சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
மேலே சொல்லியுள்ள இரண்டும், கந்தர் அலங்காரம் என்னும் நூலில் அருணகிரிநாதர் செங்கோட்டுவேலவரை பாடியது. அதை நன்கு கவனியுங்கள்.. "சேலிற் றிகழ்வயற் செங்கோடை" & "சேலார் வயற்பொழிற்" .. இந்த வாக்கியங்கள் சொல்வது, கெண்டை மீன்கள் துள்ளும் வயல்கள் சூழ்ந்த திருசெங்கோட்டு மலை என்பதாகும்!
அருணகிரியார் மட்டுமல்ல, பாண்டி நாட்டுக்கு பஞ்சம் வந்தபோது அந்த படைக்கே உணவளித்து மொளசியார் அன்னத்தியாகி பட்டம் பெற்றனர். திருச்செங்கோடு சூழ்ந்த மோரூர் மொளசி, ராசிபுரம் உட்பட்ட கொங்கதேச பகுதிகளின் வளம் கண்டு வாய் பிளக்காத வெள்ளையன் இல்லை. திருச்செங்கோடு, இளையபெருமாள், நல்லபுள்ளியம்மன், அத்தனூர் அம்மன், பருத்திப்பள்ளி, மல்லசமுத்திரம், ஏழூர் உட்பட பல கோவில்கள், பட்டக்காரர்கள் மேல் பல இலக்கியங்கள் பாடப்பட்டன. அன்றைய சூழலில் இருந்த நாட்டு வளம், விவசாய வளம் பற்றி கூறியுள்ளதை படித்தால் பிரமிப்பாக இருக்கும்.
இவ்வளவு நீர்வளம் மிகுந்து, நெல் விளைந்த திருச்செங்கோடு இன்று சோளம் முளைக்க நீர் இல்லாமல், ஆயிரம் அடி ரெண்டாயிரம் அடி போர் போட்டு புகை வர காரணம் என்ன..? உள்ளூரிலேயே இருந்துகொண்டு உலக அளவில் அதிக தனிநபர் வருமானம் ஈட்ட வழி இருந்தும் வெளியூர்களுக்கும் வெளிநாட்டுக்கும் அகதிகளாக செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட யார், ஏன் காரணம்?
திருச்செங்கோடு, ராசிபுரம் சூழ்ந்த பகுதிக்கு நீரோட்டம் என்பது கொல்லிமலை தொடர், ஏற்காடு சேர ராயன் மலைத்தொடர் (சேர்வராயன் அல்ல) போன்ற மலைகளில் அன்றாடம், நீர் மேகங்கள் மரங்களால் கசியச்செய்யப்பட்டு, அவை ஓடைகளாகவும், நிலத்தடி நீரோட்டமாகவும் வந்து சிறு ஆறுகள் உற்பத்தியாகி பெரும் ஏரிகளை நிரப்பி பின்னர் நதிகளில் சங்கமித்தன. இந்த மரங்களை அழித்து காபி-டீ, தைல மரங்கள் வந்ததுதான் மிகப்பெரிய அடி. நீரை கசிய வைக்க பால் மரங்கள் இன்றி போனது. அந்த ஓடைகள், சிறு நதிகள் மற்றும் நீரோட்டம், நரம்புகள் போல ஓடி நிலங்களை வளப்படுத்தின. பாரம்பரிய நிர்வாகிகளுக்கு தெரிந்த நீர் மேலாண்மை வெள்ளைக்காரனுக்கு ஜால்ரா போட்டவர்களுக்கும், அவர்கள் பின்னர் வந்த தற்போதைய சர்காருக்கும் தெரியாமல் போனது. பல ஏரி குளங்கள் விழுங்கப்பட்டன. ஓடைகள், ஆறுகளின் எச்சங்கள் இன்றளவும் உள்ளன. ஏரிகள் தூர வாராமல் கிடக்கின்றன. ராசிபுரத்தில் ஓடிய சங்குமாநதி, ஏழூர் பிடங்குமாநதி, பொன்னியாறு போன்ற நதிகள் என்னவாயின என தெரியவில்லை. அல்பமாக சில காண்டிராக்ட்களும், சிற்சில பதவிகளும், சர்க்காரில் சர்டிபிகேட் சீட் வாங்கும் சில்லறை சலுகைகளையும் நமக்கு லஞ்சமாக கொடுத்து சுயசார்போடு வாழ தேவையான முக்கிய விசயங்களை முதுகெலும்பு முறிப்பது போல முறித்து விட்டார்கள்.
முன்னோர்கள் பலரும், பட்டக்காரர் முதல் தேவதாசிகள் வரை, ஏரி குளங்கள் வெட்டுவதை, வெட்டியதை காப்பதை தங்கள் தர்மமாக கடமையாக கருதினர். தொண்டைமாக்கவுண்டர் மட்டுமே ஏழு ஏரிகளை வெட்டி அதன் காரணமாக வந்த பிரச்சனையால் தனது உயிரை இழந்தார். ஏழூர் ஏரி வெட்ட கற்பகாயி, செண்பகாயி என்ற தேவதாசிகள் பட்ட இன்னல கொஞ்ச நஞ்சமல்ல. பெருமை பேசவும், விழா கொண்டாடவும் மட்டுமே நினைவு கூறும் முன்னோர்களின் சாதனைகள் அதன் நோக்கங்களையும் சிறிது சிந்திப்போமானால் விடிவு பிறக்கும்.
இன்று மீண்டும், மலைத்தொடர்களில் அந்தந்த மரங்களை பெருக்கி, ஓடைகளை சீரமைத்து, ஏரிகளை தூர்வாரி செம்மைபடுத்தவில்லையெனில் சிரமம்தான். இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் சொந்த மண்ணில் வாழும் வழி ஏற்படாது. சமூகத்தலைவர்களை, பெரிய மனிதர்களை குடைய வேண்டிய நேரமிது.
இன்று உள்ள பாஸிடிவான ஒரே விஷயம், முயற்சி எடுத்தால் இவை அனைத்தையும் செய்து முடிக்கும் வாய்ப்புக்கள் வலுவாகவே உள்ளன என்பதுதான்.
No comments:
Post a Comment