Sunday, 2 March 2014

கம்யுனிஸ விளைவு

சீன மூங்கில் இசை போல சீனர்களின் பாரம்பரிய வாழ்க்கையும் தியானத்தை போல மிகவும் அமைதியானது; இயற்கையோடு ஒன்றிய ஆனந்தமானது. சீர்திருத்தம் செய்யவேண்டிய குறைகளை மிகைபடுத்தி புரட்சி செய்து, கம்யுனிஸ சித்தாந்தம் நல்லது என்று நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தனர். இன்று, மீடியா மற்றும் குடிமக்களின் வாயை ஒரு கையால் மூடி மறு கையால் தாராளமயமாக்கல் என்ற பேரில் கார்பரேட்களுக்கு கிரையம் எழுதுகிறார்கள். கம்யுனிஸ சித்தாந்தம் சீனாவில் கொன்று குவித்த மாணவர், உழவர் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. முதலாளித்துவத்தின் கோர முகம் என்று என்னவெல்லாம் சொல்லி அச்சுறுத்தினார்களோ அவற்றை இவர்கள் காலத்திலேயே இவர்கள் கையாலேயே நடத்துகிறார்கள். சீனாவிற்கு ஜால்ரா தட்டிகொண்டு தனிமனித உரிமை, கருத்து சுதந்திரம் என்று இங்கே முழங்கும் இந்திய கம்யுனிஸ்ட்கள் அங்கே நடக்கும் அடக்குமுறை குறித்து பேசார். இன்று இந்திய மீடியா சினிமாவில் கம்யுனிஸ சிந்தனைகள்தான் வியாபித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கண்முன் நடப்பதை வைத்து பார்த்தால் கம்யுனிசம் எப்போது யாரால் ஏன் வடிக்கப்பட்டது, என்பது ஆய்வு செய்யப்படவேண்டியது (இதில் ஆச்சரியமளிக்கும் உண்மைகள் புதைந்துள்ளன!).

சுபாஷ் பாலேக்கர் போன்ற பல நல்லோர் கம்யுனிசத்தை முழுமையாக உணர்ந்து, அதை புறக்கணித்தவர்கள் தான். எனக்கும்கூட ஒருகாலத்தில் கம்யுனிசத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. காரணம், எதிர்பார்ப்பு சுயநலம் தாண்டி சித்தாந்த உந்துதலால் செயல்படுவர். ஆனால் அந்த சித்தாந்தம் சரியா என்பதுதான் கேள்வி. சுருக்கமாக சொல்வதென்றால் கம்யுனிசம் இளைஞர்களின் சமூக கோபத்துக்கு தவறான வடிகால். மாயை. முதலாளித்துவம், லாபம் இருந்தால் நாச வேலையை செய்யும். கம்யுனிசம் லாபமில்லாவிட்டாலும் செய்யும் என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது.


இன்று சீன மூங்கில் இசையை கேட்டால், ஊமையாகிப்போன உழவனின் மௌன கதறலாக இருக்கிறது.

No comments:

Post a Comment