எங்கள் ஊரில் மாலை மசங்கி இரவு தொடங்கிய நேரம். ரெண்டு நாளில் சிங்கபூர் கிளம்ப வேண்டிய சூழலில் என் சித்தப்பா வீட்டுக்கு போக வேண்டியது நினைவு வர சென்று வரலாம் என்று போனேன். விவசாயிகள் வீட்டில் பால் கேன் கழுவி கமுத்தி கொண்டிருந்தார்கள். சிலர் ஆடுகளுக்கு இரவு தீனி போட்டுக்கொண்டு இருந்தார்கள். ராத்திரி சிப்ட்க்கு ஸ்பின்னிங் மில் வண்டிக்கு சில பதின்ம வயது பையன்கள் அவசரமாக கிளம்பி கொண்டிருந்தனர். மருந்தடிக்கும் நாய்க்கர் வீட்டில் எட்டு மணிக்கெல்லாம் தூக்கம் துவங்கிவிடும். எல்லா வீட்டையும் கடந்து, சித்தப்பா வீட்டை அடைந்தேன். சின்ன வாண்டு ஜெயஸ்ரீ தன் உயரம உள்ள சில குச்சிகளை தூக்கிகொண்டு வீட்டருகில் இருக்கும் காலி இடத்திற்கு சென்று கொண்டிருந்தாள். சிலம்ப பயிற்சி என்று சொன்னதும் ஆர்வமாக நானும் போய் காத்திருந்தேன். பீடியை புகைத்துக்கொண்டு சேம்பர் புழுதியேறிய லுங்கி கட்டிக்கொண்டு சிக்கலை உருட்டியவாரு அறுவது வயது மதிக்கத்தக்க முதியவர் வந்தார்.
(படத்தில் இருப்பவர்) எங்கள் பகுதியில் சிறுவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்று தருகிறார். மிக எளிய வேலையில் இருப்பவர்தான். இருப்பினும் தான் கற்ற கலை அழியகூடாது என்னும் ஆவலால் தன் பன்னிரண்டு மணிநேர வேலையை முடித்து ரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்து கற்றுத்தருகிறார்! தற்செயலாக சந்தித்த இவரிடம் கொஞ்சம் பேசினேன். கிராமங்கள் குறித்த தவறான பிம்பம் உடையும் வண்ணம் அவரின் கூற்று இருந்தது.
இவர் பிறந்து வளர்ந்தது நாமக்கல் மாவட்டப்பகுதி. எளிய குடும்பம். இளைஞர்கள் ஊர் காவலுக்கு ஒன்று சேருவது வழக்கம். அப்படி சேர்ந்தவர்கள் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவு செய்து மதுரையில் இருந்து சிலம்ப வாத்தியாரை வரவழைத்தனர். தினமும் கறி, பாட்டில் சாராயம், அதற்கு மேல் மாத சம்பளம் என சிலம்ப வாத்தியார் காஸ்ட்லி பட்ஜெட். இளைஞரான இவரும், சிலம்பம் கற்கும் ஆசையை வீட்டில் சொல்லி அடம் பிடித்தாராம்.
“இந்த பண்ணாட்டு நம்முளுக்கு எதுக்கு? ஒரு மொள நாய்க்கு ஒன்ற மொள வாளெதுக்கு? மொத, வாத்தியாருக்கு காசு அவுக்க உங்க பாட்டன் மூட்ட கட்டி பொதச்சி வெச்சிட்டு போயிருக்கானு நெனச்சயா? அப்புடி காசு இருந்தாலும் அவிளோட ஒன்னா உன்னைய சேத்திக்குவாங்களா?” என்று கேள்விகளால் அடிக்க இவரின் ஆசை மூட்டைகட்டப்பட்டது.
“மாடு மேய்க்க போனபக்கம் போசிய (டிபன் பாக்ஸ்) பூவரச மரத்துல மாட்டீட்டு, மாட்டுக்கு அன்னாங்கால போட்டுட்டுட்டு, கூட வந்த பசவளோட நேத்து வாத்தியார் அப்புடி சொன்னாரு இப்பிடி சொன்னாரு னு கவக்குச்சிய வச்சு சுத்திகிட்டு இருந்தன்.. ஊர்க்கவுன்று மவன் சின்னவரு தண்ணிகட்ட வந்தவரு பாத்துபுட்டு உனக்கும் தடிவிரச பலவ ஆசையா? னு கேட்டாரு.. ஆமாங் ஆனா உங்களோடொண்ணா பலவ முடியாது; காசுமில்லீனு எங்கையன் சொல்லிப்புட்டாருங்க ன்னு சொன்னன்... மய்க்கா நாளே ஊட்டுக்கு வந்து எங்கய்யாகிட்ட ‘இவுனுக்குன்னு வாத்தியாரு தனியாவா சொல்லித்தராறு? நாம்பாத்துக்கறன், அனுப்புங்கனு அவுரு புல்லட்லியே என்னீமு கூட்டீட்டு போய்ட்டாரு..என்னோட பங்குக்குமு அவரே காசு குடுத்துட்டாறு”
தினமும் மாலை பெட்ரமாக்ஸ் லைட் வெளிச்சத்திலும் மற்றும் வீட்டுக்கு வீடு இருக்கும் புல்லட் வண்டிகள் வட்டமாக நிறுத்தப்பட்டு அதன் ஒளிவெள்ளத்திலும் சிலம்ப பயிற்சி நடக்குமாம்.
“அந்த காலத்துல சாதி கொடும னு சொல்றாங்க.. நீங்க இப்பிடி ஏறுக்குமாறா சொல்றீங்க?”
“அது என்னமோ அப்பிடிலாம் நான் கேள்விப்பட்டதில்ல பொன்னு.. ஊர் புள்ளைக பசவல தாம்பெத்த கொளந்தையாட்டம் பாக்கரதுனால தான் அவுரு ஊர்க்கவுண்ரு. இன்னிக்கிம் அவுரு பயன்தா எங்கூர்க்கவுண்ரு.. அவுங்கூட்டுக்கு போனா சாப்படாத போவ உட மாட்டாங்க.. நாயம்னா நாயமா இருப்பாங்க.. ஒருக்கா அவுங்க ஜாமீன் கையெழுத்து போட்டு சொத்து ஏலத்துக்கு வந்தப்பவும் ஊருல அவுங்க மரியாத கொறையில.. பணம் இன்னிக்கு வரும் நாளைக்கு போவுங்கன்னு.. இப்பிடி கொணமான மனசர பாக்கமுடிமா, சொல்லு..?”
“ஈவெரா லாம் உங்க காலத்து ஆளுதான? நீங்க அங்கீலாம் ஏம்போவுல?”
“எங்கூருல சாராய யாவாரி தான் தி.க. தி.க. னு சுத்துவாங்கன்னு.. செரியான தறுதல.. தி.க ல இருந்தவ அப்பறம் அரசிலு கச்சிக்கு போயி பிராந்திகட எடுத்தான்.. அரசிலு செலுவாக்கு வச்சு கோய காட்டையும், சாமியார் காட்டையும் பட்டா பண்ணிக்கிட்டான்.. அந்த காட்டு வருமானத்த வெச்சி கோய, மடத்துல லாம் அன்னதான, பூச எல்லாம் பண்ணுவாங்க.. அவன்கிட்ட கேட்டா பாப்பாங்காடுதான னு நாயம் பேசுனான்.. அப்பறந்தா தி.க. இதெல்லா எதுக்கு னு தெரிஞ்சுது.. அந்த சாராய யாவாரி பொண்ணு காதலிச்சி ஓடிபோய்ருச்சு.. பயன் ஆக்செண்டுல அல்ப்பாயுசுல தவறிட்டான்.. குடும்பமே கந்தறையா போச்சு.. செஞ்ச வெனைய அனுபவிச்சாவோனுமில்ல? இதுனால தான் எங்கப்பாறு அந்த பக்கமே எனய போவுடுல..”
நன்றி னு சொல்லிட்டு அந்த நல்ல மனுசன போட்டோ எடுத்து கொண்டு வந்தேன்.. சர்க்கார் மற்றும் அவர் முதலாளி கெடுபிடிகளின் காரணமாக வெளிப்படையாக அவரால் வகுப்பெடுக்க முடியவில்லை. அதனாலேயே அவரது தனிப்படம்/குழுப்படம் பிரசுரிக்கவில்லை. கிராமத்து மனிதர்கள் மற்றும் கிராம சமூகம் பற்றி எப்போதும் தவறான கருத்துக்களையும் பிம்பத்தையும் பரப்பி வரும் மீடியாக்கள், பள்ளி பாடங்கள், சில எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் இவர் போன்றோர் மூலம்தான் உண்மை நிலையை உணர இயலும்..
எதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள் நம் மொழியில்.நல்ல நடை சசி.
ReplyDelete