Monday, 17 February 2014

நாட்டு பசு ரகங்கள்-வெள்ளையர் சூழ்ச்சி

ஆலிவர் என்ற வெள்ளையர் தென்னிந்திய கால்நடைகள் பற்றிய புத்தகத்திற்கு எழுதப்பட்ட முகவுரை, எவ்வாறு தனித்துவமான பசு வகைகள் தவிர்க்கப்பட்டு பொதுமைப்படுத்தப்பட்டன என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. இப்புத்தகம் கோவை ஈரோடு சேலம் கரூர் பகுதிகளுக்கு உட்பட்ட நாட்டு பசுக்களை காங்கயம் என்ற ஒற்றை வகைக்குள் பொதுமைப்படுத்தி அடைத்துவிட்டது. 


இதே வெள்ளை சர்க்காரில் பணியாற்றிய கால்நடை அதிகாரி ஜான் சார்ட் 1886 வருடம் எழுதிய இந்திய கால்நடைகள் புத்தகத்தில் சேலம், திருச்செங்கோடு, வட கோவை , தென்கோவை (காங்கேயம்), கோவை மலை மாடுகள், என்று பல வகைகளை குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. 


இந்த தனித்துவங்களை பொதுமைப்படுத்தவேண்டியதன் அவசியம் என்ன என்பது புரியவில்லை. ஆயினும் இவ்வாறான தனித்துவமான பசுக்கள் என்பது மக்களுக்கு பெரிதும் பயனளிப்பது. அந்நாளைய நாடு பிரிவுகள் மண்வளம், இயற்கை அமைப்பு, மலைகள், நீர்வளம், சீதோஷ்ண நிலை போன்றவற்றை பொறுத்திருந்தது. (உதாரணம்:கோவையின் சீதோஷ்ணம் சேலத்தில் இல்லை). அன்றைய நாட்டின் பிரிவுகளும் இதை சார்ந்தே இருந்தது.

இவ்வாறான நாடுகளில் அந்தந்த நாட்டின் பட்டக்காரர்களே அந்நாட்டின் பசுக்களுக்கும், பெண்களுக்கும் காவலர் ஆவார். பசுக்களை வேறு நாட்டவன் கைப்பற்றுதல் அவமானமாக கருதப்பட்டது. இதையே 'ஆநிரை கவர்தல்; ஆநிரை மீட்டல்' என்று குறிப்பிட்டனர். பெண்களுக்கும் பட்டக்காரரே காவலர் என்பதால் தான் திருமண நிகழ்வில் நாட்டுக்குள் சீர் என்று நாட்டாருக்கு மரியாதை செய்யப்படுகிறது. எவரேனும் பசுக்களை மீட்டு வந்தால் அவர்களுக்கு நில மானியம் விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

இவ்வாறாக வேறு பகுதிகளுக்கு பசுக்கள் சென்று வர்க்கம் கலந்திடாமல் ஒரு பகுதிக்கென தனித்துவமான பசுக்களை பேணி வளர்த்தனர் நம் முன்னோர். வெள்ளையர் வருகையின் காரணமாக முன்னோர் கொடுத்த மரபுச்செல்வங்களான பல்வேறு பசு வகைகளை நாம் மறந்தோம். இன்று ஒவ்வொரு பகுதிக்கான பசுக்களை கணக்கெடுத்து அதை மீட்டு வருவது விவசாயத்திற்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கும் இயற்கைக்கும் இன்றியமையாத பணியாகும்.

(இந்த வர்க்கம் பேணுதல் ஒவ்வொரு நாடு என்பதை தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்று இருந்தது!. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு பசு என்று ஒரு வர்க்கத்தை காலம் காலமாக தலைமுறைகள் கடந்து பேணி வருவர். கல்யாண சீர்களில் பசு நிச்சயம் இருக்கும் (காண்க: மங்கள வாழ்த்து). ஒரு குடும்பத்துக்கு கல்யாணம் முடித்து புதிதாக ஒரு பெண் வரும்போது அந்த பெண்ணின் வர்க்க பசுவும் மணமகன் வீட்டு பசுக்கூட்டதில் இணைந்துவிடும். அது போடும் கன்று, அக்குடும்பத்தின் புதிய தலைமுறைக்கென உற்பத்தியாகும் தனித்துவமான பசுவாக இருக்கும்!. இதுபோன்ற வர்க்க பசுக்கள் நாம் ஆயிரம் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்காது. அதை நாம் நமக்கென தலைமுறை தலைமுறையாக வளர்த்தால் மட்டுமே கிடைக்கும். இதனால் தான் சொல்கிறோம், பசுக்கள் என்பது வெறும் விலங்கு அல்ல; நம் குடும்பத்தின் மூத்த உறவு, வீட்டின் பெரிய மனுஷி என்று..!)

No comments:

Post a Comment