Thursday, 22 May 2014

கிராமங்கள் தன்னிறைவு

தேசம் தன்னிறைவு பெற வேண்டாம்.. 
கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்..

வளர்ச்சி பொருளாதாரம் வேண்டாம்..
கிராமிய-சுதேசி-சாஸ்வத-வளம்குன்றா பொருளாதாரம் வேண்டும்..

குடம் குடமாக விஷப்பால் தரும் சீமைவிருந்தாளிமாடுகள் வேண்டாம்..
எல்லாம் தந்து காக்கும் எங்கள் நாட்டுமாடுகள் போதும்..

செல்போன் டவர்கள் வேண்டாம்..
எங்கள் பனைமரங்கள் வேண்டும்..

ஜீன்ஸ் கோட் சூட் வேண்டாம்..
சுத்தமான ஆறுகள் வேண்டும்..
எங்கள் கைத்தறி வெள்ளைவேஷ்டி போதும்..

விஷமாய் கொல்லும் வெள்ளை சர்க்கரை வேண்டாம்
அமிர்தம் போன்ற பனங்கருப்பட்டி போதும்

டாய்லெட்கள், சாக்கடைகள் வேண்டாம்
கொல்லைப்புறமும, விவசாய பூமிகளுமே போதும்

பீசா பர்கர் பாஸ்ட் புட் வேண்டாம்..
எங்கள் களியும் கம்மஞ்சோறும் போதும்..

நியூ இயர், வேலன்டைன் கொண்டாட்டங்கள் வேண்டாம்
எங்கள் மாரியம்மன், ஆடி நோம்பி கொண்டாட்டங்கள் போதும்

ஷாப்பிங் மால்கள் வேண்டாம்..
எங்கள் மேய்ச்சல் நிலங்கள் வேண்டும்..

பப், பார் எல்லாம் வேண்டாம்
ஏராளம் எங்கள் கிராமிய கலையுணர்வுகள்..

சூப்பர் மார்க்கெட்கள் வேண்டாம்..
எங்கள் நாட்டுவிதைகள் போதும்..

இணையத்தில் அமெரிக்க-லண்டன் நண்பர்கள் வேண்டாம்..
பக்கத்து வீட்டு நண்பன் அறிமுகம் வேண்டும்..

சைல்ட் கேரும் எல்டர் கேரும் வேண்டாம்..
எங்கள் குடும்ப வாழ்க்கை வேண்டும்..

அடுக்குமாடி புறாக்கூண்டுகள் வேண்டாம்..
உறவோட்டம்-உயிரோட்டம் உள்ள குடிசைகள் போதும்..

போலிஸ் ஸ்டேஷன்கள் வேண்டாம்
நன்னெறிகளை விதைக்கும் கோயில்கள் போதும்

சுப்ரீம் கோர்ட் வேண்டாம்
எங்கள் பஞ்சாயத்து அமைப்புக்கள் போதும்

இயற்கையை காயப்படுத்தி வசதியான வாழ்க்கை வேண்டாம்..
இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை போதும்..



Sunday, 11 May 2014

பிறந்தநாள்

பிறந்தநாள் என்பது நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம் நட்சத்திரம் வரும் நாள். நம் மன்னர்கள், ஆழ்வார்-நாயன்மார், பெரியவர்கள் என அனைவருமே இந்த நட்சத்திர முறையையே பின்பற்றினர். 

கொங்கதேசம் கரூரில் வாழ்ந்த எறிபத்தர்-மாசி ஹஸ்தம் 


ராஜராஜசோழன் என்னும் அருண்மொழிவர்மன்-பிறந்தநாள்: ஐப்பசி சதயம் 

கேரளா திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் அவர்கள் பெயரே அவர்கள் பிறந்த நட்சத்திரப்படி சுவாதி திருநாள் உத்தராடம் திருநாள் என்றுதான் இருக்கும். 


சுவாதி திருநாள் ராம வர்மா 
வீட்டின் பெரியவர்கள் ஆசி, கோயில்களில் வழிபாடு, எளியோருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.பிறந்தநாள் விழா என்பது உறவினர் நண்பர் என்று அன்று வீட்டுக்கு வருவோர் ஒவ்வொருவரும், நாட்டு பசுவின் நெய் விளக்கில் ஆரத்தி எடுத்து, திருநீறு இட்டு, அட்சதை போட்டு, வாயார வாழ்த்துவது தான் நம் பாரம்பரிய பிறந்தநாள் கொண்டாட்டம். இனி வரும் நாட்களில் அனைவரும் இதை பின்பற்ற முயற்சிப்போம். 

கோமாளி குல்லா போட்டு, மெழுகுவர்த்தியை வாயில் ஊதி அணைத்து, கேக் வெட்டி, அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளின் ஏக்கத்தை தூண்டி, அவர்கள் பெற்றோருக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தி கொண்டாடும் மேற்குலக பிழைகளை தவிர்க்க முயற்சிப்போம்.

புரட்டாசி திருவாதிரையன்று என் பிறந்தநாள். மார்க் செய்த கட்டுப்பாடுகளால் அக் 16 அன்று வாழ்த்துக்களைப் பெற்றேன். தற்போது பலரும் பாரம்பரிய முறையில் பிறந்த நாள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், மாசிமகம் என்று ஏரளாமான அவதார விசேஷ தினங்களை மாத-நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம். அரசர்கள், மகான்கள் அவர்கள் பிறந்தநாளை இதே போன்று நட்சத்திர அடிப்படையில் கணக்கிட்டு கொண்டாடுவதையும் அறிகிறோம். இவ்வாறு கொண்டாடுகையில் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நாம் பிறந்தபோது இருந்த இடத்திற்கே வந்திருக்கும்.ஆங்கில கேலண்டர் முறையில் தேதி மட்டுமே ஒத்து இருக்குமே தவிர கிரகங்களின்-இயற்கையின் அங்கீகாரமென்று எதுவுமில்லை. வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி.

வாழ்வை புரட்டிப்போட்ட நாள்

சிறு வயது முதலே கல்விச்சாலைகள் என்னை வசீகரிக்கவில்லை. வேண்டாச்சுமை, விரும்பா தொழில் என விட்டு ஓடவும், தட்டிக்கழிக்கவுமே மனம் காரணங்களை தேடி அலையும். புது விஷயங்களை உணர்தலில் இருக்கும் இன்பத்தை நம் கல்விமுறை-கற்பித்தல் முறை வழங்காததால் வந்த வினை. சலிப்பு தட்டிவிடும்படியான பாடங்கள்; யதார்த்த வாழ்வோடு தொடர்பற்று எங்கோ வேற்று கிரக நிகழ்வு போலவும், நடைமுறை வாழ்வோடு ஒப்பிடுவதை நிறுத்தினாலொழிய விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமங்கலாகவும் தெரிந்ததே முதன்மைக்காரணம். என் வாழ்க்கைக்கு உதவும் ஞானம் என்று பள்ளி-கல்லூரியில் கற்றது 10% மீதி 90% வெளியில் தேடி தேடி கற்றவைதான். அதற்காக கல்வி மையங்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி நிலையங்கள் புத்தகங்களுக்கும், தேர்வுத்தாளுக்கும் இடையே மாணவர்களை தயார் செய்யும் சேவையை மட்டுமே செய்கின்றன.

சூழ்நிலை அழுத்தம், அப்பாவின் ஊக்கம், குரு திசை என்று பல காரணங்களால் திடீரென்று படிப்பதில் ஆர்வமேற்பட்டுவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கொஞ்சம் காஸ்ட்லி பள்ளியில் சேர்த்தார். கொடுத்த பணத்திற்கு மார்க்கை குவிக்கும் வெறி வேறு. ஒருவேளை உணவு தியாகம், இரண்டு வேளை அரைவயிறு உணவு, மூன்று மணிநேர தூக்கம் அதற்காக அலாரம் வைத்தால் ஹாஸ்டலே வந்து எழுப்பி விட்டால்தான் எழ முடியும். இத்தனை கொடுமையும் டாக்டராகும் கனவிற்குத்தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். இதன் பலனாக குடல் சல்லடைக் கணக்காக பொத்துப்போய் அல்சரை உருவாக்கிவிட்டது. 

புரியாப்பாடங்களை படிப்பதில்லை என்ற என் ஜென்மசபதத்திற்கு ஒத்துவருவது போல அனைத்து பாடங்களையும் புரிந்து அனுபவித்துப் படித்தேன். கடைசி ஐந்து ரேங்க்களில் ஆடிக்கொண்டிருந்த நான் பள்ளியில் சக நண்பர்கள் உடனே அணுகும அளவில் பிசிக்ஸ் சிக்கல்களை எளிமையாக புரியவைக்கும் அளவு தேர்ந்தேன். இதுவும் வெளியில் டியூசன் மற்றும் உள்ளார்ந்த தேடலின் விளைவே. இவையனைத்துக்கும் மேலாக ஸ்டடி லீவில் ரூமை விட்டு வெளியே வராமல் ஒரு மாதம் சிறைவாசம் இருந்தேன். “எனக்கு ஒரு நூல்மில்லே எளுதிவெச்சாலும் என்னால ஒரு நாள்கோட இருக்கமுடியாது; இதுவே எனக்கு பெருசா தெரீது கண்ணு” என்று சொல்லி என் பதற்றத்தை குறைக்க முயன்றார். 

ரிசல்ட் வந்தது 91%. மருத்துவம் கிடைக்காது என்று கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. ஆயினும் என் உழைப்பு திறமை மேல் எனக்கு முழு திருப்தி இருத்தால் அப்போதே தேர்வு முறையின் குறைபாடு இது என்று உறுதியாக நம்பினேன்.

என்னைவிட வசதியான என் நண்பன்; தினமும் இரண்டு மணிநேரம் கூட படிக்க மாட்டான்; 69% மதிப்பெண்; மெடிக்கல் சேர்ந்தான். இட ஒதுக்கீடு!. அன்றோடு பத்து உளுத்துப்போன கல்விமுறையும் திராவிட சினிமாத்துறையும் மனதில் ஏற்றி வைத்த சமூகத்திற்கான பிம்பம் உடையத்துவங்கியது. சமூகச்சூழல் குறித்த தேடல் துவங்கியது. 

அப்போதைக்கு பிராப்தமில்லை என்று உடனே மனம் தெரிவித்தாலும், இதற்கான ரியேக்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியது. கோவையை கடக்கையில் மருத்துவக்கல்லூரியை பார்த்தால் தொண்டை அடைக்கும். மனதில் ஆக்ரோஷம் ஆறாது. தூக்கமில்லா இரவுகள். பெரியமனிதர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை கண்டால் இட ஒதுக்கீடு குறித்து கடுமையாக விவாதிப்பேன். “நம்பு நாட்டோட சமூக வரலாற்ற பத்தி எங்கட்ட சொல்ற மாதிரி நோவுக்கு சொல்லி புரிய வெப்பீங்களா..? நான் ரிசர்வேசன் ல டாக்டருக்கு படிச்சேன் னு சொன்னா வைரஸ் புரிஞ்சிகிட்டு ஒடம்ப உட்டு வெளிய வந்துருமா..? நோயாளி சாவ மருத்துவம் தடுக்குமா இல்ல ரிசர்வேசன் தடுக்குமா?” என்று பல பதில் சொல்ல முடியா கேள்விகளை செருப்பு என்று எண்ணி வீசி ஆதங்கம் தணிப்பேன்.

எந்த சாதியாக இருந்தால் என்ன? சமூகத்தில் பின்தங்கியோர் என்றால் அவர்கள் தேர்வில் போட்டிபோட திறமையை வளர்த்துவிட முன்னுரிமை தந்திருக்கலாமே தவிர,தேர்வு முடிந்தபின் திறமையுள்ளவனின் இடத்தை பறித்து கொடுக்கக்கூடாது. மீன் பிடிக்க கற்றுத்தரலாம், இன்னொருத்தன் பிடித்த மீனை பிடுங்கி தர கூடாது. இந்த அராஜகத்தால் தேர்வு என்று ஒன்று எதற்கு நடத்தப்பட வேண்டும்? அதற்கு மாணவர்கள் ஏன் உயிரை கொடுத்து படிக்க வேண்டும்?? குலுக்கல் முறையில் ஒவ்வொரு சாதிக்கும் இத்தனை பேர் என்று கொடுத்துவிட்டு வேறு வேலையை பார்க்கலாமே? 

இன்றைக்கு உள்ள மனோநிலையில் நல்லவேளை எம்.பி.பி.எஸ். படிச்சு வெள்ளைகோட் போட்ட “மருந்து ஆலோசகரா” மாறாம போனேன் என்று தோன்றுகிறது. மருத்துவப்பிரதிநிதிகளுக்கும் பெரும்பான்மை  டாக்டர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருவருமே பார்மா கம்பெனிகளுக்கு வேலை செய்பவர்கள் தான். மருத்துவக்கல்வியே அதைநோக்கித்தான் பாடங்கள் எடுக்கின்றன என்பது எனது மருத்துவ நண்பர்களின் கூற்று. நம் நாட்டின் மக்கள்தொகைக்கும் இங்கே உள்ள திறமையான மருத்துவ நிபுணர்கள்களுக்கும் பொருந்தா எண்ணிக்கைதான். இந்த பாவக்குழியில் விழாமல் தப்பினேன். சமாதானம் சொல்லிக்கொள்ள எதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.

சிறந்த மதிப்பெண்களுடன் வெளிவர உங்களுக்கு விஷயஞானம் அதிகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. புரிதலுக்கு அவ்வளவு குறைவான இடமே நம் தேர்வு முறைகள் வழங்குகின்றன. பத்து வருடங்கள் முன்பு மாநில முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் இன்றைய நிலையை எடுத்துப்பார்த்தால் நம் கல்விமுறையின் லட்சணம் விளங்கும். நாமக்கல் பள்ளிகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, நம் மொத்த கல்விக்கூடங்களும் இதே நிலையில் தான் இருக்கின்றன. வீரியத்தில் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும், அவ்வளவுதான். 

இதனாலேயே ‘நன்கு’ படித்த-உலகறிவு மிக்க தம்பதியர் மாற்று கல்வி முறைக்கு திரும்பி வருகிறார்கள். வீட்டுக்கல்வி முறை இன்று வேகமாக பரவி வருகிறது. பள்ளியில் படித்த மக்கள்தொகையில் சாதனையாளர்கள் சதவீதம், வீட்டுக்கல்வியில் படித்த சாதனையாளர் சதவீதத்தை ஒப்பிட்டால், வீட்டுக்கல்வி பல மடங்கு அதிக சாதனையாளர்களை உருவாக்கும் சக்தியுடையது என்று புரிய வரும். இருந்தாலும் பெரும்பான்மையோடு ஒட்டிக்கொண்டு போகும் குணம் நம்மை வீட்டுக்கல்வி முறையில் இருந்து தடுக்கிறது. காரணம், நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பும் இருக்கும் பெரும்பான்மை மனிதவளத்தின் பொதுத்தன்மைக்கு ஏற்ப தங்களை நெகிழ்த்துகொள்வதுதான். ஆனால் இந்நிலை சமீப காலமாக மாறி வருகிறது. திறமைக்குத்தான் முதலிடம்; சான்றிதழ்களுக்கு கூட முக்கியத்துவம் தருவது பல இடங்களில் குறைந்து வருவதும் நிதர்சனம். 

மேலைநாட்டு கல்விச்சாலைகளிலும், நிறுவனங்களிலும் நம்மவர்கள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் தடுமாறும் சூழல் இந்த தவறான கல்வி பயிற்சியின் கொடையே. நல்ல அறிவுள்ள இந்திய மூளைகளுக்கு தவறான தீனிகளை புகட்டியதால் வந்த வினையே எனலாம்.

சேர்க்கை முறையிலும், கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் லாபிகளால் முடிவு செய்யப்படகூடாது. அதுவரை குழந்தைகளையோ, பெற்றோர்களையோ, பள்ளிகளையோ குற்றம் சொல்லிப்பயனில்லை. அவர்கள் சூழ்நிலைக் கைதிகள். மாணவர்களே, மார்க் அதிகம் வாங்கினால் அது உங்களுக்கு ஒரு மன நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்று மட்டும் எடுத்துக்கொண்டு கல்லூரியிலும் உழைப்பை தொடருங்கள். குறைந்துபோனவர்கள், நம் கல்விமுறையில் நம் திறமையை அளவிடும் முறையில் குறைபாடு என்று உறுதியாக நம்புங்கள். பாரம்பரிய கல்விமுறைக்கு அனைவருமே கவனத்தை திருப்ப வேண்டிய காலகட்டமாகும்.

Thursday, 1 May 2014

அட்சய திரிதியை

இன்று அட்சய திரிதியை. தங்கம் வாங்குவதை விட ஒரு நாட்டு பசுவை வாங்குவதும் (அ) நாட்டு விதைகள் வாங்குவதும் (அ) சில பனைமரங்களை நடுவதும்தான் சிறப்பான விஷயம். தங்கத்தை விட பசுவும் பனையும், நாட்டு விதைகளும் ரொம்ப நல்லது என்று சொல்லலாம்.. மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றிய போதே காமதேனு, கற்பக விருட்சம், வலம்புரி சங்கு போன்றவையும் தோன்றின.. எனவே மகாலட்சுமிக்கு ஒப்பான பனையும் நாட்டு பசுவும் நிச்சயம் எண்ணற்ற வளம் சேர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. அதுவும் கொலைக்கு கடத்தப்பட்ட மாடுகளை மீட்டு வாங்கினால் இன்னும் நலம். லட்சுமி கடாட்சத்தொடு புண்ணியமும் சேரும் பல மடங்கு பெருகும். கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நாட்டு பசுக்கள் வேண்டுவோர் தனி செய்தியில் கேட்கவும்.
தங்கம் நமக்கு தருவதை விட நாட்டு பசுவும் பனையும் எண்ணற்ற நன்மைகளை செய்யும்.. நாட்டு பசுவும் பனையும் நாட்டு விதைகளும் இல்லாவிட்டால் நோயால் மற்றும் இன்ன பிற காரணங்களால் நாம் இன்று வாங்கும் தங்கம் தானாக கரைந்து போகும் என்பதில் ஐயமில்லை. வெள்ளையன் வரும் முன்னர்-தாது பஞ்ச காலத்திற்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் வழி நடப்போம். எல்லா நன்மையையும் தேடி வரும்.