Thursday, 25 September 2014

இருளர்கள்

இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள் என்றளவில் மட்டுமே கற்பிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் இயற்கை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள். குஷ்டம், கேன்சர் முதல் நவீன மருத்துவத்திற்கு சவால் விடும் சிக்கலான வியாதிகளுக்கு மிக எளிய மருந்துகளை வைத்துள்ளார்கள். மந்திரித்து விடுதல்-பாடம் போடுதல் நாமும், Pranic Healing என்று வெள்ளையர்களாலும் சொல்லப்படும் மருத்துவமுறை வரை பின்பற்றுகிறார்கள். கேரள சர்க்கார் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவம் செய்யலாம் என்று அங்கீகரித்துள்ளது. அவர்களை வெள்ளையர்கள் மிக நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். பணமோ புகழோ எதிர்பார்ப்பதில்லை; மரபுச்செல்வம் யாராலோ வணிகமாவதை கண்டுகொள்வதும் இல்லை. பாம்புகள் போன்ற நுண்ணுணர்வு மிக்க பிராணிகளை கையாளும் அவர்கள் இயற்கையின் நுட்பகளை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். கொங்கதேசத்தில் சித்தாண்டிகள், குப்பண்ண பரதேசியார், தம்பிக்கலைஐயன், வாழைத்தோட்டத்து ஐயன் போன்றோர் பின்பற்றியதும் இதே வைத்திய முறையே. அக்காலம் தொட்டு இன்றளவும் கொங்கதேசப்பகுதிகளில் இருளர்கள் பெருமளவு வசித்து வருகிறார்கள். ஆதிக்குடிகளான அவர்கள் கன்னியாத்தா என்று சப்த கன்னியர்களையும், சிவபெருமான் மற்றும் ‘ரங்கநாதர்’ வழிபடுகிறார்கள். ஆதிப் பழங்குடிகளான அவர்கள் பேசுவது இருள பாஷை, இதன்மூலம் தொல்காப்பியத்தில் சொல்லியபடி 'திசை சொற்கள்' ஏராளம் உண்டு எனலாம்.
சர்க்கார் திட்டங்கள் போட்டு, உளுத்துபோன மெக்காலே கல்வி கொடுத்து அவர்களையும் நகர 'நாகரீக' சமூக சகதிக்குள் இழுக்க பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நவீன சமூகம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழும் கலையை..

No comments:

Post a Comment