Monday, 28 July 2014

கல்யாணத்தில் ஆடம்பரங்கள்

வெகு சிலர், பிறர் தங்களை பெரிதாக நினைக்க வேண்டும் என்று குடும்ப விசேஷங்களை ஆடம்பரமாக செய்தனர். அதனால் சாதாரண மக்கள் பிறர் தங்களை தாழ்வாக நினைக்கக்கூடாது என்று அனாவசிய செலவுகள் பலவற்றை செய்யவேண்டிய சமூக அழுத்தத்திற்கு ஆட்பட்டனர். இதனால் தான் நம் முன்னோர்கள் சடங்குகள் என்றும் சீர்கள் என்றும் ஒரு காமன் கோட் வைத்திருந்தனர். இதனால் குடும்ப நிகழ்ச்சிகள் பாசம் பந்தம் வளர்க்கும் நிகழ்ச்சிகளாக இருந்தன. இன்று குடும்ப நிகழ்ச்சிகள் பொறாமை வெறுப்பு வளர்க்கும் நிகழ்ச்சிகளாக மாறி வருகிறது.

கல்யாணத்தில் ஆடம்பரங்களை புகுத்துவதை கற்பித்தது-அந்தந்த வட்டாரத்தில் பெரியமனிதர்களை நெட்வொர்க் செய்யும் மேற்கத்திய கிளப்புகள் தான். மேற்கடிமை ஒருவனை தலைவனாக கொண்டிருக்கும் அந்த கிளை கூட்டங்களில் நடைபெறும் 'புதுமைகள்' குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பரவியது. அவர்கள் செய்வது எளிதாக டிரென்டானது. கோட் சூட், பப்பே, மண்டபங்களில் கல்யாணம்,தாறுமாறான சீர்முறைகள் போன்றவை சில. அன்றும் சரி, இன்றும் சரி, சொந்தங்கள் சேர்ந்து பாரம்பரிய முறைகளில் சீர்கள் செய்து அவர்களே சமைத்து, பரிமாறி, எளிமையாக நடக்கும் கல்யாணகள்-விழாக்கள் மிக மகிழ்ச்சியாக, மீண்டும் எப்போ சந்திப்போம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்; மாடர்ன் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

சயின்டிபிக்

நம் மக்களிடம் 'சயின்டிபிக்' என்ற சொல்லை பயன்படுத்திவிட்டால் அது கேள்விகளுக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிவிடுகிறது. அங்கீகாரத்தின் உச்சம். கொடுமை என்னவென்றால், இந்த தற்கால சயின்டிபிக் அங்கீகாரம் இதைவிட பல ஆயிரம் வருடம் முன்பிருந்து வேலை செய்யும் பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கும் தேவைப்படுகிறது. சரி, Modern/Western/Recent Scientific Justification-Authentication இல்லாவிட்டால் என்ன கெட்டுப்போகிறது? வேலை செய்யும் ஒரு நுட்பத்தை புரிந்துகொள்ள/விளக்க முடியாமை நவீன அறிவியலின் குறைபாடே ஒழிய அதற்காக காலம்காலமாக செயல்பட்டுவரும் தொழில் நுட்பம் பொய்யென்று ஆகிவிடாது. மாடர்ன் சயின்ஸ் அரைவேக்காடு என்பதும், நம் பாரம்பரிய அறிவியலை விட பின்தங்கியது என்றும் அந்தந்த துறை வல்லுனர்களே என்றோ ஒப்புக்கொண்ட உண்மையும் கூட. சமூக-அரசியல் சூழலில் சிக்கிக்கொண்டதால் நமக்கிந்த நிலை. இதற்கு காரணம், நம் கையில் இருக்கும் கல்வி/அளவுகோல் அப்படி. தற்கால அறிவியலை கொண்டுதான் நாம் எதையும் ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. "தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே மேல்" என்னும் மனோபாவம். நம் பாரம்பரிய அறிவுச்சுரங்கம் பற்றிய நம் அறியாமை, நம் மீதே நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மை போன்றவையே இதுபோன்ற மனநிலைக்கு காரணம். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு தரம்பால் புத்தகங்களையும், இன்பினிட்டி பவுண்டேசன் ஆய்வு கட்டுரைகளையும் பரிந்துரைப்பேன்.

எனக்கு, தற்கால நவீன அறிவியல் கூறுகளுக்கு நம் புராதன நூல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் மேற்கோள் காட்டினால் நம்பிக்கை கூடுகிறது. தற்கால அறிவியலால் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதால் சயின்டிபிக் விளக்கங்கள் புரிந்துகொள்ள துணை செய்கிறதேயன்றி நம்பகத்தன்மை என்ற அளவில் எனக்கு தேவைப்படுவது இல்லை.

Friday, 25 July 2014

திருட்டு விசிடி

திருட்டு விசிடியில் சினிமா பார்க்காதீர்கள் என்று சொல்லுவோருக்கு.. நீங்கள் என்றாவது சினிமாவில் சமூகத்தை கெடுக்கும் சாராயம், புகை, ஆபாசம், காதல், வன்முறை, பெற்றோரை-கிராமத்தவனை-குடும்பங்களை-உறவுகளை கொச்சைப்படுத்தி மேற்குமய வாழ்க்கை முறைக்கு ஜால்ரா தட்டும்-சகஜப்படுத்தும் கருத்துக்களை பரப்பாதீர்கள் என்று சொன்னதுண்டா..?? அதில் நடிக்க மறுத்ததுண்டா? இன்று சாமானியன் குடும்பத்தோடு சினிமாவுக்கு போய்வர ரூ.1,000 செலவு செய்ய வேண்டும். அவனை பற்றி என்றாவது யோசித்ததுண்டா..?? நீங்கள் உங்கள் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்கச்சொல்லியோ-சினிமா லாப அடிப்படையில் சம்பளம் என்றோ ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்ததுண்டா..?? சமூகத்தை கெடுப்பதை பற்றி அக்கறையே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் உங்கள் வருமானத்தை காக்க காலில் கூட விழும் நீங்கள், சாமானியன் சில நூறுகளை மிச்சப்படுத்த விசிடி பார்ப்பதை வேண்டாம் என்று சொல்ல என்ன முகாந்திரம் உள்ளது?? அதர்மத்தை பரப்பும் நீங்கள் மக்களிடம் தர்மத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்..??

என் கருத்து, தற்கால சினிமாக்களை புறக்கணிப்பதே சிறந்தது. தியேட்டர் என்ன, விசிடி என்ன..? விஷம் விஷம் தான்.. மிக மிக சொற்பமான அளவில் உள்ள, மேற்சொன்ன வரிகளுக்கு பொருந்தாதவர்கள் விதிவிலக்கு..

விநாயகர்

அவசர வேலை வந்தால், நாம் சமரசம் செய்து கொள்வது நமது பூஜை நேரத்தைத்தான்.. இன்று நானும் அதுபோல கிளம்பவேண்டிய சூழல், எனவே சூரியனை கும்பிட்டுவிட்டு டாக்ஸி பிடிக்க ஓடிவிட்டேன். டாக்ஸியில் விநாயர் சிலை பூ-அருகம்புல்லுடன் இருந்தது. ஆர்வத்தோடு கேட்க, டாக்ஸி ஓட்டிய தாய்லாந்து நாட்டு டிரைவர் தான் கணேஷா பக்தர் என்றும் தினசரி டாக்ஸி எடுக்கும்முன் நீர்விட்டு பூ, அருகம்புல் வைத்து கும்பிட்டபின் தான் வேலையை ஆரம்பிப்பேன் என்றும்; வாராவாரம் விநாயகர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வருவேன் என்றும்; கணேசனை கும்பிட துவங்கிய பின்னர் அவரது குடும்ப பிரச்சனைகள் தீர்ந்தது என்றும் சிலாகித்து சொன்னார். எனவே என்னையும் கணேசனை வழிபடச்சொல்லி அறிவுறுத்தினார். வீட்டில் இதைவிட பெரிய விநாயகர் சிலை வைத்து கும்பிடுகிறாராம். வருடம் ஒருமுறை தாய்லாந்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு வருடம் ஒரு முறை சென்று வருவாராம். சீன மொழியில் விநாயகர் மந்திரங்கள் கூட சொல்லுவாராம்.

எப்படியோ, காலையில் நமக்கும் தரிசனம் கிடைத்தது என்று திருப்தி.


சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் தீவிரமடைந்து, கிட்னி பாதிக்கப்பட்டு, சென்னை மற்றும் பெங்களூர் மருத்துவர்கள் கைவிட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லச் சொல்லிய பின்னர், ஒருவர் இயற்கை வைத்திய முறையில் பத்தியம், சில வேர்கள் உண்டு பின்னர் நெருஞ்சி முள் ஜூஸ் குடித்து இன்று சர்க்கரை நோயில் இருந்து பூரண குணமடைந்துவிட்டார். எந்த மாத்திரையோ பத்தியமோ இல்லை. எலும்பும் தோலுமாக இருந்தவர் இன்று வாட்டசாட்டமான மனிதராகிவிட்டார். இயற்கை வைத்திய வெற்றி பல இடங்களிலும் இதுபோல அரங்கேறி வருகிறது. இன்றோ நாளையோ அவரிடம் பேசி தகவல்களை சொல்கிறேன்.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் பழமையான மொழி. பல்வேறு அரிய நூல்கள் இயற்றப்பட்ட மொழி. இன்று உள்ள பல மொழிகளின் மூல சொற்களை தன்னகத்தே கொண்டிருக்கும் மொழி. பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் தொண்மை மிகு கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக இருந்த மொழி. நாசாவும் கூட விரும்பும் மொழி ( நம் சொத்தின் மேன்மையை உணர்த்தவும் வெள்ளைகார துரைமார்கள் அங்கீகாரம் வேண்டுமல்லவா). இன்று பொலிவற்று இருக்கும் இம்மொழியை, அம்பேத்கர் சொன்னது போல் தேசிய மொழியாக்கி வளர்க்க வேண்டாம்; குறைந்தபட்சம் அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டுவருவதில் தவறேதும் இல்லையே. நம் தேசத்தின் பாரம்பரிய மொழிகளில் ஒன்று மீண்டு வந்துவிடக்கூடாது என்பதில் என்ன முனைப்பு? சமஸ்கிருதத்தை குப்பை என்று சொல்வோர்-பள்ளியில் கற்பிக்கப்படும் மெக்காலே குப்பையை என்னவென்று சொல்வீர்கள்?? ஒரு காலத்தில் ஹீப்ரு கூட செத்த மொழிதான்; இன்று ஒரு நாட்டின் தேசிய மொழி என்னும் அளவையும் தாண்டி வளர்க்கப்பட்டுள்ளது.

இதில் திணிப்போ கட்டாயமோ இல்லாதபோது ஏன் எதிர்க்க வேண்டும்?

பெண்கள்-குடும்பம்

வலுவான குடும்பம்-வளமான இந்தியா: நல்ல புத்தகம். குடும்ப அமைப்பு, சமூகத்துக்கும், மனிதர்களுக்கும், தேசத்துக்கும் ஏன் முக்கியமானது, குடும்பங்கள் வலுவாக இருக்கும் தேசங்கள் குடும்ப முறை சுருங்கும் தேசங்கள் அவற்றின் பொருளாதாரம் மனித வாழ்வு போன்றவற்றை தக்க ஆதாரங்களோடு விவரித்துள்ளார் ஆசிரியர். குடும்பங்களின் ஆதார சக்தியான பெண்கள் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசியுள்ளார். பெண்ணியம் என்ற பேரில், அற்ப காரணங்களுக்காக தனது சொந்த குடும்பத்தையே தனது எதிரியாக சிந்திக்கவைத்து குடும்ப அமைப்பை சுமையாக கருத செய்கிறார்கள். இதன்மூலம் நாட்டை குடும்பங்கள் நிறைந்த வாழ்விடமாக அல்லாமல், நுகர்வோர்களின், சந்தையாகவும், பணியாளர்களின் காலனியாகவும் மாற்றி வைக்கப்பார்க்கிறார்கள் என்ற தகவலும் புரிய வரும்.

நம்ம பொண்ணுங்க என்ன லேசுபட்டவர்களா..??