Tuesday, 31 December 2013

மரவேளாண்மையாளர் இ.ஆர்.சதாசிவம்


மரவேளாண்மையாளர் இ.ஆர்.சதாசிவம்
------------------------------------------------------
மாதந்தோறும் தமிழகமெங்கிலுமிருந்தும் மரம் வளர்ப்பவர்கள் மட்டும் ஒன்று கூடுகிறார்கள். தங்களை மரவேளாண்மையாளர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். எந்த மண்ணில், எந்த மரத்தை வளர்த்தால் எத்தனை ஆண்டுகள் கழித்து எத்தகைய பயன்களைத் தரும்? அவற்றை வெட்ட எந்த வகையில் வனத்துறையினரை அணுகி அனுமதி கேட்கலாம்-? நாம் வளர்க்கும் மரங்கள்விளைச்சல் காலத்தில் தீவிபத்து ஏற்பட்டோ, பெரும் மழை, புயல் காரணமாகவோ அழிந்தால் நஷ்டம் இல்லாமல் காப்பீடு பெறுவது எப்படி?’ என்றெல்லாம் நிறைய விவாதிக்கிறார்கள். 

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது செங்கிப்பட்டி. இங்கிருந்து பத்து கி.மீட்டரில் உள்ளது. மு.சோலகம்பட்டி. இங்கே மிகப்பெரும் மரப்பண்ணை நடத்தி வருகிறார் டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். இங்கேதான் சென்ற நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் மரவேளாண்மையாளர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. 



இ.ஆர்.ஆர்.சதாசிவம் பற்றி ஒரு முன்னோட்டம்:
1997-ஆம் ஆண்டு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘இந்திரபிரியதர்சினி விருது’ பெற்றவர். ‘எந்த மண்ணில் எந்த மரம் வளரும். அந்த மரத்தின் பயன்கள் என்னென்ன? அந்த மரங்கள் எத்தனை வருடத்தில் என்னென்ன பலன்களை தரும்-? பாலை நிலத்திலும் கூட வளரும் மரவகைகள் உண்டு. அவற்றை அங்கே வளர்ப்பதன் மூலம் பாலைவனத்தையும் சோலைவனமாக்கலாம். தரிசாகப் போன நிலங்களில் கூட மரங்களை நட்டு மண்ணை இளகியத் தன்மை பெற வைப்பதோடு அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலத்தடி நீரை வெகுவாக மேலே கொண்டு வரலாம். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, பூமியில் ஏற்கெனவே இருந்த தட்பவெப்பநிலையை கொண்டு வந்து பூமி சூடாவதைத் தடுக்கலாம். கழிவுநீர், சாயக்கழிவுநீர், மொஸைக் டைல்ஸ் உருவாக்கி வெளியேற்றப்படும் கழிவு நீர்களில் கூட வளரத்தக்க மரங்கள் உண்டு. இப்படி மரங்களை வளர்ப்பதன் மூலம் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் மக்களை அங்கேயே தங்க வைத்து பூமியை சமநிலைப்படுத்த முடியும். மக்கள் இழந்த வாழ்வினைத் திரும்பப் பெற முடியும்!’ என்பன போன்ற கருத்துக்களை வலியுறுத்தி பல்வேறு ஆய்வுகளை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரி கிராமங்களை உருவாக்கியதற்காக இந்திய அரசு இவருக்கு அந்த விருதினை அளித்தது. 

அதன் தொடர்ச்சியாக கோவையில் சிறுவாணி, கணுவாய், போளுவாம்பட்டி, திருப்பூர், பல்லடம், உடுமலை போன்ற பகுதிகளில் பல்வேறு ஆலைகளுக்கு சென்று மரப்பயிர்களை உருவாக்கி தந்திருக்கிறார். வனத்துறையினருக்கும், மரம் வளர்ப்போருக்கும், பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் கல்வியாளர்கள், கல்விநிலையங்களுக்கும் ஆலோசகராக இருந்து வந்துள்ளார். “எனது ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புக்களையும் வெறும் வார்த்தைகளால் சொன்னால் புரியாது. வெளிவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி அதன்மூலம் உருவாக்கப்பட்ட காடுகள் கூட பெரிதாக நான் கனவு கண்ட உலக காடுகள் மாதிரி இல்லை.” என்கிறார்.

அதை முழுமையாக தானே உருவாக்கிக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கோவையிலிருந்து சோலகம்பட்டிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்தான் சதாசிவம். அங்கே பல்வேறு நண்பர்கள் துணையுடன் நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை வாங்கினார். இந்தப் பகுதி அந்த காலத்தில் தரிசாக மட்டுமல்ல. செடி, கொடிகள் முளைக்கக்கூட லாயக்கற்ற பூமியாக இருந்தது. 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு வந்து நிலம் வாங்கி மண்பரிசோதனை செய்து அதற்கேற்ப மரநாற்றுக்களை கொண்டு வந்து நட ஆரம்பித்தார். சுற்றுப்பகுதியில் வேலையற்று இருந்த நூற்றுக்கணக்கான எளிய மக்களைப் பணிக்கு அமர்த்தி வேலையும் கொடுக்க ஆரம்பித்தார். நவீன கருவிகளை உள்நாடுகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நண்பர்கள் உதவியுடன் வரவழைத்து பிரம்மாண்டமான பல ஏக்கர் பரப்பளவில் குட்டைகளை வெட்டினார். மழைக்காலங்களில் நிலத்தில் விழும் நீர் அங்கே முழுமையாகத் தேங்கும்படி செய்து நிலத்தடி நீரை ஊற்றெடுக்க வைத்தார். விளைவு, இப்போது இவர் நிறுவிய பண்ணையில் தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி, வேங்கை, குமிழ் வேம்பு, ஆச்சான், கொடுக்காப்புளி, மா, பலா என்று நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் கிளைப்பரப்பி நிற்கின்றன. ஒவ்வொரு மரவகையிலும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் விரவிக்கிடப்பதுதான் இங்கே காணக் கிடைக்கும் அழகு. 

இவருடைய நண்பர்கள் இவரின் ஆலோச னைகளைக் கேட்டு அவரவர் இருக்கும் இடத்தில் குறிப்பிட்ட நிலப்பகுதியை ஒதுக்கி, அதில் மரங்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியாக கோவை, மதுரை, சென்னை, திண்டிவனம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல் என்று தமிழகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்துதான் இப்போது மரவேளாண்மையாளர்கள் என்றோர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட மரவேளாண்மையாளர்கள் தங்கள் மரப் பயிர்களை காப்பீடு செய்வது எப்படி என்பதற்கு அதிகாரிகளைக் கூட்டி கலந்தாலோசனை செய்தார்கள்.

நிகழ்ச்சி முழுக்க முழுக்க மரங்களைப் பற்றிய பேச்சே நிறைந்திருந்தது. ஒருவர் தனது காட்டில் இருபது ஏக்கரில் மூங்கில், செஞ்சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை மட்டுமே வளர்ப்பதாகவும் கூறினார். அதில் ஓர் ஏக்கருக்கு 900 தேக்கு மரங்கள் வீதம் நான்கு ஏக்கருக்கு இருப்பதாகவும், இப்போதைய மதிப்பில் ஒரு மரம் இரண்டு லட்சம் வரை கூட போகும், அதற்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?’ என்று கேட்டு அசத்தினார். (கணக்குப்படி 4 ஏக்கருக்கு 3,600 மரங்கள் என்றால் ரூ 7,200 லட்சம் வருகிறது. அதாவது 72 கோடி ரூபாய். அம்மாடியோவ்!

ஆலோசனை வழங்க வந்திருந்த இன்சூரன்ஸ் அதிகாரி, “நாங்கள் வேளாண்மைப் பயிர்களை எந்த இடத்திலும் அது பயன்தரக்கூடிய மதிப்பிற்கு இன்சூரன்ஸ் செய்வதில்லை. மழை வெள்ளத்திலோ, புயல், சூறாவளியிலோ பயிர்கள் சேதமடைந்தால் அதற்கு நீங்கள் செய்திருப்பீர்களே முதலீடு அதற்கு மட்டுமே இன்சூரன்ஸ் செய்கிறோம். அதே முறைதான் இதற்கும் பின்பற்றப்படும். மரப்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது என்பது இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒன்று. வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் கூட அழிந்திருக்கின்றன. அவை முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. நீங்களே மரத்தை பயிர் செய்கிறீர்கள். அதற்கு ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை அளித்து பராமரிக்கிறீர்கள். எனவே இதற்கு ஓர் காப்பீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று டாக்டர் இ.ஆர்.ஆர்.சதாசிவம் கேட்டுக்கொண்டார். எனவேதான் புதிய முறையில் இதற்கென ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை ஏற்படுத்தி வந்து உங்கள் முன் வைக்கிறோம். இதை எந்த அளவு நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ, எந்த அளவு எதிர்காலத்தில் மரவிவசாயிகள் உருவாகி இதை பயன்படுத்த முயற்சிக்கிறார்களோ அந்த அளவு இதன் பிரிமீயத்தொகையும் குறைய வாய்ப்புண்டு!” என்ற தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

இந்த நிகழ்ச்சி முடிந்து இ.ஆர்.ஆர்.சதாசிவம் உருவாக்கியிருக்கும் பண்ணையைச் சுற்றிப்பார்க்க அவரிடம் அனுமதி கேட்டோம். சில இடங் களுக்கு மட்டும் நம்மை அனுமதித்தார். நாம் அங்கே கண்ட காட்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அந்தப் பரந்துபட்ட பிரதேசத்தில் மூன்று பகுதிகளில் பத்து ஏக்கரில் ஒன்று, மூன்று, நான்கு ஏக்கரில் இரண்டு என்று பிரம் மாண்ட குளங்களை ஏற்படுத்தியிருந்தார். மழைக் காலங்களில் பெய்த நீர் அதில் தேங்கி சுற்றிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தியிருந்தது. பண்ணையின் நுழைவுவாயிலிலேயே பெரிய அளவில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவியிருந்தார். உள்ளே செல்ல செல்ல தோட்டங்கள் அல்ல, காடுகளாக நீண்டு கொண்டேயிருந்தன. தேக்கு, சந்தனம், மா, பலா, வேம்பு, வேங்கை, மூங்கில் என்று விதவிதமான மரங்களினூடே ஏதோ வனாந்திரத்திற்குள் செல்வது போன்ற உணர்வே மேலோங்கியது. ஒரு கட்டத்தில், “இதற்கு மேல் வேண்டாம் சார். உள்ளே நானே நுழைய முடி யாது. உள்ளே நிறைய விலங்குகள் இருக்கும். அவற்றின் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம். வாங்க போகலாம்!” என்று திரும்பிக் கூட்டி வந்தார் 
“நாம் இழந்துவிட்ட நம் உயிர்ச்சூழல் மண்டலத்தைத் திருப்பி எடுத்துவிட்டால் போதும். நோய் நொடியில்லாமல் அற்புதமாக வாழலாம். அதற்கு அத்தனைப் பேரும் மரம் வளர்க்க வேண்டும்!” என்று மரங்களின் மகத்துவம் உணர்த்துகிறார் இவர்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். மனதுக்கு ஒரு மாதிரி இருந்தால் நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் காடுகளுக்குள் போய் விடுவாராம் சதாசிவம். சின்னவயதில் பல மாதங்கள் கூட காடுகளுக்குள்ளேயே வாசம் செய்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். ‘காடுகள் எனக்கு வாசம் இல்லை, சுவாசம்!’ என்கிறார் உணர்ச்சி பொங்க.

No comments:

Post a Comment