லபுள்ளியம்மன், அத்தனூர் அம்மன், பருத்திப்பள்ளி, மல்லசமுத்திரம், ஏழூர் உட்பட பல கோவில்கள், பட்டக்காரர்கள் மேல் பல இலக்கியங்கள் பாடப்பட்டன. அன்றைய சூழலில் இருந்த நாட்டு வளம், விவசாய வளம் பற்றி கூறியுள்ளதை படித்தால் பிரமிப்பாக இருக்கும்.

இவ்வளவு நீர்வளம் மிகுந்து, நெல் விளைந்த திருச்செங்கோடு இன்று சோளம் முளைக்க நீர் இல்லாமல், ஆயிரம் அடி ரெண்டாயிரம் அடி போர் போட்டு புகை வர காரணம் என்ன..? உள்ளூரிலேயே இருந்துகொண்டு உலக அளவில் அதிக தனிநபர் வருமானம் ஈட்ட வழி இருந்தும் வெளியூர்களுக்கும் வெளிநாட்டுக்கும் அகதிகளாக செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட யார், ஏன் காரணம்?

திருச்செங்கோடு, ராசிபுரம் சூழ்ந்த பகுதிக்கு நீரோட்டம் என்பது கொல்லிமலை தொடர், ஏற்காடு சேர ராயன் மலைத்தொடர் (சேர்வராயன் அல்ல) போன்ற மலைகளில் அன்றாடம், நீர் மேகங்கள்  மரங்களால் கசியச்செய்யப்பட்டு, அவை ஓடைகளாகவும், நிலத்தடி நீரோட்டமாகவும் வந்து சிறு ஆறுகள் உற்பத்தியாகி பெரும் ஏரிகளை நிரப்பி பின்னர் நதிகளில் சங்கமித்தன. இந்த மரங்களை அழித்து காபி-டீ, தைல மரங்கள் வந்ததுதான் மிகப்பெரிய அடி. நீரை கசிய வைக்க பால் மரங்கள் இன்றி போனது. அந்த ஓடைகள், சிறு நதிகள் மற்றும் நீரோட்டம், நரம்புகள் போல ஓடி நிலங்களை வளப்படுத்தின. பாரம்பரிய நிர்வாகிகளுக்கு தெரிந்த நீர் மேலாண்மை வெள்ளைக்காரனுக்கு ஜால்ரா போட்டவர்களுக்கும், அவர்கள் பின்னர் வந்த தற்போதைய சர்காருக்கும் தெரியாமல் போனது. பல ஏரி குளங்கள் விழுங்கப்பட்டன. ஓடைகள், ஆறுகளின் எச்சங்கள் இன்றளவும் உள்ளன. ஏரிகள் தூர வாராமல் கிடக்கின்றன. ராசிபுரத்தில் ஓடிய சங்குமாநதி, ஏழூர் பிடங்குமாநதி, பொன்னியாறு போன்ற நதிகள் என்னவாயின என தெரியவில்லை. அல்பமாக சில காண்டிராக்ட்களும், சிற்சில பதவிகளும், சர்க்காரில் சர்டிபிகேட் சீட் வாங்கும் சில்லறை சலுகைகளையும் நமக்கு லஞ்சமாக கொடுத்து சுயசார்போடு வாழ தேவையான முக்கிய விசயங்களை முதுகெலும்பு முறிப்பது போல முறித்து விட்டார்கள்.


முன்னோர்கள் பலரும், பட்டக்காரர் முதல் தேவதாசிகள் வரை,  ஏரி குளங்கள் வெட்டுவதை, வெட்டியதை காப்பதை தங்கள் தர்மமாக கடமையாக கருதினர். தொண்டைமாக்கவுண்டர் மட்டுமே ஏழு ஏரிகளை வெட்டி அதன் காரணமாக வந்த பிரச்சனையால் தனது உயிரை இழந்தார். ஏழூர் ஏரி வெட்ட கற்பகாயி, செண்பகாயி என்ற தேவதாசிகள் பட்ட இன்னல கொஞ்ச நஞ்சமல்ல. பெருமை பேசவும், விழா கொண்டாடவும் மட்டுமே நினைவு கூறும் முன்னோர்களின் சாதனைகள் அதன் நோக்கங்களையும் சிறிது சிந்திப்போமானால் விடிவு பிறக்கும்.





இன்று மீண்டும், மலைத்தொடர்களில் அந்தந்த மரங்களை பெருக்கி, ஓடைகளை சீரமைத்து, ஏரிகளை தூர்வாரி செம்மைபடுத்தவில்லையெனில் சிரமம்தான். இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் சொந்த மண்ணில் வாழும் வழி ஏற்படாது. சமூகத்தலைவர்களை, பெரிய மனிதர்களை குடைய வேண்டிய நேரமிது.

இன்று உள்ள பாஸிடிவான ஒரே விஷயம், முயற்சி எடுத்தால் இவை அனைத்தையும் செய்து முடிக்கும் வாய்ப்புக்கள் வலுவாகவே உள்ளன என்பதுதான்.

Monday 20 January 2014

கோயில்களின் விடுதலை போராட்டம்

போன அரை நூற்றாண்டாக, அரசியலும், அறநிலையாத்துறையும் கோவில்களில் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. திப்பு, மாலிக் கபூர் மற்றும் முகலாயர்கள் காலத்தில் கூட கோவில்களில் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்குமா என்று எண்ணும் அளவு கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததால் ஸ்லோ பைசனின் விஷத்தை மக்கள் உணர இயலாது போய்விட்டது. அதை யாரேனும் உணர்த்த முன்வந்தால் மொழிச்சாயம் சாதிச்சாயம் பூசி அவர்கள் முயற்சிகளை நீர்த்துப்போகச் செய்ய முற்போக்கு புரட்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டு நிதியில், திடீர் திடீர் என முளைக்கும் சர்ச், மசூதி போன்றவற்றில் இவர்கள் எந்த புரட்சியும் செய்ய துணிவதில்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள கோயில்கள் மட்டும் கண்ணை உறுத்துவது ஆச்சரியமளிப்பதுதான்.


கோவில்களின் இழப்பு என்று சொல்லும்போது முதலில் மக்கள் பொருளாதார ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அதைவிட மிக நுணுக்கமான, பேராபத்தான இழப்பை கவனத்தில் கொள்ளவே இல்லை.  பாரத/தமிழக வரலாறுகளில் கோவில்களை தர்ம நிலையங்களாக எண்ணி,  உயிரையும் கொடுத்து காக்க துணிந்த மக்களின் மனோநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அது. தற்கால தீயசக்திகள், கோவில்களை சர்ச், மசூதி போல ஆன்மீகத்திற்கு முன்னுரிமை தராது, கோவில்களை ஒரு சமூக-அரசியல்-மொழி  உட்பட பல்வேறு காரணிகளை கொண்டு பாப்புலாரிட்டிக்கான களமாக மாற்றி ஒரு பொது இடம் போல எண்ண வைத்து விட்டார்கள். கோவில்களில் எவ்வளவு தவறுகள் நடந்தாலும் அதை சகித்து கொண்டு இறைவனை தரிசித்து வர மக்களை பழக்கி விட்டதுதான் மிக பெரிய இழப்பு. கோவில்மேல் மக்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி தளர்ந்து போனதுதான் பேரிழப்பு.

இரண்டாவதாக விலைமதிப்பில்லா புராதன சின்னங்களை, சிற்பங்களை, சிலைகளை, கல்வெட்டுக்களை-அழித்தும், கடத்தியும் நாசம் செய்து விட்டார்கள். பன்னாட்டு மத அரசியல் மற்றும் கீழ்த்தரமான வணிக நோக்கங்களை நிறைவெற்றிதான் வெளிப்பாடு. இவற்றை முறையாக தொல்லியல் துறை உதவியோடு கணக்கெடுத்தால் சுவிஸ் வங்கி பணத்தை விட பல மடங்கு கைவிட்டுப்போனது தெரியும்.

மூன்றாவதாக கோவில்களின் சொத்துக்கள், நிதிகள் என கணக்கு வழக்கில்லாமல் முறையற்ற வழியில் செலவிடப்பட்டது. பக்தர்கள் இறைகாணிக்கை செலுத்துவதன் நோக்கம் என்ன என்பது துளியும் கவனத்தில் கொள்வது இல்லை. சர்ச் மசூதி போல, கோயில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கிடையாது.  கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடிகள் பணம் எப்படியெல்லாம் செலவிடப்பட்டது-கொள்ளையடிக்கப்பட்டது என்று உணர்ந்தவர்கள் யாரும் தற்போது உண்டியலில் பணம் போடுவதில்லை. 

நான்காவதாக, கோவில்களுக்கு என்று இருக்கும் மரியாதைகள், முறைகள், ஆகமங்கள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. நாட்டு பசுவின் பால் தயிர் மட்டுமே, பசுஞ்சாண திருநீறு மட்டுமே, செராமிக் விளக்கு கூடாது, மடப்பள்ளி பிரசாதம் மட்டுமே, கோயில் கருவறைக்குள் கெமிக்கல் கற்பூரம் கூடாது, டைல்ஸ் பதிக்க கூடாது என எண்ணற்ற விதிகள் மறக்கடிப்பட்டன. இப்படித்தான் முறையாக இருக்க வேண்டுமா என்று அறியாத அளவு மக்களை மறக்கடித்து உள்ளார்கள். இதன் உச்சம், கோவில்களுக்குள் பிரியாணி-சாராய விருந்து நடத்தும் அளவுக்கு கைமீறிப்போனதுதான். 

இங்கே குறிப்பிட்டது மிக கொஞ்சம், மிக சுருக்கம். ஒவ்வொரு கோவிலிலும் நடந்த அக்கிரமங்களை தொகுத்து புத்தகமே எழுதலாம். பலர் எழுதியும் உள்ளார்கள். வேண்டுவோர் கேளுங்கள் தருகிறேன். சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலை பீரங்கி கொண்டு தகர்க்கனும் னு சொன்ன பாரதிதாசன் என்ற காட்டுமிராண்டியை ஹீரோவாக கொண்டாடும் சித்தாந்தங்கள் ஆட்சியுரும் சமூகத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?. இவற்றை எல்லாம் நான் எங்கோ ஏட்டில் படித்து எழுதவில்லை. எங்கள் மாவட்டத்தில் நானே கண்ணார பல கோவில்களில் நடந்த அக்கிரமங்களை கண்டுள்ளேன். ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிலக்காயி கோயில், நசியனுர் சிவன் கோயில்,  வள்ளியரச்சல் நாட்ராயன் கோயில், சேவூர் கோயில் போன்றவை அவற்றில் சில. இந்த கோயில்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு பிறகு வாதாட வாருங்கள்.

இப்படியான சூழலில் சிதம்பரம் தீர்ப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. மாபியாக்களிடம் இருந்து கோயில்களை மீட்க ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இதற்கு மீண்டும் மொழிச்சாயம், சாதிச்சாயம் பூசி அரசியல் செய்து கூவுபவர்கள் கூவிக்கொண்டே இருக்கட்டும். ஆனால் பொதுமக்கள் இந்த தீர்ப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

Tuesday 14 January 2014

டாய்லெட் - சுகாதார சீர்கேடு


கழிப்பறைகள் சுகாதார வசதியா? சீர்கேடா..?
-------------------------------------------------------------
இயற்கை மூலமாக கிடைத்த உணவும், உடலும் அதன் பணி முடிந்ததும் மீண்டும் இயற்கையோடு கலந்துவிட வேண்டும். அதை தடுப்பதும் தாமதப்படுத்துவதும் இயற்கையை-உயிரியல் சுழற்சியை மீறிய செயலாகும். 

நம் முன்னோர்கள் தினசரி காலை கடனை கழிக்கையில் சிறு குழி தோண்டி பின் மூடி செல்வர். இதனால் இயற்கைக்கும் மண்ணுக்கும் மனிதருக்கும் பாதிப்பின்றி இருந்தது.

தற்போது கழிவறை என்று ஒன்றை செலவழித்து கட்ட வேண்டும். அதுவும் வீட்டுக்குள்ளேயே கட்டினால் பெருமை. அந்த கழிவுகளை வெளியேற்ற தனியே சாக்கடை, அதை கட்ட பல ஆயிரம் கோடி டெண்டர், அந்த சாக்கடை வழியாக கொசு மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நாடெல்லாம் பல நோய்கள அதை தீர்க்க லட்சகணக்கான கோடிகளில் மருந்து-மருத்துவ வணிகம்!. இவை போதாது என்று செப்டிக் டேங்கில் தேங்கும் கழிவால் மீத்தேன் உற்பத்தியாகி அதுவும் சுற்றுசூழலை பாதிக்கும்.

யோசித்து பாருங்கள் நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 50% கிராமங்களில் உள்ளனர். (தற்போதைக்கு கிராமத்தை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வோம்) குறைந்தபட்சமேனும் கணக்கிட்டு பார்த்தாலும் ஒரு நாளைக்கு மனித திடக்கழிவு மட்டும் 2.4 லட்சம் டன் உரம் மண்ணுக்கு சேரும். இதே அளவு உரத்தை இறக்குமதி செய்ய எத்தனை ஆயிரம் கோடிகள் நாம் செலவு செய்ய வேண்டும்?? இன்று மாநகராட்சி-நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மண்ணுக்குள் நடக்க வேண்டிய சுழற்சிகள் செப்டிக் டேங்கில் நடப்பதால் பல தீங்குகள் நடக்கிறது. தனியார் செய்ததை தற்போது அரசு செய்கிறது அவ்வளவே, ஓதனால் இயற்க்கைக்கோ மக்களுக்கோ புதிதாக பெரிய நன்மை என்று எதுவும் இல்லை.



கழிவறை என்பது ‘சுகாதார’ வசதி என்று நம்ப வைத்து அது இல்லையேல் அவமானம் என்றும் நம்ப வைத்துள்ளனர். இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசாங்கம் செய்கிறது. மக்களாகிய நாம் தான் இதை புரிந்து செயல்பட வேண்டும்!

வசதி என்பது அனைத்தும் சரி என்பதோ, சுகாதாரம் என்பதோ கிடையாது. இதை மனிதன் புரிந்துகொள்ளும்போதுதான் இயற்கை கை கொடுக்கும்!

பின்குறிப்பு: நம் முன்னோர்கள் கழனியையே கழிவறையாக பயன்படுத்தினர். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று சமூகத்தை குறை கூறி திட்டமிட்ட சதி போல, கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்கு நம் முன்னோர் உலகில் வேலை இல்லை!

பொங்கல் விழா செய்தி

"கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திருநடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே" ‍
- கவிச்சக்ரவர்த்தி கம்பனின் "ஏர் எழுபது" 

உழவர்களுக்கும் பசுக்களுக்கும் வணக்கங்கள்.. பொங்கல் வாழ்த்துக்கள்.. இதை தமிழர் திருநாள் என்று உழவர்களின் மேல் உள்ள கவனத்தை திருப்பியும், இதிலும் மொழி சார் இனக்கோட்பாட்டை திணித்தும் அரசியல் செய்கிறார்கள். மொழி சார்ந்த பிரச்சனைகளுக்கு மொழி சார்ந்த ஒற்றுமை தேவையே.. ஆனால் அதுபோல பல்வேறு பிரச்சனைகள் பல்வேறு அடையாளங்களுக்காக வந்துகொண்டுதான் இருக்கின்றன (உதாரணம்: மத ரீதி யுத்தம், தேசியம் சார்ந்த யுத்தம்..). ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் ஒவ்வொரு இனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால் நமது உண்மையான அடையாளத்தை தொலைத்து விடுவோம். அதனால் நமது உண்மையான பாரம்பரிய அடையாளம் என்ன என்பதை உணர்த்து அதில் தெளிவாகவும் ஸ்திரமாகவும் இருப்பது அவசியம்.. பல நூற்றாண்டுகள் பொருளாதாரத்தில் அசைக்க முடியா சக்தியாக பாரதம் இருக்க இந்த பாரம்பரியம் தான் அடிப்படை. கலாச்சாரத்திலும், விஞ்ஞானத்திலும் முன்னோடியாக இருந்ததற்கும் இதே பாரம்பரியம் தான் அடிப்படை. 

இன்றைய காலகட்டத்தில் ஆயுத யுத்தங்களை விட அறிவு யுத்தங்கள் தான் உலகம் முழுக்க அதிகம் நடக்கிறது. அறிவு யுத்தத்தின் ஆயுதங்கள் புத்தகங்கள், மீடியா, சினிமா தற்போது பேஸ்புக்.. சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருக்கிறார்கள். யாருடைய எண்ணங்களை படிக்கிறோம், அவர்கள் பின்புலம் என்ன என்பதை உணராமல் கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆக முடியாது; பரதேசியாத்தான் ஆவோம்! தற்போது புத்தகத்திருவிழா என்று நடைபெறும் அனைத்திலும் பெரும்பாலும் விஷங்கள் தான் உள்ளன.

Friday 3 January 2014

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவம்

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவம் உணர்ந்து இன்று பலரும் நாட்டுப்பசுக்களை வாங்கி பயன் பெற துவங்கியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் நாட்டு பசுக்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து வாங்குகிறார்கள் மக்கள்.. அதன் பொருளாதார காரணங்களை கடந்து... எனவே வருங்காலத்தில் நாட்டுப்பசுக்களை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல..நாட்டு பசுக்களே நம் தெய்வங்கள்.. ஆதார சக்திகள்.. நாட்டு பசு வாங்குகிறேன் என்று குஜராத் கிர் பசுவை வாங்குவதும் முட்டாள்தனம் தான்.. அவரவர் வாழும் பகுதிக்கான பசுவை வாங்க வேண்டும்.. அதுவே முக்கியம்..

இதோ இன்று புதிதாக வாங்கப்பட்ட பசு.. எவ்வளவு பேர் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் களத்தில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க இயலாது..!

பசுக்கள் வெறும் பால் கொடுக்கும் மெஷின்கள் அல்ல.. பொருளாதார-தொழில் உபகரணம் அல்ல.. அவை மக்களின் வாழ்வோடும், உணர்வோடும், கலாசாரத்தொடும் இணைந்தவை.. காடுகளாக கிடந்த பூமிகளை விளைநிலங்களாக-நாடுகளாக வளப்படுத்தியத்தில் மனிதனை விட பசுக்களுக்குத்தான் பெரும்பங்கு உண்டு..! (குறிப்பு: பசு என்றாலே நாட்டு பசு மட்டும்தான் சீமைமாடுகள் அல்ல)