Tuesday, 31 December 2013

வேப்பெண்ணெய் சேமித்து தரும் 30 ஆயிரம் கோடி..!


தழைச்சத்திற்கு விவசாயிகள் இடும் யூரியாவில் பாதிக்குமேல் வேகமாக வெளியேறியும்/காற்றில் கலந்தும்/நுன்னியிரிகளால் ரசாயனமாற்றம் செய்யப்பட்டு பயிருக்கு பயன்படாமல் போகிறது. வேப்பெண்ணெய், வேப்பம்புன்னாக்கு கலந்து இடுவதால் இழப்புகள் கட்டுபடுத்தபட்டு 30% வரை சேமிக்கபடுகிறது. அதாவது ஏக்கருக்கு 3 மூட்டை இட வேண்டிய இடத்தில் 2 மூட்டை போதுமானது. அல்லது 3 மூட்டை இடும்போது 4 மூட்டைக்கான விளைச்சல் கிடைக்கிறது..!! மறைமுக பலனாக பலநோய் தாக்குதல்களும் தடுக்கிறது.

இடும் முறை: (ஒரு மூட்டைக்கு) ½ லிட் வேப்பெண்ணெய்+1/2 கிலோ (தேவைகேற்ப)வேப்பம்புண்ணாக்கு கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும். உரசாக்குகளை(பிளாஸ்டிக்) விரித்து அதன்மேல் யூரியாவை கொட்டி, பேஸ்ட்ஐ பிசரி 1/2 மணிநேரம் கழித்து மூட்டையில் பிடித்து வைக்கலாம்/பயன்படுத்தலாம். யூரியா மட்டும்அல்ல, அமோனியா முதலான தழைச்சத்து உரங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.கடைகளில் கிடைக்கும் யூரியா கோட்டைவிட இது சிறப்பாக இருக்கும்.

உள்நாட்டு தேவை : 2.8 கோடி டன் ரூ.9,000 /டன்(ரீடெயில் விலை)
உற்பத்தி : 2.2 கோடி டன் ரூ.13,000/டன்(உற்பத்தி விலை)
இறக்குமதி : 60 லட்சம் டன் ரூ.23,000/டன்(இறக்குமதி விலை)

இந்த முறையால் விவசாயிக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்தோம். நாட்டுக்கு..??!! இந்தியாவின் வருட உர மானிய நிதிச்சுமை 1 லட்சம் கோடிக்கு மேல். 30% யூரியா சேமிக்கபட்டால் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னியசெலாவணி அப்படியே மீதி! அதற்குமேல் உள்நாட்டு மானிய நிதிச்சுமை சேமிப்பு!! கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி. உள்நாட்டு யூரியா தேவை 1.96 டன்னாக குறையும்.

(உர உற்பத்தி ஆலையிலேயே கோட்டிங் செய்யலாம். திட்டம் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளது.. !)

வெளிநாட்டு விவசாயிகள் வேப்பெண்ணெய் நன்கு பயன் படுத்துகின்றனர். வேப்பெண்ணெய்/வேப்பம்புண்ணாக்கு வெளிநாட்டு விவசாயத்தின் ஓர் அங்கம. KVK மூலம் இவை அறிவுறுத்தபட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமீபமாக விவசாயத்தில்,ஆடு,மாடு வளர்ப்பில் வேப்பெண்ணெய் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், உழவனுக்கும், நிலத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..!

நாட்டு மாடுகளிலும் 12 லிட்டர் பால் கறக்கலாம்..! நாட்டு பசும்பால் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்க படுகிறது..!

"இதிலும்அன்னிய முதலீடாவேண்டாமே!'உள்நாட்டு மாடுகளிலும், 12 லிட்டர் வரை பால் கறக்கலாம் என்று கூறும், நடராஜன்: என் தாத்தா காலத்தில்இருந்தே, விவசாயம் தான் பார்க்கிறோம். சிறு வயது முதலே, மாடுகள் மேல் எனக்கு பிரியம் அதிகம். இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என, பல வகைகள் உள்ளன.
ஆனால், ஜெர்சி, பிரிசயன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத் தான், சமீப காலமாக, விவசாயிகள் விரும்பி வளர்க்கின்றனர். நாட்டு மாடுகள் குறைந்த அளவு பால் தருவதால், பற்றாக்குறையை தடுக்க, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட, வெளிநாட்டுப் பசுக்கள் மூலம், பால் உற்பத்தி செய்ய அரசே ஊக்குவிக்கிறது.

ஜெர்சி இன மாடுகளில், வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம், பால், சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. இதன் சாணம் மற்றும் சிறு நீரால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நம் நாட்டு மாடுகளில், வேர்வை நாளமும், திமிலும் உள்ளதுடன், சிறு நீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.தமிழகத்தில், காங்கேய மாடுகள், 80 சதவீதம் வரை அழிந்து விட்டன. இதை அழிவிலிருந்து காக்க, நாட்டு மாடுகள் மூலம், அதிக பால் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் என, தோன்றியது.அதனால், தமிழகத்தில் எங்கு மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும், தவறாமல் பங்கேற்று, நல்ல காங்கேய மாடு வாங்கி வருவேன்.

மாட்டு வர்க்கத்தில், பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவு பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன், இனப் பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம், அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.இந்திய மாடுகளுக்கு, 20 வயது வரை ஆயுள் உண்டு. மாடுகள் வாங்கும் போது, தோல் மென்மையானதாகவும், எலும்பூட்டம் அதிகமுள்ளதாகவும், மடித்தோல் இறக்கமானதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.நான் மாடுகளுக்கு செயற்கைத் தீவனம் கொடுப்பதில்லை. மாவுச்சத்துள்ள பொருட்களை மாடுகளுக்கு உணவாக கொடுத்தால், பால் அதிகமாக சுரக்கும். நாட்டு மாடுகள் அதிக பால் கொடுக்க, தீவனமும் ஒரு காரணம்.
Thanks: Dinamalar

நாட்டு மாடுகளை சுற்றியிருக்கும் பன்னாட்டு அரசியல்


இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.

விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிகொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது என்பதால் நாட்டு மாடுகளின் கொலைகளம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது. இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்து மக்களிடம் நோயை விதைக்கும் உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளை திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்க துவங்கினர். நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில் போய் விட்டன. இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலப்பின பசுவின் பாலால் அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்ட சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது. கலப்பின பசுக்களுக்கு தீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது. தீவனதுக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடபட்டதால் உணவு பொருட்கள் விலையும் எகிறியது.பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமை புரட்சி என்ற விஷ புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வேர்மிகம்போஸ்ட், தொளுவுரம், கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள். இனி வெளிநாட்டு நிறுவனங்கள் விற்க போகும் கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.


பால் அல்ல மாடே கலப்படம்தான்!


குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு… நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு பெண்பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.

ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.


தமிழா-விஷ உணவுதான் உனக்கு விதி!



காவிரி பாயும் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை மூலம் மருந்து/ரசாயனம் இல்லா உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையான உண்மை அல்ல. சொன்னால் நம்ப முடிகிறதா..?? ஆனால் அதுதான் யதார்த்தம். 

ுறிப்பாக ஈரோடு நாமக்கல் மாவட்டங்கள் தாண்டியபின் காவிரி வரும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை விளைபொருட்கள் என்று சொல்லே பயன்படுத்தமுடியாது. தோலில் பட்டால் கொப்புளம் வருமளவு மோசமான சாய விஷ நீரை தாங்கிக்கொண்டு, போதாகுறைக்கு நொய்யல் மற்றும் காளிங்கராயன் விஷத்தையும் தாங்கிக்கொண்டு வரும் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது உரம் பூச்சிகொல்லிகளை விட மோசமான ரசாயன மூலக்கூறுகள் விளைபொருட்களுக்குள் ஏறிவிடுகிறது. இது மட்டுமில்லாது இந்த சாய விஷம் கலந்த காவிரி நீர் நிலத்தடி நீரிலும் கலந்து அதையும் கேடுத்துவிடுகிறது. இதுமட்டும் இல்லாமல் ஈரோட்டின் பின் வரும் எந்த மாவட்டங்களிலும் முறையான சுத்திகரிப்பு செய்தபின்னே காவிரியில் கலக்கும் படியான செயல்பாடுகள் இல்லை. 

கரூரிலும் ஜவுளி நிறுவனங்கள் புண்ணியத்தால் இதே விஷம் மீண்டும் கலக்கிறது. மேட்டூரை சுற்றி வந்தால் அங்கு எத்தனை கொடிய கெமிகல் ஆலைகள் உள்ளன என்பது தெரியும். அவற்றில் ஒன்றிரண்டை தான் இயற்கை ஆர்வலர்களால் தடுக்க முடிந்தது. இவை இல்லாமல் ஈரோடு, கரூர், நாமக்கல்லில் காகித சர்க்கரை ஆலைகளும், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளும் தங்கள் பங்குக்கு நீரை மாசுபடுத்துகிறார்கள். தற்காலங்களில் தமிழ்நாட்டின் நீர் உப்பு விகித்தத்திலும் கெமிக்கல் விகிதத்திலும் அபாயகரமான நிலையை தொட்டுள்ளதை அறிகிறோம்.

நிலத்தையும், இடுபொருட்களையும் மட்டும் ரசாயனமற்றதாக வைத்திருந்தால் போதாது, பயிர்கள் எடுக்கும் நீரும் விஷமற்றதாக இருக்க வேண்டும். நிலை இவ்வாறு இருக்க சுத்தமான இயற்கைவிவசாய விளைபொருள் என்பது பொய்யான வார்த்தைகளாகவே தெரிகிறது. பூரண விஷமற்ற உணவு வேண்டுமானால் அது ஈரோடு திருப்பூர் சாய தோல் ஆலை அதிபர்கள் கையில் தான் உள்ளது.


கேஸ் அடுப்பு தீமைகள்


பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது குரல் கொடுக்கும் நாம் வீட்டிலேயே அதே பிளாஸ்டிக்கின் மூலமான கச்சா எண்ணெய் வழியாக கிடைத்த பெட்ரோலியம் கேஸ்தான் பயன்படுத்துகிறோம்.

இது எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றி தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. புகை வருவதில்லை ஆனால் அதன் நீல நிற ஜ்வாலை ஆக்சிஜன் குறையால் முழுவதுமாக எரியாது இருக்கும் நிலையை காட்டுவதாகவே உள்ளது. முழுமையாக எரியாத பொருள் தீய ரெடிகல்ஸ் வெளியிடும் என்பது நிஜம். கச்சா எண்ணெய் மூலம் வரும் மிகவும் தீங்கான-ஆபத்தான கார்போனிய மூலப்பொருட்கள் தான் இந்த வாயுவிலும் வெளிவரும் என்பது திண்ணம். ஒரு வேலை அது தீங்கில்லை என்பதாகவே இருப்பினும், இந்த வாயுவை அரபு நாட்டில் இருந்து தயாரித்து, கப்பல்களிலும் லாரிகளிலும் எடுத்துவந்து வீட்டை அடையும்போது அதற்க்கு எவ்வளவு எரிபொருள் டீசலாகவும் நிலக்கரியாகவும் எரிக்கபட்டிருக்கும்..?? LPG வாயு சுவாசிப்பதால் நரம்பு, மூளை, இதய, நுரையீரல் கோளாறுகள் வருவதாகவும், கேன்சர் வாய்ப்புக்கள் மிக அதிகமா இருக்கிறது என்பதும் மருத்துவ செய்தி கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விறகு-சாண வரட்டி அடுப்புகள் சூழலுக்கு தீங்கற்றது-ஆரோக்கியமானது என்பதை அறிவோம். அதில் வெளிவரும் ஜ்வாலை முழுவதும் எரிந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். புகை வந்தாலும் மரப்பொருள் ஆவதால் சூழலை மிககுறைவாக தாக்கும் CO2 தான் வருகிறது. என் கிராமத்திலோ-முன்னோர்களோ ஆஸ்துமா வால் இறந்தவர் என்று எவரும் இல்லை. பல வீடுகள் வீட்டுக்கு வெளியே சமைப்பார்கள்.வீட்டுக்குள்ளும் சமைப்பவர்கள் புகைபோக்கி வைத்து இருப்பார்கள். எனவே புகையின் தாக்கம் என்பது மிக அரிதே.


நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..

நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..
----------------------------------

பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன. 
http://www.youtube.com/watch?v=9KMtQfjcJMo

இந்திய மாடுகளின் பெரிய கொலைக்களமான கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
http://www.youtube.com/watch?v=KN83hnfqSvI

பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.
http://www.rccsc.com.pk/

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு..
https://www.youtube.com/watch?v=48bPl4dgfks

இவை மட்டும் இல்லாது அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது..!