June 20, 2014
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.
தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த கட்டுரை