புத்தாண்டு அன்று
எங்கள் ஊர் மாரியம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்கும் விழாதான் முதல் வேலை. வெள்ளை
வேஷ்டி, பனியன், தீர்த்த குடம், உருமாலைக்கு துண்டு என்று
எடுத்து சைக்கிள் கேரியரில் குடத்தை பொறுத்திவிட்டு கோயிலுக்கு சவாரி
கிளம்பிவிடும். நான் வளர வளர தீர்த்த சொம்பும் தீர்த்த சட்டியாகி பின்னர் குடமாக
மாறியது. லேட்டானால் L.R.ஈஸ்வரி குரலுக்கு
பிரேக் போட்டு, பொடுசுகள் கோயிலில்
மைக்செட்காரரிடம் வாய்ப்பு கேட்டு, அரசியல் மேடைகளில் தாங்கள் கவனித்த சொல்லாடலை வைத்து பக்தர்கள் அனைவரையும்
சீக்கிரம் வர சொல்லிமைக்கில்அறைகூவல் விடுப்பார்கள். பாய் கடையில் பூ வாங்கிக்கொண்டு கோயிலில் இருந்து
எல்லாரும் ஒன்றாக ஆற்றங்கரைக்கு போவோம். வழியில் மாந்தோப்பில், தீர்த்தக்குடத்தில் செருக
மாவிலைகளோடு சித்திரை மாத மாங்காய்களும் மாம்பிஞ்சுகளும் சூறையாடப்படும். புதிதாக
வருபவர்கள் பயந்தால் சீனியர்கள் “இதெல்லா நம்ம கோய காடு; கவுர்மெண்டு கோயல எடுத்து கோய காட்ட திருச்செங்கோடு முனிசிபாலிட்டிகாரனுக்கு
குடுத்துட்டாணுக.. மொத திரடன் அவன்தான்.. நம்ப காடு இதெல்லாம்; நம்பு பாட்டங்காலத்துல
கோயளுக்கு உட்ட காடு.. எவனாவது வந்து கேட்டா பாத்துக்கலாம்” என்று ஜூனியர்களுக்கு தெகிரியம்
சொல்வார்கள். பின்னர் ஆற்றில் ஜலக்கிரீடை துவங்கும். ஆற்றுநீருக்கென தனிப்பட்ட
வாசமும் வெதுவெதுப்பும் உற்சாகம் தரும். விளையாட்டு ஒரு மணிநேரம் நீளும்.
ஒவ்வொருவராக ஆற்றோர அரசமர பிள்ளையாருக்கும் நாகருக்கும் மூன்று முறை நீர்
எடுத்துவந்து ஊற்றுவார்கள். பின்னர் குடங்களில் தீர்த்தம் பிடிக்கப்பட்டு, பறித்த மாவிலைகள் செருகி, வாங்கிய பூக்கள் சுற்றப்பட்டு, கோயில் பண்டாரம் குடங்களுக்கு
பொட்டுபோட்டு, ஆற்றங்கரையில் பூஜை
துவங்கும். கதம்ப பூவின் வாசம் மூக்கை வருட சீமாடு கூட்டி குடங்கள் தலைக்கேறும்.
தங்கள் கோயில் உரிமையும் கடமையும் தவறாத எங்கள் ஊர் பறையர்கள் தப்பட்டை வாசிக்க
கோயிலை நோக்கி புறப்படுவோம். அவர்களின் வாசிப்பு எங்கேயோ பல நூறு வருடங்களுக்கு
முன் நம்மை தூக்கி செல்லும். மனதில் பல நூறு வருடங்களுக்கு முன் எங்கள் பங்காளி
வீட்டு பெண்ணாக பிறந்து வாழ்ந்த எங்க மாரியம்மன் காலம்தானோ அது என்று எண்ண
வைக்கும். எங்க ஊர் தெய்வம் என்பதை விட அம்மாயி என்று வணங்குவது மனதிற்கு
நெருக்கமாக உணர வைக்கும். கஷ்டமான சூழலில் கனவில் வந்து அப்படி செய் என்று
ஆலோசனையும், பலவீனமான காலங்களில்
தைரியமும் சொல்லும். பலரும் சாமி வந்து ஆடுவார்கள். வருடந்தோறும் தவறாமல்
சாமிவரும் சிலரின் மீது என் கண்கள் எப்போதும் இருக்கும். முஸ்லிம்கள் கூட
குடத்தில் நீர் கொண்டுவந்து ரோடுகளில் ஊற்றி பக்தியோடு வணங்குவார்கள். கோயிலை மூன்று சுற்று சுற்றி
தீர்த்தம் ஊற்றி மாரியம்மனை குளிர்விப்போம். மதியம் பொங்கல் வைக்க சந்தை இடத்தில்
பெண்கள் தயாராகும்போது ஆற்றில் விளையாடி வந்து அபிசேகம் முடித்து அவரவர் குடத்தை
தேடிபிடித்த களைப்போடு வீட்டுக்கு வந்து சேர்வோம். கொண்டுவந்த தீர்த்தம்
வீடெல்லாம் தெளிக்கப்படும். தீர்த்தகுடம் கோயில்தேர்போல, அடுத்தவருடம் வரை
அலங்காரத்துக்கும் ஆராதனைக்கும் காத்திருக்கும்.
சிங்கப்பூர் வந்த
பிறகு, சித்திரை தீர்த்தக்குடத்திற்கு
வாய்ப்பின்றி போனது. போன வருடம் வாய்ப்பு கிடைத்த போதும், ஆற்றில் நீருக்கு பதில் சாய
விஷம்தான் ஓடுகிறது என்று கண்கூடாக கண்டு நானே போகவில்லை. எங்க அம்மாயி
(மாரியம்மன்), கோவக்காரி. பேரேஜ்
பாறைகளே சாயமிட்டதை போல மாறிவிட்டது. அந்த விஷத்தை கொண்டு ஊற்ற மனம் ஒப்பவில்லை. ‘நீயே பாத்துக்கம்மாயி’ என்று மனம் வருந்தி
சொல்லிவிட்டு அக்கட்ட வந்துவிட்டேன். இன்று முஸ்லிம்களும் கோயில் நிகழ்ச்சிகளில்
பங்கெடுப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். கிராம நிர்மாணம் செய்யும்போது மேற்கே
அரசமரம் வைப்பதற்கு சாட்சியாக இருக்கும் எங்கள் ஊர் அரசமரம் இன்று புதிய பேரேஜ்
கட்டுமானத்தில் ஓரத்தில் கம்பீரம் குறைந்து காணப்படுகிறது. உலகமயமாக்கல் என்னும்
அரக்கனின் பிடியில் கிராமங்கள் சிக்கியிருந்தாலும், முன்னைவிடவும் ஊரில் பக்தி
கூடியுள்ளதாகத்தான் அறிகிறேன்.
பக்கத்து வீடுகளில்
சிலர், பக்கத்து ஊரில் நட்டாத்தீஸ்வரன்
(நட்டாற்று ஈஸ்வரன்) கோயிலுக்கு சென்று வருவார்கள்; எனக்கு ஏனோ எங்க அம்மாயி கோயிலே நேரத்தை இழுத்துக்கொண்டதால் ஈஸ்வரனை தரிசிக்க
வாய்ப்புக்கிட்டாமல் போனது.
சித்திரை ஒன்றுதான்
எங்கையனின் நினைவு நாள். அவரின் படத்தை நான்தான் சுத்தம் செய்து பொட்டு பூவெல்லாம்
பொட்டு, சாமி கும்பிட ஏற்ப்பாடு
செய்வேன். அவரது உடற்கட்டு வீரதீர செயல்களை கேட்கும் போது பெருமையாக இருக்கும்.
ஆனாலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பது வருந்தத்தக்கது. அவரும் அவரது
சகாக்களும் தீவிர திமுக ‘செயல்வீரர்கள்’. தற்காப்புக்கோ என்னவோ. அது ஒருகறைபட்ட தலைமுறை. வெள்ளையர் ஏற்ப்படுத்திய
ஐம்பது வருஷ பஞ்சகாலத்து கொடுமையால் தங்கள் பாரம்பரிய மரபுகளை மறந்த தலைமுறை.
ஊரில் தர்மத்தை காக்க வேண்டிய பொறுப்புள்ள மக்கள் தர்மம் தவறி நடந்தார்கள்.
குலகுருவின் அவசியம் என்ன என்பதை எனக்கு உணரவைத்தது எங்கையன் தலைமுறை வாழ்க்கை. “ஒரே நாட்டுபசுவின் கறந்த பால்
சூடாறும் முன் சட்டியோடு அப்படியே குடிப்பாராம்; கோயில்களுக்கு செலவழிப்பதில் கணக்கு பார்க்கமாட்டார்; திருப்பதிக்கு பொட்டுக்கூடையில்
பணத்தை கொண்டுபோய் கொட்டுவாராம்” என்று அவரின் பிரதாபங்கள் நீளும். சித்திரைக்கனிக்கு ஊரில் மற்ற சொந்தங்கள் தங்கள் காணியாச்சி கோயிலுக்கு சென்றுவருவார்கள். நாங்கள் ஏனோ போவதில்லை.
அப்புறம் என்ன, லீவ் நாள் ஜாலிதான்...
எல்லாரும் “தமிழ்” புத்தாண்டு என்று அழுத்தி
சொல்கிறார்கள். புத்தாண்டு என்றாலே சித்திரை தான். யாரும் “Happy English New Year” என்று சொல்வதில்லை. மேற்கத்திய
புத்தாண்டு என்பதே யூதர்கள் ஆண்குழந்தை பிறந்த எட்டாம் நாள் செய்யும் சுன்னத்
போன்ற சடங்கு, இயேசுவுக்கு செய்யப்பட்ட
நாள்தான் என்கிறார்கள். மேற்கத்திய புத்தாண்டின் பின்புலம், உள்ளிருக்கும் அர்த்தம்
என்னவென்று தெரியவில்லை. எந்த புத்தாண்டும் இனத்தை அடிப்படையாகவோ, மொழியை அடிப்படையாகவோ கொண்டு
மாறுவதில்லை. அது இயற்கையின் சுழற்சி காலம் பொறுத்துத்தான் என்பதே நிஜம்.
திரு.பாலகவுதமன் சொல்லியபிறகே புத்தாண்டு மாற்ற பின்னணியில் இருந்த சூது மற்றும்
முட்டாள்தனம் பற்றி அறிய முடிந்தது.
வணக்கம்... அருமையான தகவல்கள்... மிகவும் சிரமப்பட்டுத் தொகுத்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்... உங்கள் பக்கத்தை தங்கள் அனுமதியுடன் என் முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்துகின்றேன். நன்றி எனக்குப் பனங் கொட்டை தேவை மரம் உருவாக்க... 15 ஏக்கர் நிலம் வைத்துள்ளேன்.. முழுவதுமே பனை பயிரிட எண்ணுகின்றேன்... விதை பனங்கொட்டை எங்கே கிடைக்கும்.
ReplyDeleteவணக்கம் சார்.. 15 ஏக்கர முழுவதும் பனை என்னும் உங்கள் ஆர்வம மகிழ்ச்சி தருகிறது.. ஏக்கருக்கு நானூறு மரங்கள் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் ஆறாயிரம் மரங்கள் வரும்.. அனைத்திலும் பதநீர் பருவத்தில் பதநீர் இறக்க ஆட்கள் கிடைத்தால் தாராளமாக செய்யலாம்.. இல்லை, பதநீர் இறக்க ஆட்கள் குறைவாக தேவைப்படும் மாற்று வழிகள் இருந்தால் செய்யலாம்..
Deleteவிதைப்பனங்கொட்டை உங்கள் நிலம் உள்ள பகுதியின் சுற்று வட்டாரத்திலேயே பாருங்கள்.. அதுதான் சிறப்பாக இருக்கும்.. பனையில் நமக்கு வெள்ளையன் பிரித்து கொடுத்த வகைகள் தான் தெரியும்; ஆனால் நம் முன்னோர் வேறு பல வகைகளை பிரித்திருன்தனர்.. அவை பொதுமைப்படுத்தப்பட்டுள்ளன.. உங்கள் பகுதிக்கான மரம் உங்கள் பகுதியிலேயே இருக்கும்.. அதோடு நல்ல வர்க்க மரங்களில் இருந்து கொட்டை எடுத்து வையுங்கள்.. அதாவது குறைந்த வருடத்தில், குறைந்த உயரத்தில் பருவத்திற்கு வருவது, பதநீர் தரும் அளவு, மரத்தின் திடம், போன்றவற்றை கொண்டு முடிவு செய்யலாம்.. உங்கள் பகுதியில் இருக்கும் நாடார் சமூகத்தினரிடம் கேட்டால் நிச்சயம் பல நல்ல தகவல்களை பெறலாம்..
Deleteபனைதான் என்பதில் உறுதியாக இருந்தால் பதநீர் இறக்கும் வேலையை சுலபமாக்க சில வழிமுறைகள் உள்ளன.. நூலேணி, மரம்-மரம் பாலம், போன்றவை.. அவற்றை செய்ய முறையான திட்டமிடல் வேண்டும்.. பனை விதைக்கும்போதே இறக்கும் வசதிக்கேற்ப நட வேண்டும்..
Deleteபொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்று காட்டுவதுதான் பிறரையும் செய்ய தூண்டும். அதுவே பனைக்கு நாம் செய்யும் மரியாதை..