Saturday, 1 July 2017

என் அப்புச்சி

அப்புச்சி - SRG @ SR கோவிந்தசாமி கவுண்டர். சேமூர் ராமசாமிகவுண்டர் மகன் கோவிந்தசாமி கவுண்டர். கொங்கு வெள்ளாள கவுண்டரில், தேவேந்திரன் கூட்டம், கீரனூர் செல்வநாயகியம்மன் கோயில். சேமூர் கொத்துக்காரர் அண்ணன் வீட்டார். சேமூர் முழுக்கவே கீரனூர் கோயில் செல்லும் ஆதி, அந்துவன், காடை, விளையன், தேவேந்திரன் கூட்ட கவுண்டர்கள் தான் பெரும்பான்மை, எல்லாரும் உறவின்முறையார்.

தோட்டக்காட்டு ராமசாமி கவுண்டர் சின்னாத்தாள் தம்பதியருக்கு ஐந்து ஆண்மக்கள், கோவிந்தசாமி கவுண்டர், துளசிமணி கவுண்டர் (மேட்டப்பிச்சி) , முத்துக்கவுண்டர், செல்வ கவுண்டர் (மிலிட்டரி அப்பிச்சி), கிருஷ்ண கவுண்டர். பெருமாள் மீது என்ன ஈடுபாடோ மூவருக்கு விஷ்ணுவின் பேர்களை சூட்டியிருக்கிறார்கள். ஐந்தும் ஆண் மகவாய் போக சலித்துப் போய், தவமிருந்து ஒரே ஒரு பெண்ணாவது வேண்டும் என்று இறுதியாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்கள். மிலிட்டரி அப்பிச்சி எல்லாரிலும் மிகவும் பக்குவமாக இருப்பார், பேசுவார். அவரே கடைசிவரை என் அப்புசிக்கு நெருக்கமான தம்பியாக இருந்தார். முத்துக்கவுண்டர் குடும்பம் அப்புச்சியின் மரணத்துக்கு தான் ஒன்று சேர்ந்தது.

Image may contain: one or more people

இரண்டரை ஏக்கர பண்ணையம். இரண்டரை ஏக்கர் பண்ணையம் வைத்து அன்று ஆறு குழந்தைகளோடு வாழ்க்கை நடத்த முடிந்துள்ளது. கல்யாணமும் செய்து வைக்க முடிந்தது. மகன்களுக்கு கல்யாணம் ஆன பின்னும் பல காலம் அதே பண்ணையம்தான் சோறு போட்டது. மேலும் ஒவ்வொரு மகனுக்கும் வரிசையாக ஐந்து வீடுகளும் கட்டி வைக்க முடிந்தது.

ராமசாமி கவுண்டர் காட்டு கருப்பனார் கோயில் பூஜை வேலைகளையும் பொறுப்பேற்று செய்துவந்தார். காதில் கடுக்கன், குடுமி எப்போதும் இருக்கும். காலை சூரியனைக் கும்பிட்டுதான் வேலைகள் துவங்குவார். ஓட்டல் டீ கடைகளில் எதுவும் சாப்பிட மாட்டார். குந்த வைத்து உக்கார்ந்து தான் உண்பார். எங்கே போவது என்றாலும் மாட்டு வண்டி தான் இல்லை கால்நடைப் பயணம். பஸ்சில் ஏற மாட்டார். சாதி கட்டுப்பாடும், கருப்பனார் கோயில் பூஜை முறையும் இந்த கட்டுப்பாடுகளுக்குக் காரணம். ராமசாமி கவுண்டரும் சின்னாத்தா ஆயாவும் சுமார் நூறு வருஷங்கள் வாழ்ந்து மறைந்தனர்.

தோட்டக்காட்டு கருப்பனார் சக்தி வாய்ந்த சாமி. ஒரு சமயம் குடும்ப பிரச்சனையின் காரணமாக என் அப்புச்சி கோபித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு சென்றாராம். அப்புச்சியின் அம்மா கருப்பனார் கோயில் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் அப்புச்சி தூக்கு மாட்டுவது போல கண் முன்னால் படமாக தெரிந்ததாம். பதறிக்கொண்டு வீட்டிற்குப் போய் பார்த்த போது பிரமை பிடித்தவர் போல தூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்புச்சி நின்றாராம். தான் என்ன செய்கிறேன் என்ற நினைப்பே இல்லாமல் செய்ததாக சொன்னாராம். இன்றும் எல்லா பங்காளி சண்டைகளுக்கு நடுவிலும் தோட்டக்காடு கருப்பனார் நோம்பிக்கு எல்லாரும் வந்துவிடுவர்.

Image may contain: one or more people

என் அப்புச்சி 'கோவிந்தசாமி' கவுண்டருக்கு அவரது நண்பரின் தங்கை என் அம்மாயி 'துளசியம்மாள்' மனைவியாக வாய்க்கப்பெற்றார். பேர் பொருத்தம். இறுதிவரை நல்ல இணக்கம். ஒருவர் கோபப்படும்போது மற்றவர் அமைதியாக இருப்பார்கள். கோபத்தின் வழியிலும் ஒரு பாசம் காட்டிக் கொண்டு இருப்பார்கள்.

இரண்டு மகன், ஒரு மகள். இரண்டாம் குழந்தையாகப் பிறந்தவர என் அம்மா. அவர் பெற்றோர் பெண் குழந்தைக்கு ஏங்கிய காரணமோ, அல்லது பல சகோதரர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததோ என்ன காரணமோ, பெண் குழந்தைகள் என்றால் என் அப்புச்சிக்கு எப்போதும் பிரியம் அதிகம். பேத்திகள் மீதும் பிரியம் அதிகம். திண்பண்டங்கள் வாங்கி வந்தாலும் என் அம்மாவுக்கு அதிக பங்கு கிடைக்குமாம்; பவுடர், ரிப்பன் எல்லாமே தனி கவனிப்பு . "நீ பொட்டில வச்சுக்காயா.. அவனுங்களுக்கு குடுக்காத" என்று கூறுவாராம். போன் வந்தபிறகு, எதை மறந்தாலும் என் அம்மாவுக்கு போன் செய்வதை மறக்க மாட்டார். காலை சரியாக எட்டு மணிபோல சைக்கிள் கடை ஒரு ரூபாய் போனில் இருந்து அழைப்பு வந்துவிடும். ஒரே நிமிஷம்தான். பேச காரணமே இல்லாவிட்டாலும், தினமும் சலிக்காமல் நலம் விசாரிப்பு தொடரும்.

அப்புச்சி கடுமையான உழைப்பாளி. குடும்பம் வளர விவசாயம் மட்டுமே போதாமல் பால் வியாபாரம் செய்தார். தினமும் போக வர சுமார் 70-80 கி.மீ. சைக்கிள் பயணம், 80 லிட். பால் கேன்களோடு. விடிகாலை 3-4 மணிக்கு எழுந்து கிளம்பினால் பத்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவார். மிலிட்டரியில் இருந்து திரும்பிய என் சின்னப்பிச்சி ஒருநாள் சும்மா கூட வந்துவிட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாகிவிட்டாராம். சில வருஷங்கள் முன்பு நான் ஊருக்கு சென்றபோது தான் பால் எடுத்த கிராமங்களுக்கு வண்டியில் அழைத்துச் செல்லக்கூறி தனது பழைய வாடிக்கையாளர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். பால் வியாபாரம் பின் சைக்கிள் கடை. மகன்கள் தலையெடுத்து நல்ல நிலைக்கு வந்தபின்னரும் சைக்கிள் கடையை விடவில்லை. மரணப் படுக்கையில் விழும் வரை உழைத்தவர். கடையில் பெரிய வியாபாரம் இல்லாவிட்டாலும் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்ந்தார். காலை 4-இரவு 7 வரை வேலைதான். மதியம் சிறிய உறக்கம். நோம்பி நாள் என்றாலும் வீட்டுக்கு வந்து சிறிதுநேரம் இருந்துவிட்டு கடைக்கு சென்றுவிடுவார். கையில் வாட்சு இல்லாமல் இருக்கமாட்டார். எங்கள் வீட்டுக்கு (மகள் வீட்டுக்கு) வந்தால் கூட ஒரு நாளைக்கு மேல் தங்க மாட்டார். "கடை சும்மா கெடக்குது, கேபிள் பணம் குடுக்க ஆள் வரும், கரன்ட் போனால் ஆம்பில்பெருக்கு பேன் போடணும்" என்று பறந்துவிடுவார்.

நல்ல தேக பலம் உடையவர். கால் எலும்புகள் இரும்புபோல இருக்கும். எனது மூக்கு என் அப்புச்சி சாயல்-கொந்தாள மூக்கு என்று அம்மாயி சொல்வார். இறுதிகாலம் வரை தினமும் நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். இரவு ஏழு மணிக்கு தூங்கிவிடுவார். குந்த வைத்து அமர்ந்து உணவருந்துவார். கழுகுப் பார்வை. நடுநிசியில்கூட தெளிவான பார்வை. தூரத்தில் வருவோரையும் அடையாளம் கண்டுவிடுவார். எண்பது வயதிலும் கண்ணாடி அணியாமல் வாசிப்பைத் தொடர்ந்தவர். பீடி புகைக்கும் பழக்கம் மட்டும் இல்லாவிட்டால் நூறு வயதை நிச்சயம் தொட்டிருப்பார். மேட்டப்பிச்சி (அப்புசியின் தம்பி) பீடியால் இறந்தபோது இனி பீடியைத் தொடுவதில்லை என்று எடுத்த சபதம் சில வாரங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை.

என் அப்புச்சி நல்ல படிப்பாளி. அக்காலப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்திருந்தார். "நால்ர மூண்ற கத்திரிக்கா ஏழர எட்டரை பைசா னா ஒரு கத்திரிக்கா விலை என்ன?" என்ற அவர் பள்ளிக்கூட கேள்வியை நினைவு கூர்வார். வேலையில்லா நேரங்களில் நாளேடு அல்லது புத்தகமும் கையுமாகவே இருப்பார். எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் வீட்டிலிருக்கும் எல்லா புத்தகங்களையும் படித்துவிடுவார். ராமாயணமும் பாரதமும் கந்தபுராணமும் பெரியபுராணமும் எத்தனை முறை படித்திருப்பார் என்று தெரியாது. விடுமுறை நாட்களில் நான் சென்றால் வாசிக்க சிறுவர் மலர், பாலமித்திரன், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என சேர்த்து வைத்திருப்பார்.சைக்கிள் கடையின் சிறிய பின்னறைக்குள் எனக்கு மிகப்பெரிய ஒரு உலகம் இருந்தது. விக்ரமாதித்தன், தெனாலி ராமன், இதிகாச பாத்திரங்கள், மாயாவி, சுப்பாண்டி, கபீஸ் என புத்தகங்களின் வழியே பல கதாபாத்திரங்களோடு உலவி வாழ்ந்தேன். கபீஸ் கதைகள் நினைவாக, நான் குளரலாக சொன்னதாலோ என்னவோ, என்னை பக்கீஸ் என்று செல்லமாக அழைப்பார். எனது வாசிப்பு பழக்கமெல்லாம் அவர் விதைத்த விதைதான். மரணப் படுக்கையில் விழுந்த போதுதான் அவரது வாசிப்பு நின்றது. அப்போதும் சட்டைப்பையில் அந்த மாதம் எதோ நூல் வாங்க முப்பது ரூபாய் பணம் வைத்திருப்பதாகக் கூறினார். ஏற்றி சீவிய பால் போல் நரைத்த முடி, கால்மேல் கால்போட்டு, ஒரு கையில் புத்தகம், மறு கையில் பீடி என ஒரு தோரணையுடன் படித்துக் கொண்டிருப்பது கம்பீரமாக இருக்கும்.

Image may contain: 1 person, closeup

மிக மிகக் குறைவாகவே பேசுவார். தேவையானதை மட்டும் சொல்வார். கோபப்பட்டால் பேசுவார். அவ்வளவுதான். யார் மனதையும் புண்படுத்தும்படி பேசவும், நடந்துகொள்ளவும் மாட்டார். அவருக்கென்று ஒரு உலகம் இருந்திருக்கிறது, அதனால் புற உலகைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்திருக்கிறார்.

எனக்கு நீச்சல் பழக்கியது என் அப்புச்சி தான். எனக்கு முன்னரே என் அக்கா சைக்கில் ஒட்டவும், நீச்சலும் கற்றுக் கொண்டார். அப்போது எனக்கு போட்டியும், எதிரியும் அக்கா தான். கிணற்றில் டியுப் இன்றி என்னை இறக்கிவிட முயற்சித்த போது தப்பி ஓடிக்கொண்டு, 'மாரியாயிக்கு தீத்த கொடம் எடுக்கறேன்னு வேண்டிகிட்டன், அக்கா மட்டும் எனக்கு மின்னாடி எல்லாம் பலவிருச்சே' னு கத்திகிட்டே ஓடியதை அடிக்கடி சொல்லி சொல்லி சிரிப்பார். பின்னாளில் நீச்சல் பழகி தவளை போல கிணற்றிலே கிடப்பேன், காட்டுக்காரர் ராசப்ப கவுண்டருக்கு பயந்து, அப்புச்சியை கிணத்துக்கு போக துணைக்கு அழைக்கும்போது நான் சீக்கிரம் வரமாட்டேன் என அலுத்துக் கொள்வார். அவர் மீசையை சீவி முறுக்கி விளையாடியதையும், நெஞ்சுக்குழியில் இருந்த மருவை நான் உருட்டி விளையாடியதாலே அது சுண்டைக்காய் அளவு பெரிதானதையும் சொல்வார்.

அப்புச்சி அம்மாயி உலகம் மிக குறுகியது. ஈரோடு மார்க்கெட்டில் அம்மாயி வெள்ளரி வியாபாரமும் நின்று, அப்புச்சியின் பால் வியாபரம் சைக்கிள் கடையாக மாறியபின் அவர்கள் உலகம் இன்னும் சுருங்கியது. சேமூர், தோட்டக்காடு, மகள் வீடு, சூளை முனியப்பன் கோயில், வியாழன் சந்தை, சைக்கிள் கடை - இவ்வளவுதான். புரட்டாசி மாசம் பெருமாள் மலைக்கு செல்வதையும், சித்திரை மாசம் சென்னிமலை சிவன்மலை கோயில்செல்வதையும் கடைசிவரை வழக்கமாக கொண்டிருந்தார். விடுமுறைக்கு சென்ற பல வருஷங்களில் சர்ப்ரைஸ் ஆக ஓரிருமுறை பண்ணாரி அம்மன் கோயிலுக்கும் பவானி சாகர் அணைக்கும் அழைத்து சென்றுள்ளார். மெட்ராஸ் எல்லாம் இப்போது பக்கத்து ஊர் போல ஆகிவிட்டது. ஆனால் இருபது வருஷங்கள் முன் அது என்னவோ வெளிநாடு செல்வதுபோலத்தான். ஒருமுறை அப்புச்சி எதோ வேலையாக மெட்ராஸ் சென்றுவிட்டு வரும்போது பேரன் பேத்திகளுக்கு விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று வாங்கிவந்தார். அவரது பயண அனுபவக்கதைகள் பல காலம் விவாதிக்கபப்ட்டது. அள்ளி போ இல்லி பா என்று கன்னடர்கள் பேசியதைக் கவனித்து வந்து சொல்லியது நினைவிருக்கிறது.

கொஞ்சம் நேர்த்திவாதி (பெர்பக்ஷநிஸ்ட்). சைக்கிள் துடைக்கும் பணி சின்ன மாமாவினுடையது. சைக்கிள் வீலின் கம்பிகளுக்கு இடைப்பட்ட இடத்திலும் அழுக்குகள் போகும்படி துடைக்கவேண்டும். இல்லையேல் சைக்கிளில் துரத்தப்படுவார் மாமா.

இளவயதில் நிலம் போதாமை, குத்தகைக்கு நிலம் ஒட்டியது போன்ற காரணத்தால் விவசாய நிலத்தின்மீது பற்று அதிகம். சிறுவயதில் அப்புச்சி குத்தகைக்கு ஒட்டிய நிலத்தை பின்னாளில் மாமா வாங்கியபோது மிகவும் சந்தோஷப்பட்டார்; பின்னர் அதை விற்று வேறு சொத்து வாங்க மாமா எண்ணியோது தான் உயிரோடு இருக்கும்வரை விற்கக்கூடாது என்று கூறிவிட்டார். சமீபமாக நான் வாங்கிய நிலத்தைக் காண வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டார். நிலம் சீர்திருத்தப்படாமல் கிடந்தது. சீர் திருத்திய பின் வந்து பார்க்கும் நிலையில் அவர் இல்லை. படத்தில் தான் பார்த்தார்.

தங்கள் சொற்கள், செய்கை, என பல வகைகளில் பெரியவர்கள் நமக்கென்று ஒரு உலகைக் கொடுத்தவர்கள். பால்யத்தின் இனிமையான நினைவுகளின் அடையாளம். ஒரு காலகட்டத்தின் அனைத்து அமைப்புகளுக்குமான நினைவுச் சின்னங்கள். மனதின் உணர்வுப் படிமங்கள். ஒவ்வொரு பெரியவர்களை இழக்கும்போதும் ஒரு சகாப்த்தத்தை இழப்பது போலத்தான் இருக்கும். என் அப்புச்சி விஷயத்தில் அது ரொம்பவே அதிகம். எப்போது ஊருக்கு சென்றாலும் என் அப்புச்சியிடம் ஆசி பெறுவது வழக்கம். அவர் வழக்கமாக கூறும் ஆசியுரை,

"ஆல் போல் தழச்சு அருகு போல் வேரோடி வாழையடி வாழையா என்றும் சிரஞ்சீவியா இருக்கனும்பா"
இன்னும் காதில் ஒலிக்கிறது.

2 comments: