Saturday 21 January 2023

காஞ்சிக்கோயில் PRM @ P.R.முத்துசாமி கவுண்டர்

ஈரோடு காஞ்சிகோயில் பள்ளபாளையம், பகுதியை சேர்ந்தவர் பி ஆர் முத்துசாமி கவுண்டர். துவக்கத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக வேலை பார்த்தவர், அவரது இயல்பும் குணமும் கண்டு மக்கள் தேர்தலில் நிற்க சொல்லி வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து பல தேர்தல்களை வென்று பல காலமாக ஊராட்சி தலைவராக இருந்தார். பொறுமை.. நிதானம்.. அனைவரையும்  அரவணைத்து செல்லும் பாங்கு.. தன் ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களையும் தன் குடும்பம் போல் நினைத்து அவர்கள் வீட்டு நல்லது கெட்டது விசேஷங்களை முன் நின்று நடத்துவது.. பொதுவாழ்வில் தூய்மை.. அதிகார ஆணவம் இல்லாமல், யாரையும் இம்சிக்காமல், அச்சுறுத்தாமல் வாழ்ந்தவர்.. சம்பாதிக்கவும், சம்பாதித்தை காப்பாற்றிக் கொள்ளவும் அரசியலுக்கு வரும் அரக்கர்களால் அலைக்கழிக்கப்பட்டு, அல்லல் படும் மக்கள் வாழும் காலத்தில் இவர் போல் பெரியோர்கள் வாழ்வு ஆச்சரியப்படுத்துகிறது. கீழ்பவானி பாசன சங்க தலைவர், கூட்டுறவு வங்கி தலைவர், ஊர்  தர்மகர்த்தா, கொங்கு வேளாளர் பள்ளி கௌரவ தலைவர், தம்பி கலைஐயன் கோவில் அறங்காவலர் குழு தலைவர்.. என பல பதவிகள் அவரைத் தேடி வந்து அலங்கரித்தன. வாழ்வின் இறுதிவரை ஒரு சிறு குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்தவர். தன் குடும்ப சொத்து பெருமளவு விற்று பொதுக் காரியங்களுக்கு செலவு செய்து இறுதியில் வெறும் இரண்டு ஏக்கரை மட்டுமே குடும்பத்திற்கு விட்டுச் சென்றார். அவர் மறைந்து இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டது. 


இன்று அவரது மகன் காஞ்சிகோயில் திரு. கார்த்தி என்பவர் எண்ணெய் செக்கு தொழில் செய்து வருகிறார். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில வருடங்கள் பழகிய போது அவரது பேச்சு இயல்பே மிகவும் வித்தியாசமாக பெருந்தன்மையாக இருந்ததால், நானே அவரிடமும் அவர் ஊரிலும் கேட்டு பெற்ற தகவல்கள் இவை.. நல்ல குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்லிலேயே அவர்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம் என்ற குறளுக்கு மிகச்சிறந்த உதாரணம் கார்த்தி அண்ணன்.. இன்று அவர் சம்மதித்தால் எந்த கட்சியிலும் அவருக்கு பதவியும் உண்டு சீட்டும் உண்டு.. அந்த வட்டாரத்தில் அவர் தந்தையார் சம்பாதித்து வைத்த மரியாதை எப்படி எத்தனை கோடி செலவு செய்தாலும் அந்த மரியாதையை எவனும் சம்பாதிக்க முடியாது. மதிப்பும் மரியாதையும் பணத்தால் மட்டும் வருவதல்ல; குணம் அணுகுமுறை எந்த சூழ்நிலையிலும் மாறாமல் பல காலம் தவம் போல் வாழ்வதால் ஏற்படுவது..

இன்றைய  உலகிலும் அந்த ஊர் மக்கள் இந்த குடும்பத்தை மறக்காமல் இருக்கிறார்கள். பள்ளபாளையம் பேரூராட்சியாகிவிட்டது. இன்று அவரது மருமகள் பேரூராட்சி கவுன்சிலர், அதுவும் சுயேட்சையாக எதிர்ப்பில்லாமல் அன்ன போஸ்டாக ஜெயித்தவர். அவரது மகன் கொங்கு வேளாளர் பள்ளி தலைவர் கூட்டுறவு சங்கத் தலைவர்.. அந்த ஊர் மக்கள் பெரியவர் முத்துசாமி கவுண்டருக்கு திருவுருவச்சிலை எழுப்பி நினைவு மண்டபம் கட்டியுள்ளார்கள்.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்