Monday 20 January 2014

கோயில்களின் விடுதலை போராட்டம்

போன அரை நூற்றாண்டாக, அரசியலும், அறநிலையாத்துறையும் கோவில்களில் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. திப்பு, மாலிக் கபூர் மற்றும் முகலாயர்கள் காலத்தில் கூட கோவில்களில் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்குமா என்று எண்ணும் அளவு கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததால் ஸ்லோ பைசனின் விஷத்தை மக்கள் உணர இயலாது போய்விட்டது. அதை யாரேனும் உணர்த்த முன்வந்தால் மொழிச்சாயம் சாதிச்சாயம் பூசி அவர்கள் முயற்சிகளை நீர்த்துப்போகச் செய்ய முற்போக்கு புரட்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டு நிதியில், திடீர் திடீர் என முளைக்கும் சர்ச், மசூதி போன்றவற்றில் இவர்கள் எந்த புரட்சியும் செய்ய துணிவதில்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள கோயில்கள் மட்டும் கண்ணை உறுத்துவது ஆச்சரியமளிப்பதுதான்.


கோவில்களின் இழப்பு என்று சொல்லும்போது முதலில் மக்கள் பொருளாதார ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அதைவிட மிக நுணுக்கமான, பேராபத்தான இழப்பை கவனத்தில் கொள்ளவே இல்லை.  பாரத/தமிழக வரலாறுகளில் கோவில்களை தர்ம நிலையங்களாக எண்ணி,  உயிரையும் கொடுத்து காக்க துணிந்த மக்களின் மனோநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அது. தற்கால தீயசக்திகள், கோவில்களை சர்ச், மசூதி போல ஆன்மீகத்திற்கு முன்னுரிமை தராது, கோவில்களை ஒரு சமூக-அரசியல்-மொழி  உட்பட பல்வேறு காரணிகளை கொண்டு பாப்புலாரிட்டிக்கான களமாக மாற்றி ஒரு பொது இடம் போல எண்ண வைத்து விட்டார்கள். கோவில்களில் எவ்வளவு தவறுகள் நடந்தாலும் அதை சகித்து கொண்டு இறைவனை தரிசித்து வர மக்களை பழக்கி விட்டதுதான் மிக பெரிய இழப்பு. கோவில்மேல் மக்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி தளர்ந்து போனதுதான் பேரிழப்பு.

இரண்டாவதாக விலைமதிப்பில்லா புராதன சின்னங்களை, சிற்பங்களை, சிலைகளை, கல்வெட்டுக்களை-அழித்தும், கடத்தியும் நாசம் செய்து விட்டார்கள். பன்னாட்டு மத அரசியல் மற்றும் கீழ்த்தரமான வணிக நோக்கங்களை நிறைவெற்றிதான் வெளிப்பாடு. இவற்றை முறையாக தொல்லியல் துறை உதவியோடு கணக்கெடுத்தால் சுவிஸ் வங்கி பணத்தை விட பல மடங்கு கைவிட்டுப்போனது தெரியும்.

மூன்றாவதாக கோவில்களின் சொத்துக்கள், நிதிகள் என கணக்கு வழக்கில்லாமல் முறையற்ற வழியில் செலவிடப்பட்டது. பக்தர்கள் இறைகாணிக்கை செலுத்துவதன் நோக்கம் என்ன என்பது துளியும் கவனத்தில் கொள்வது இல்லை. சர்ச் மசூதி போல, கோயில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கிடையாது.  கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடிகள் பணம் எப்படியெல்லாம் செலவிடப்பட்டது-கொள்ளையடிக்கப்பட்டது என்று உணர்ந்தவர்கள் யாரும் தற்போது உண்டியலில் பணம் போடுவதில்லை. 

நான்காவதாக, கோவில்களுக்கு என்று இருக்கும் மரியாதைகள், முறைகள், ஆகமங்கள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. நாட்டு பசுவின் பால் தயிர் மட்டுமே, பசுஞ்சாண திருநீறு மட்டுமே, செராமிக் விளக்கு கூடாது, மடப்பள்ளி பிரசாதம் மட்டுமே, கோயில் கருவறைக்குள் கெமிக்கல் கற்பூரம் கூடாது, டைல்ஸ் பதிக்க கூடாது என எண்ணற்ற விதிகள் மறக்கடிப்பட்டன. இப்படித்தான் முறையாக இருக்க வேண்டுமா என்று அறியாத அளவு மக்களை மறக்கடித்து உள்ளார்கள். இதன் உச்சம், கோவில்களுக்குள் பிரியாணி-சாராய விருந்து நடத்தும் அளவுக்கு கைமீறிப்போனதுதான். 

இங்கே குறிப்பிட்டது மிக கொஞ்சம், மிக சுருக்கம். ஒவ்வொரு கோவிலிலும் நடந்த அக்கிரமங்களை தொகுத்து புத்தகமே எழுதலாம். பலர் எழுதியும் உள்ளார்கள். வேண்டுவோர் கேளுங்கள் தருகிறேன். சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலை பீரங்கி கொண்டு தகர்க்கனும் னு சொன்ன பாரதிதாசன் என்ற காட்டுமிராண்டியை ஹீரோவாக கொண்டாடும் சித்தாந்தங்கள் ஆட்சியுரும் சமூகத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?. இவற்றை எல்லாம் நான் எங்கோ ஏட்டில் படித்து எழுதவில்லை. எங்கள் மாவட்டத்தில் நானே கண்ணார பல கோவில்களில் நடந்த அக்கிரமங்களை கண்டுள்ளேன். ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிலக்காயி கோயில், நசியனுர் சிவன் கோயில்,  வள்ளியரச்சல் நாட்ராயன் கோயில், சேவூர் கோயில் போன்றவை அவற்றில் சில. இந்த கோயில்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு பிறகு வாதாட வாருங்கள்.

இப்படியான சூழலில் சிதம்பரம் தீர்ப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. மாபியாக்களிடம் இருந்து கோயில்களை மீட்க ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இதற்கு மீண்டும் மொழிச்சாயம், சாதிச்சாயம் பூசி அரசியல் செய்து கூவுபவர்கள் கூவிக்கொண்டே இருக்கட்டும். ஆனால் பொதுமக்கள் இந்த தீர்ப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

No comments:

Post a Comment