Sunday, 13 April 2014

சித்திரைகனி புத்தாண்டு நினைவுகள்

புத்தாண்டு அன்று எங்கள் ஊர் மாரியம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்கும் விழாதான் முதல் வேலை. வெள்ளை வேஷ்டி, பனியன், தீர்த்த குடம், உருமாலைக்கு துண்டு என்று எடுத்து சைக்கிள் கேரியரில் குடத்தை பொறுத்திவிட்டு கோயிலுக்கு சவாரி கிளம்பிவிடும். நான் வளர வளர தீர்த்த சொம்பும் தீர்த்த சட்டியாகி பின்னர் குடமாக மாறியது. லேட்டானால் L.R.ஈஸ்வரி குரலுக்கு பிரேக் போட்டு, பொடுசுகள் கோயிலில் மைக்செட்காரரிடம் வாய்ப்பு கேட்டு, அரசியல் மேடைகளில் தாங்கள் கவனித்த சொல்லாடலை வைத்து பக்தர்கள் அனைவரையும் சீக்கிரம் வர சொல்லிமைக்கில்அறைகூவல் விடுப்பார்கள்.  பாய் கடையில் பூ வாங்கிக்கொண்டு கோயிலில் இருந்து எல்லாரும் ஒன்றாக ஆற்றங்கரைக்கு போவோம். வழியில் மாந்தோப்பில், தீர்த்தக்குடத்தில் செருக மாவிலைகளோடு சித்திரை மாத மாங்காய்களும் மாம்பிஞ்சுகளும் சூறையாடப்படும். புதிதாக வருபவர்கள் பயந்தால் சீனியர்கள் இதெல்லா நம்ம கோய காடு; கவுர்மெண்டு கோயல எடுத்து கோய காட்ட திருச்செங்கோடு முனிசிபாலிட்டிகாரனுக்கு குடுத்துட்டாணுக.. மொத திரடன் அவன்தான்.. நம்ப காடு இதெல்லாம்; நம்பு பாட்டங்காலத்துல கோயளுக்கு உட்ட காடு.. எவனாவது வந்து கேட்டா பாத்துக்கலாம் என்று ஜூனியர்களுக்கு தெகிரியம் சொல்வார்கள். பின்னர் ஆற்றில் ஜலக்கிரீடை துவங்கும். ஆற்றுநீருக்கென தனிப்பட்ட வாசமும் வெதுவெதுப்பும் உற்சாகம் தரும். விளையாட்டு ஒரு மணிநேரம் நீளும். ஒவ்வொருவராக ஆற்றோர அரசமர பிள்ளையாருக்கும் நாகருக்கும் மூன்று முறை நீர் எடுத்துவந்து ஊற்றுவார்கள். பின்னர் குடங்களில் தீர்த்தம் பிடிக்கப்பட்டு, பறித்த மாவிலைகள் செருகி, வாங்கிய பூக்கள் சுற்றப்பட்டு, கோயில் பண்டாரம் குடங்களுக்கு பொட்டுபோட்டு, ஆற்றங்கரையில் பூஜை துவங்கும். கதம்ப பூவின் வாசம் மூக்கை வருட சீமாடு கூட்டி குடங்கள் தலைக்கேறும். தங்கள் கோயில் உரிமையும் கடமையும் தவறாத எங்கள் ஊர் பறையர்கள் தப்பட்டை வாசிக்க கோயிலை நோக்கி புறப்படுவோம். அவர்களின் வாசிப்பு எங்கேயோ பல நூறு வருடங்களுக்கு முன் நம்மை தூக்கி செல்லும். மனதில் பல நூறு வருடங்களுக்கு முன் எங்கள் பங்காளி வீட்டு பெண்ணாக பிறந்து வாழ்ந்த எங்க மாரியம்மன் காலம்தானோ அது என்று எண்ண வைக்கும். எங்க ஊர் தெய்வம் என்பதை விட அம்மாயி என்று வணங்குவது மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கும். கஷ்டமான சூழலில் கனவில் வந்து அப்படி செய் என்று ஆலோசனையும், பலவீனமான காலங்களில் தைரியமும் சொல்லும். பலரும் சாமி வந்து ஆடுவார்கள். வருடந்தோறும் தவறாமல் சாமிவரும் சிலரின் மீது என் கண்கள் எப்போதும் இருக்கும். முஸ்லிம்கள் கூட குடத்தில் நீர் கொண்டுவந்து  ரோடுகளில் ஊற்றி பக்தியோடு வணங்குவார்கள். கோயிலை மூன்று சுற்று சுற்றி தீர்த்தம் ஊற்றி மாரியம்மனை குளிர்விப்போம். மதியம் பொங்கல் வைக்க சந்தை இடத்தில் பெண்கள் தயாராகும்போது ஆற்றில் விளையாடி வந்து அபிசேகம் முடித்து அவரவர் குடத்தை தேடிபிடித்த களைப்போடு வீட்டுக்கு வந்து சேர்வோம். கொண்டுவந்த தீர்த்தம் வீடெல்லாம் தெளிக்கப்படும். தீர்த்தகுடம் கோயில்தேர்போல, அடுத்தவருடம் வரை அலங்காரத்துக்கும் ஆராதனைக்கும் காத்திருக்கும். 

சிங்கப்பூர் வந்த பிறகு, சித்திரை தீர்த்தக்குடத்திற்கு வாய்ப்பின்றி போனது. போன வருடம் வாய்ப்பு கிடைத்த போதும், ஆற்றில் நீருக்கு பதில் சாய விஷம்தான் ஓடுகிறது என்று கண்கூடாக கண்டு நானே போகவில்லை. எங்க அம்மாயி (மாரியம்மன்), கோவக்காரி. பேரேஜ் பாறைகளே சாயமிட்டதை போல மாறிவிட்டது. அந்த விஷத்தை கொண்டு ஊற்ற மனம் ஒப்பவில்லை. நீயே பாத்துக்கம்மாயி என்று மனம் வருந்தி சொல்லிவிட்டு அக்கட்ட வந்துவிட்டேன். இன்று முஸ்லிம்களும் கோயில் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். கிராம நிர்மாணம் செய்யும்போது மேற்கே அரசமரம் வைப்பதற்கு சாட்சியாக இருக்கும் எங்கள் ஊர் அரசமரம் இன்று புதிய பேரேஜ் கட்டுமானத்தில் ஓரத்தில் கம்பீரம் குறைந்து காணப்படுகிறது. உலகமயமாக்கல் என்னும் அரக்கனின் பிடியில் கிராமங்கள் சிக்கியிருந்தாலும், முன்னைவிடவும் ஊரில் பக்தி கூடியுள்ளதாகத்தான் அறிகிறேன்.

பக்கத்து வீடுகளில் சிலர், பக்கத்து ஊரில் நட்டாத்தீஸ்வரன் (நட்டாற்று ஈஸ்வரன்) கோயிலுக்கு சென்று வருவார்கள்; எனக்கு ஏனோ எங்க அம்மாயி கோயிலே நேரத்தை இழுத்துக்கொண்டதால் ஈஸ்வரனை தரிசிக்க வாய்ப்புக்கிட்டாமல் போனது.

சித்திரை ஒன்றுதான் எங்கையனின் நினைவு நாள். அவரின் படத்தை நான்தான் சுத்தம் செய்து பொட்டு பூவெல்லாம் பொட்டு, சாமி கும்பிட ஏற்ப்பாடு செய்வேன். அவரது உடற்கட்டு வீரதீர செயல்களை கேட்கும் போது பெருமையாக இருக்கும். ஆனாலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பது வருந்தத்தக்கது. அவரும் அவரது சகாக்களும் தீவிர திமுக செயல்வீரர்கள். தற்காப்புக்கோ என்னவோ. அது ஒருகறைபட்ட தலைமுறை. வெள்ளையர் ஏற்ப்படுத்திய ஐம்பது வருஷ பஞ்சகாலத்து கொடுமையால் தங்கள் பாரம்பரிய மரபுகளை மறந்த தலைமுறை. ஊரில் தர்மத்தை காக்க வேண்டிய பொறுப்புள்ள மக்கள் தர்மம் தவறி நடந்தார்கள். குலகுருவின் அவசியம் என்ன என்பதை எனக்கு உணரவைத்தது எங்கையன் தலைமுறை வாழ்க்கை. ஒரே நாட்டுபசுவின் கறந்த பால் சூடாறும் முன் சட்டியோடு அப்படியே குடிப்பாராம்; கோயில்களுக்கு செலவழிப்பதில் கணக்கு பார்க்கமாட்டார்; திருப்பதிக்கு பொட்டுக்கூடையில் பணத்தை கொண்டுபோய் கொட்டுவாராம் என்று அவரின் பிரதாபங்கள் நீளும். சித்திரைக்கனிக்கு ஊரில் மற்ற சொந்தங்கள் தங்கள் காணியாச்சி கோயிலுக்கு சென்றுவருவார்கள். நாங்கள் ஏனோ போவதில்லை.


அப்புறம் என்ன, லீவ் நாள் ஜாலிதான்... எல்லாரும் தமிழ் புத்தாண்டு என்று அழுத்தி சொல்கிறார்கள். புத்தாண்டு என்றாலே சித்திரை தான். யாரும் Happy English New Year” என்று சொல்வதில்லை. மேற்கத்திய புத்தாண்டு என்பதே யூதர்கள் ஆண்குழந்தை பிறந்த எட்டாம் நாள் செய்யும் சுன்னத் போன்ற சடங்கு, இயேசுவுக்கு செய்யப்பட்ட நாள்தான் என்கிறார்கள். மேற்கத்திய புத்தாண்டின் பின்புலம், உள்ளிருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. எந்த புத்தாண்டும் இனத்தை அடிப்படையாகவோ, மொழியை அடிப்படையாகவோ கொண்டு மாறுவதில்லை. அது இயற்கையின் சுழற்சி காலம் பொறுத்துத்தான் என்பதே நிஜம். திரு.பாலகவுதமன் சொல்லியபிறகே புத்தாண்டு மாற்ற பின்னணியில் இருந்த சூது மற்றும் முட்டாள்தனம் பற்றி அறிய முடிந்தது. 

பனை-நேரடி அனுபவங்கள்

உள்ளூரளவில் மட்டுமல்ல, உலகளவிலும் வெள்ளை சர்க்கரையை மக்கள் புறக்கணிக்க துவங்கியதோடு அதே வேகத்தில் பனை பொருட்களை மாற்றாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். என் ஊர், வட்டாரம் என நான் நேரடியாக கண்ட வகையில், 

*என் நண்பன் வேலை செய்யும் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தருகிறது. அந்நிறுவனம் போன மாதம் முன்வைத்த கோரிக்கை ஒன்றை கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். "எங்கள் பிஸ்கட்களை பனங்கருப்பட்டி-பனங்கல்கண்டு கொண்டு செய்து தர முடியுமா..??"

*ஈரோடு மாநகரில் வாழும் என் நண்பர் ஒருவர்; ஈரோட்டில் பெரும்பான்மையானோர் அறிந்திருக்கும் மனிதர். வீட்டிற்கு அழைத்திருந்தார். வீட்டில் கருப்பட்டி தான் உபயோகித்தார். "உங்கூர்ல சுத்தமான கருப்டி கெடச்சா எவ்வளனாலும் வாங்கீருங்க.. நா வாங்கிக்கரன்" என்றார்.

*என் கிராமத்து நண்பர் வீட்டில் பிரசங்கமே நடந்தது. அதை பற்றி தனி பதிவே எழுதுகிறேன். அப்போது அவர் வீட்டம்மாவிடம் கருப்பட்டி கொத்தமல்லி காப்பி கொடுக்க சொன்னார். சொன்ன காரணம், "டவுன் கேப்மாரிங்க, ஊட்டுக்கு வந்தா டீ/காப்பி வெள்ள சக்கரைல போட்டு குடுப்பன்; அந்த மாட்டெலும்பு சூப்ப குடுச்சாத்தான் அவுனுகுளுக்கு ஒனத்தியா இருக்கும்.. குடுச்சுட்டு சாகட்டும்.. நம்மாளுங்க, வேண்டியவங்க வந்தா கருப்பட்டி காப்பிதான்.." என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்களும் பிரமிக்க வைக்கும். எனக்கோ மனத்தில் 16 வயதினிலே படக்காட்சி ஓடியது; டீக்கடையில் கிராமத்து ஆட்களுக்கு கருப்பட்டி டீயும் பட்டணத்து டாக்டருக்கு வெள்ளை சீனி டீயும் கொடுக்குமாறு கவுண்டமணி சொல்வார்.


                                           

சீமைமாட்டு விஷப்பால் எப்படி கேடு செய்யுமோ அதே போலத்தான் வெள்ளை சர்க்கரை உடல் நலம், மன நலம், தேச பொருளாதாரம், இயற்கை வளம் ந அனைத்தையும் பாதிக்கிறது. காமதேனுவாகிய நாட்டுபசுவை கொல்வதும், கற்பக விருட்சமான பனையை வெட்டுவதும் வெவ்வேறல்ல.. பாரதத்தில் மட்டுமல்ல, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நூல்களிலும் பனையை பற்றி மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.

Thursday, 10 April 2014

சிலம்ப வாத்தியாரின் சமூக பாடம்


எங்கள் ஊரில் மாலை மசங்கி இரவு தொடங்கிய நேரம். ரெண்டு நாளில் சிங்கபூர் கிளம்ப வேண்டிய சூழலில் என் சித்தப்பா வீட்டுக்கு போக வேண்டியது நினைவு வர சென்று வரலாம் என்று போனேன். விவசாயிகள் வீட்டில் பால் கேன் கழுவி கமுத்தி கொண்டிருந்தார்கள். சிலர் ஆடுகளுக்கு இரவு தீனி போட்டுக்கொண்டு இருந்தார்கள். ராத்திரி சிப்ட்க்கு ஸ்பின்னிங் மில் வண்டிக்கு சில பதின்ம வயது பையன்கள் அவசரமாக கிளம்பி கொண்டிருந்தனர். மருந்தடிக்கும் நாய்க்கர் வீட்டில் எட்டு மணிக்கெல்லாம் தூக்கம் துவங்கிவிடும். எல்லா வீட்டையும் கடந்து, சித்தப்பா வீட்டை அடைந்தேன். சின்ன வாண்டு ஜெயஸ்ரீ தன் உயரம உள்ள சில குச்சிகளை தூக்கிகொண்டு வீட்டருகில் இருக்கும் காலி இடத்திற்கு சென்று கொண்டிருந்தாள். சிலம்ப பயிற்சி என்று சொன்னதும் ஆர்வமாக நானும் போய் காத்திருந்தேன். பீடியை புகைத்துக்கொண்டு சேம்பர் புழுதியேறிய லுங்கி கட்டிக்கொண்டு சிக்கலை உருட்டியவாரு அறுவது வயது மதிக்கத்தக்க முதியவர் வந்தார்.



(படத்தில் இருப்பவர்) எங்கள் பகுதியில் சிறுவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்று தருகிறார். மிக எளிய வேலையில் இருப்பவர்தான். இருப்பினும் தான் கற்ற கலை அழியகூடாது என்னும் ஆவலால் தன் பன்னிரண்டு மணிநேர வேலையை முடித்து ரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்து கற்றுத்தருகிறார்! தற்செயலாக சந்தித்த இவரிடம் கொஞ்சம் பேசினேன். கிராமங்கள் குறித்த தவறான பிம்பம் உடையும் வண்ணம் அவரின் கூற்று இருந்தது.

இவர் பிறந்து வளர்ந்தது நாமக்கல் மாவட்டப்பகுதி. எளிய குடும்பம். இளைஞர்கள் ஊர் காவலுக்கு ஒன்று சேருவது வழக்கம். அப்படி சேர்ந்தவர்கள் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவு செய்து மதுரையில் இருந்து சிலம்ப வாத்தியாரை வரவழைத்தனர். தினமும் கறி, பாட்டில் சாராயம், அதற்கு மேல் மாத சம்பளம் என சிலம்ப வாத்தியார் காஸ்ட்லி பட்ஜெட். இளைஞரான இவரும், சிலம்பம் கற்கும் ஆசையை வீட்டில் சொல்லி அடம் பிடித்தாராம். 

“இந்த பண்ணாட்டு நம்முளுக்கு எதுக்கு? ஒரு மொள நாய்க்கு ஒன்ற மொள வாளெதுக்கு? மொத, வாத்தியாருக்கு காசு அவுக்க உங்க பாட்டன் மூட்ட கட்டி பொதச்சி வெச்சிட்டு போயிருக்கானு நெனச்சயா? அப்புடி காசு இருந்தாலும் அவிளோட ஒன்னா உன்னைய சேத்திக்குவாங்களா?” என்று கேள்விகளால் அடிக்க இவரின் ஆசை மூட்டைகட்டப்பட்டது. 

“மாடு மேய்க்க போனபக்கம் போசிய (டிபன் பாக்ஸ்) பூவரச மரத்துல மாட்டீட்டு, மாட்டுக்கு அன்னாங்கால போட்டுட்டுட்டு, கூட வந்த பசவளோட நேத்து வாத்தியார் அப்புடி சொன்னாரு இப்பிடி சொன்னாரு னு கவக்குச்சிய வச்சு சுத்திகிட்டு இருந்தன்.. ஊர்க்கவுன்று மவன் சின்னவரு தண்ணிகட்ட வந்தவரு பாத்துபுட்டு உனக்கும் தடிவிரச பலவ ஆசையா? னு கேட்டாரு.. ஆமாங் ஆனா உங்களோடொண்ணா பலவ முடியாது; காசுமில்லீனு எங்கையன் சொல்லிப்புட்டாருங்க ன்னு சொன்னன்... மய்க்கா நாளே ஊட்டுக்கு வந்து எங்கய்யாகிட்ட ‘இவுனுக்குன்னு வாத்தியாரு தனியாவா சொல்லித்தராறு? நாம்பாத்துக்கறன், அனுப்புங்கனு அவுரு புல்லட்லியே என்னீமு கூட்டீட்டு போய்ட்டாரு..என்னோட பங்குக்குமு அவரே காசு குடுத்துட்டாறு” 

தினமும் மாலை பெட்ரமாக்ஸ் லைட் வெளிச்சத்திலும் மற்றும் வீட்டுக்கு வீடு இருக்கும் புல்லட் வண்டிகள் வட்டமாக நிறுத்தப்பட்டு அதன் ஒளிவெள்ளத்திலும் சிலம்ப பயிற்சி நடக்குமாம். 

“அந்த காலத்துல சாதி கொடும னு சொல்றாங்க.. நீங்க இப்பிடி ஏறுக்குமாறா சொல்றீங்க?” 

“அது என்னமோ அப்பிடிலாம் நான் கேள்விப்பட்டதில்ல பொன்னு.. ஊர் புள்ளைக பசவல தாம்பெத்த கொளந்தையாட்டம் பாக்கரதுனால தான் அவுரு ஊர்க்கவுண்ரு. இன்னிக்கிம் அவுரு பயன்தா எங்கூர்க்கவுண்ரு.. அவுங்கூட்டுக்கு போனா சாப்படாத போவ உட மாட்டாங்க.. நாயம்னா நாயமா இருப்பாங்க.. ஒருக்கா அவுங்க ஜாமீன் கையெழுத்து போட்டு சொத்து ஏலத்துக்கு வந்தப்பவும் ஊருல அவுங்க மரியாத கொறையில.. பணம் இன்னிக்கு வரும் நாளைக்கு போவுங்கன்னு.. இப்பிடி கொணமான மனசர பாக்கமுடிமா, சொல்லு..?”

“ஈவெரா லாம் உங்க காலத்து ஆளுதான? நீங்க அங்கீலாம் ஏம்போவுல?”

“எங்கூருல சாராய யாவாரி தான் தி.க. தி.க. னு சுத்துவாங்கன்னு.. செரியான தறுதல.. தி.க ல இருந்தவ அப்பறம் அரசிலு கச்சிக்கு போயி பிராந்திகட எடுத்தான்.. அரசிலு செலுவாக்கு வச்சு கோய காட்டையும், சாமியார் காட்டையும் பட்டா பண்ணிக்கிட்டான்.. அந்த காட்டு வருமானத்த வெச்சி கோய, மடத்துல லாம் அன்னதான, பூச எல்லாம் பண்ணுவாங்க.. அவன்கிட்ட கேட்டா பாப்பாங்காடுதான னு நாயம் பேசுனான்.. அப்பறந்தா தி.க. இதெல்லா எதுக்கு னு தெரிஞ்சுது.. அந்த சாராய யாவாரி பொண்ணு காதலிச்சி ஓடிபோய்ருச்சு.. பயன் ஆக்செண்டுல அல்ப்பாயுசுல தவறிட்டான்.. குடும்பமே கந்தறையா போச்சு.. செஞ்ச வெனைய அனுபவிச்சாவோனுமில்ல? இதுனால தான் எங்கப்பாறு அந்த பக்கமே எனய போவுடுல..”

நன்றி னு சொல்லிட்டு அந்த நல்ல மனுசன போட்டோ எடுத்து கொண்டு வந்தேன்.. சர்க்கார் மற்றும் அவர் முதலாளி கெடுபிடிகளின் காரணமாக வெளிப்படையாக அவரால் வகுப்பெடுக்க முடியவில்லை. அதனாலேயே அவரது தனிப்படம்/குழுப்படம் பிரசுரிக்கவில்லை. கிராமத்து மனிதர்கள் மற்றும் கிராம சமூகம் பற்றி எப்போதும் தவறான கருத்துக்களையும் பிம்பத்தையும் பரப்பி வரும் மீடியாக்கள், பள்ளி பாடங்கள், சில எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் இவர் போன்றோர் மூலம்தான் உண்மை நிலையை உணர இயலும்..

Friday, 4 April 2014

ஆர்வம்

ஆர்வம் என்று உள்ளார்ந்த விசயமாக ஒன்று இருப்பதாக கருதவில்லை. ஆர்வம் புறவயமானது. ஒன்றில் நாம் இன்புறும்போது அதில் ஆர்வம் அதிகரிக்கிறது. இன்பம் என்பது உணர்தலில் இருக்கிறது. சுவையை, மணத்தை, சுகத்தை உணரும்போது இன்பம் ஏற்படுகிறது. ஒரு சங்க இலக்கிய பாடலை பதம் பிரித்து அதன் பல பொருட்களை உணரும்போது பரவசம் ஏற்படுகிறது. அதில் ஆர்வம கூடுகிறது. புரியாவிட்டால் அட போங்கடா என்று அவ்விடம் விட்டு நகர சொல்கிறது. அதுபோல, நம்மால் உணர/புரிய கூடிய விசயங்களில் நமக்கு இன்பம் உண்டாகி, ஆர்வம வருகிறது. நம் புறச்சூழலில் நம் காணும் விசயங்கள், கற்பிக்கப்படும் விஷயங்கள், சாகசங்களால் ஏற்படும் பரவசம் காரணமாக ஈர்க்கபப்டும் விஷயங்கள் என்று, நம் ஆர்வம உள்ளில் இருந்து வெளியே இல்லாமல் வெளியில் இருந்து உள்ளே செல்கிறது. ஆழ மனதில் பதியும் இந்த விஷயங்கள் சந்தர்பம் வரும்போது மீண்டும் வெளிப்படுகிறது.

நிபுணர்களாக துறைக்குள் வந்தவர்களைவிட ஒரு துறைக்குள் சென்று ஆர்வத்தால் கற்று நிபுணரானவர்களே அதிகம். பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை தூண்டவும், பாரம்பரிய கலைகளை/நிபுணத்துவத்தை அழிக்கவும் தொடர்ந்து சுய ஆர்வம என்ற factor பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் சண்டேச நாயனார்கள் மிக குறைவு என்றே கருதலாம். விதிவிலக்குகள் விதிகள் செய்யாது.

Wednesday, 2 April 2014

அறநிலையா துறை

ஒரு கிராமத்தில் விவசாயியும் அவர் மனைவியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பல குழந்தைகள். அவர் தன் நிலத்தில் ஒரு பகுதியில் தனது இஷ்ட/குல தெய்வத்தை வைத்து வணங்குகிறார். அவர் காலம் சென்ற பின்னர் அவரின் வாரிசுகளும் அதே கோயிலை வணங்கி வருகிறார்கள். அனைத்து பங்களிப்போடு கோயில் பெரிதாக கட்டி, அதன் நிர்வாகத்துக்கு தாங்கள் பாடுபட்ட பணத்தில் வரியாக, வேண்டுதலாக, தானமாக என்று சொத்துக்கள் வாங்கப்படுகின்றன. சில தலைமுறைகள் கடக்கின்றன. இவர்களின் முப்பாட்டன் கோயில் எனவே, யாரும் இதை ஆவணப்படுத்தவோ, பிரித்துகொள்ளவோ இல்லை. கோயிலின்பால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களும் பக்தியால் வருகிறார்கள். அந்த விவசாயியின் வாரிசுகளும் பெருந்தன்மையோடு அனுமதிக்கிறார்கள். திடீரென ஒரு நாள் பூத உடல், மரு வைத்த கன்னம், கெடா மீசை, இருபது அடியாளோடு ஒருவன் வந்து கோயிலில் இனி எல்லாம் என் சொற்படிதான் நடக்கவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து சாமி கும்பிட, வண்டி நிறுத்த, பிரசாதம் வாங்க என எல்லாவற்றிற்கும் டோக்கன் போட்டு வசூல் வேட்டை ஜோராக நடக்கிறது. இந்த கொள்ளையை கோயில் நிர்வாகம் என்று கணக்குக்காட்டி அதற்கும் கோயில் பணம் சுரண்டப்படுகிறது. கோயில் சொத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசாமியின் சொந்த செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோயிலை சீரமைக்கிறேன் என்று முன்னோர்களின் நினைவாலயத்தை இடித்து மாடர்ன் கட்டிடம் கட்டுகிறான். கோயில் வளாகத்தில் கோயில் பணத்தில் கறி சாராயம் என கூத்து நடக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகளை மாற்றி நான் சொல்வது போலத்தான் பூசைகள், சம்பிரதாயங்கள் நடக்கணும் என்று உத்தரவு போடப்படுகிறது. பாவம், வறட்சி கால விவசாயம் செய்தே வத்திப்போய், தங்கள் உரிமைகள் என்ன வென்று அறியாத அந்த ஏழை குடியானவனின் வாரிசுகள் இயலாமையால் வெறுமனே வேடிக்கை பார்த்து தங்கள் சாமியை காண டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்..? இதுதான் இப்போது பெரும்பாலான கோயில்களில் நடக்கிறது. அந்த ஆசாமி, நம்ம தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையாத்துறை தான்.. ஆமை புகுந்த வீடும்; அமீனா புகுந்த வீடும்; அறநிலையதுறை புகுந்த கோயிலும் உருப்படாது.. நேரடியாக பல கோயில்களில் கண்ட உண்மை..

இந்த அறம் அழிந்த துறை பற்றிய சிறு புத்தகம் இங்கே சொடுக்கவும்
http://www.mediafire.com/download/j2fivj36ms6fpk6/HR%26CE-Exposed.pdf










சர்க்கரை

Now the mainstream western medias also started to campaign against sugar. Before entering into, who is behind this campaigns and why after 3-4 decades, this campaigns got heat, lets go through the materials and facts,

https://www.youtube.com/watch?v=dBnniua6-oM

http://www.smh.com.au/lifestyle/diet-and-fitness/john-yudkin-the-man-who-tried-to-warn-us-about-sugar-20140212-32h03.html

Ebook of Pure white and deadly, 1972 - http://www.sheldonsblog.com/wp-content/uploads/2012/10/John_Yudkin_-_Pure_White_and_Deadly_revised_1986_OCR.pdf

சர்க்கரையில் மாட்டின் எலும்பு:https://www.vrg.org/journal/vj2007issue4/2007_issue4_sugar.php

இனிப்புக்கு முதல் தர தேர்வு பனங்கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு.. இரண்டாம் தர தேர்வு, நாட்டுக்கரும்பு கொண்டு செய்யப்பட்ட நாட்டு சர்க்கரை, வெல்லம்.. (சர்க்கரை ஆலைகள் ப்ரோமொட் செய்யும் ஹைபிரிட் கரும்பு ரகங்கள் அல்ல)

சுத்தமான பனங்கருப்பட்டி வேண்டுவோர் 88837-40013 தொடர்பு கொள்ளவும்-(நான் வாங்குவது)

முற்போக்கு..

தங்கள் ஈகோ அல்லது சில்லறை பிரச்சனைக்காக மனம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்யணுமாம். அது தனிமனித உரிமையாம். அதை ஏதுமறியா சிறு குழந்தை சகித்துக்கொண்டு புதிய அப்பா (அ) அம்மாவை (!) முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால் அந்த முதிர்ச்சியை பெற்றவர்கள் கண்டுகொள்ள தேவை இல்லையாம். முற்போக்கு & பெண்ணியவாதிகளே! உங்கள் கருத்துக்கள் கொஞ்சம் கவிச்சி அடிக்கிறது. நாங்க பிற்போக்காவே இருந்துட்டு போறோம். உங்க புரட்சி மூட்டைய சீனாவில் வியாபாரம் பண்ணுங்க. பாவம்! உங்கள் கைங்கர்யத்தால் அமெரிக்கா ஏற்கனவே நொந்து கிடக்கிறது!

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. 

இதில் ஒரு துளியேனும் நியாயம் உள்ளதா?? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா..?? மீடியாக்கள் முதல் நம்மை ஆளும்/ஆண்ட சர்க்காருக்கும் கோட்டானு கோட்டி நன்றி யேசப்பா!