Thursday, 25 September 2014

சதா நிரோகி

ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி!
அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்! - சரகர்
சரஹர்-நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாபெரும் மருத்துவ மேதை. சரஹ சம்ஹிதை என்ற அவரது நூல் பல்வேறு மருத்துவ ஆயுர்வேத நூல்களுக்குக்கெல்லாம் மூல நூல்.
(ஹித-சத்துள்ள; மித-அளவான; ருது-பருவம்; சதா- எப்போதும; நிரோகி-நோயற்றவன் [ரோகம்-நோய், ரோகி-நோயாளி])
நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்

அசைவம்

அசைவம் முதலில் அரிதான/விழாக்கால உணவாக இருந்து இப்போது வெகுஜன-அன்றாட உணவாக உருவெடுக்கிறது.. இன்றுள்ள மக்கள் தொகைக்கு, இது இயற்கைக்கும் சரி.. மனிதர்களுக்கும் சரி.. சமூகத்துக்கும் சரி.. மிகவும் ஆபத்து.. பல்வேறு கொடும்விளைவுகளுக்கு அடிநாதமாக இருக்கப்போகிறது..

பெண்கள் சொத்துரிமை

பெண்கள் தங்கள் சொத்துரிமையை தங்கள் சகோதரனுக்காக இலவசமாகவோ, சொற்ப பணம் பெற்றுக்கொண்டோ விட்டுக்கொடுக்கிறார்கள். இன்றைய சட்டங்கள் பெண்கள் நினைத்தால் தாங்கள் விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கொள்ளவும் பல ஓட்டைகள் வைத்துள்ளன என்பதும் வேறு விஷயம். பெரும்பாலும் சிறுவிவசாயிகளை கொண்ட நாட்டில் நிலங்கள் பிரிக்கப்பட்டால் குடும்பம் நடத்தும் அளவுகூட வருமானத்தை பெற முடியாது. சொத்தை பெற்ற பெண்ணும் மைல்கள் தாண்டி வந்து விவசாயம் செய்ய இயலாது என்பது வேறு விஷயம். நம் நாட்டு சட்டங்கள் குடும்பங்களுக்குள் புகைச்சல் வர எவ்வளவு முடியுமோ அவ்வளவு சட்டங்களை "தேசபக்தர்" கும்பல்களின் அழுத்தத்தால் உருவாக்கியுள்ளன. குறைந்தபட்சம் நில விஷயத்திலாவது சொத்துரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும். சிறுவிவசாயிகள் பெண்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள். தங்கள் கல்யாணத்துக்காகவும் சீர்களுக்காகவும் பல சிரமங்கள் பட்ட பெற்றோர் மீது பெண்களின் இந்த குடும்பப் பாசம் இல்லாவிட்டால் இன்று பலரின் மிராசு டம்பமெல்லாம் என்றோ காற்றில் பறந்திருக்கும். பெண்கள் கூட குடும்ப பாசம் என்று சொல்லலாம்; ஆனால் அவர்கள் கணவர்கள் சொந்தம் முக்கியம் என்ற காரணத்தால் சொத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். பெண்கள் மற்றும் அவர்கள் கணவர்கள் போட்ட பிச்சையை மறந்த நன்றிகெட்ட விதிவிலக்குகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக பெரும்பான்மையை குற்றம் சொல்ல முடியாது.
*பெண்கள் விவசாயத்தின்-கிராமத்தின் கண்கள்*

அறநிலையத்துறையின் அக்கிரமங்கள்

கோயில்களில் அறநிலையத்துறையின் அக்கிரமங்கள் உச்சகட்டத்தில் இருக்கின்றன. கோயில்கள் என்றால் வணிக மையம் என்ற பிம்பம் வருமளவு மாற்றி வைத்துள்ளனர். கோயில்களில் நடக்கவேண்டிய நிர்வாகம் சீர்கெட்டு, பூஜைகள் முறையின்றி போய், கோயில் பணியாளர்களை பஞ்சத்தில் விட்டு, அதனால் அவர்கள் பக்தர்களிடம் சுரண்டல் வேலையை ஆரம்பித்து வைத்துள்ளனர். இது மட்டுமின்றி, கோயில் நிலங்கள், சொத்துகள், நகைகள், கலைப் பொக்கிஷங்கள், சிலைகள் என்று சொத்துக்கள் பெருமளவில் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. கோசாலைகள், தர்ம ஸ்தாபனங்கள், பாடசாலைகள், மடங்கள் என்று அனைத்தும் சீர்கேட்டில் இருக்கின்றன. கோயிலில் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் சேவைக கட்டணங்கள் கயவர்களின் கைக்கே செல்கின்றன. இனி கோயிலுக்கு கொடுக்க நினைக்கும் பணமோ பொருளோ, கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கவும், பழமையான கோயில்களை காக்கவும் போராடி வரும் அமைப்புக்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இனி ஒரு பைசா செலவு செய்து எந்த சேவையும் (அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள) கோயில்களில் பெறப்போவதில்லை. தங்கள் சொந்த வேலைகள், குடும்பம், சொத்து சேர்ப்பது என்று அனைத்தையும் விட்டு பல பயங்கர அச்சுறுத்தல்களையும் தாண்டி நற்காரியங்கள் செய்பவர்களுக்கு நேரடியாக களத்தில் முடியாவிட்டாலும் பணமாகவாவது, உதவுவதே தெய்வத்துக்கு செய்யும் சேவையாகும்.
நாட்டுப்பசுக்களுக்காக பெருமுயற்சிகள் செய்துவரும் கொங்க கோசாலை அமைப்புக்கு சிங்கபூர் நண்பர்கள் சேர்ந்து ஒரு தொகையை கொடுத்துள்ளோம். அதுபோல, இனி ஆலய வழிபடுவோர் சங்கம், ரீச் பவுண்டேசன் போன்ற அமைப்புக்களுக்கு என்னாலான வழிகளில் உதவ நினைக்கிறேன்.

திருவருள்

திருவருள் என்ற படம். அதில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான வசனம் வரும். "எல்லா நம்ம கைலதான் னு நெனைக்கற வரைக்கும் தான் இன்பம்-துன்பம் எல்லாம் நம்மை பாதிக்கும்... நம்மையே அவன்கிட்ட ஒப்படைச்சிட்டா, எதுவும் நம்மள பாதிக்காது" னு பாமர மொழியில் சொல்வார். உள்ளார்ந்த அன்பினாலோ, வெளிப்புற அழுத்தம் தாங்க இயலாமலோ அந்நிலை வரலாம். அந்த மனநிலையை அடைவதும், அந்நிலையில் வாழ்வதும், அதனால் கிடைக்கும் லேசான மனமும் அனுபவித்துணர வேண்டிய சுகம். வேலைப்பளு, சமூக அழுத்தங்கள், மனக்குமுறல்கள், பகை-பழியுணர்ச்சி, ஏக்கங்கள் என அனைத்து இரும்பு குண்டுகளும் நம்மில் இருந்து உதிர்ந்து போகும். அந்த மனநிலையில்தான் தெய்வத்தை உணர முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படியான மனநிலையால், நிகழ்காலத்தில் அதிகம் வாழ முடியும்; பொறுப்பின் அழுத்தம் பெரிதாக பாதிக்காது; தவறு செய்யும் எண்ணம்-சலனம் ஏற்படாது.
கோயில்கள் காவல்-நீதித்துறை பணிச்சுமையை குறைக்கும் என்பதன் அர்த்தமும் இதில்தான் உள்ளது.

முடிக்கு அடிக்கும் டை

முடிக்கு அடிக்கும் டை மூலம் கடுமையான விஷம் ஸ்லோ பாய்சன் போல உடலில் இறங்குகிறது. சேலத்தில் ஒரு அரசியல்வாதிகூட இந்த டை விஷத்தின் தாக்கத்தால்தான் இறந்தார் என்ற விஷயம் பரவலாகவில்லை. தலைவலியில் இருந்து கண் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் என்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இந்த டையை தயாரிக்க இயற்கை காயப்படுகிறது. நம் முன்னோர்களும் முடிக்கு டை அடித்துள்ளனர். சேதாங்கொட்டை என்னும் செடியின்மூலம் பெறப்படும் விதைகளை குத்தி சாறு எடுத்து பயன்படுத்துவார்கள். ஒன்றுமில்லை, நம்ம கிராமத்து வண்ணார சாதியினர் துணியில் குறியிடும் மை அதிலிருந்துதான் செய்கிறார்கள். இதன் ஆயுளும் அதிகம், உடலையும் கெடுக்காது.
(அந்த செடியை கொண்டு ஒரு புது சுதேசி பொருளை கண்டுபிடிக்கலாம்; காப்புரிமை கேட்க மாட்டேன்  )

வளர்ந்த நாடுகள்

அரசியல்வாதிகள் பேசும்போது வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளை குறிப்பிட்டு அந்த நாடுகளைப் போல இந்தியாவை மாற்றுவோம், என்று சொல்கிறார்கள். அது தவறு, அது சாத்தியமுமில்லை. பணப்புழக்கமுள்ள தொழில்களை மட்டும் செய்வதாலும், பெரு நிறுவனங்களின் மையங்களை கொண்டிருப்பதாலும் தான் இந்த பணக்கார தோற்றம். ஏராளமான ஏழை நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்களை சுரண்டியும் அழுக்காக்கியும்தான் பணக்கார நாடுகள் தங்கள் பகட்டான தோற்றத்தை தக்க வைக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் இந்த தொழில் முறை சாத்தியமில்லை. எல்லா நாடுகளும் சுரண்டலை கையிலெடுத்தால் உலகம் தாங்காது. மலைகளும், காடுகளும், நதிகளும் சீரழிந்து போகும். உலகமே மனித நுகர்வுக்குத்தான் என்ற வெளிநாட்டு சித்தாந்தங்களின் வெளிப்பாடு அது. நம்மை இயற்கையோடு இணைத்துக்கொண்டால் வாழ்வு பூரணமாக இருக்கும். அதை தற்போது பல நண்பர்கள் அந்த வாழ்க்கை முறையில் எல்லா கோணங்களிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
ஆக, வளர்ச்சிப் பொருளாதாரம் என்றும் இந்தியாவை அதுவாக இதுவாக ஆக்குகிறேன் என்றும் சொன்னால், நீங்க எதுவாகவும் ஆக்க வேண்டாம் இந்தியா சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை மிகச் சிறப்பாகத்தான் இருந்தது; காலனிய, கம்யூனிச, முற்போக்கு குழப்பங்களால் சீரழிந்ததை மீட்டுக் கொடுங்கள் போதும் என்று சொல்லுங்கள்.